டாக்டர் அம்புஜம் பஞ்சநாதன் அரங்கேற்றம்
அக்டோபர் 2, 2011 அன்று டாக்டர் அம்புஜம் பஞ்சநாதன் அவர்களின் நாட்டிய அரங்கேற்றம் டொரன்ஸ், கலிஃபோர்னியாவில் உள்ள ஜேம்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் தியேட்டரில் நடந்தது. மல்லாரி ராக இறைவணக்கத்துடன் துவங்கியது நிகழ்ச்சி. அடுத்து பாபநாசம் சிவனின் ஸ்ரீரஞ்சனி ராக விநாயகர் துதிக்கு அழகாக ஆடினார். அடுத்து வந்தது ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி துதி. அதை தீக்ஷிதர் த்வஜாவந்தியில் அழகாக இயற்றி இருந்தார் என்றால் அதற்கேற்ப சிறப்பாக நடனமாடினார் அம்புஜம்.

நடனத்தில் மிகுந்த அக்கறையுடன் ஆட வேண்டிய, அபிநயம், நாட்டியம், தாளம் எல்லாம் சேர்ந்த வர்ணத்தில் சிறப்பான தேர்ச்சி பெற்று, ஒரு 16 வயதுப் பெண்ணின் உற்சாகத்துடன் சிறப்பாக அபிநயத்து ஆடினார் அம்புஜம். இடைவேளைக்குப் பிறகு சிவனின் 'நானொரு விளையாட்டு பொம்மையா'வுக்கு உருகும் வகையில் ஆடி முடித்தார். பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே' பதத்தில் ஒரு தாய் தன் வாத்சல்யத்தை ஒரு குழந்தையிடம் காண்பிப்பதைக் காண்பித்தார். தில்லானாவில் அழகிய அசைவுகள் கொடுத்து ஆடிக் கச்சேரியை நிறைவு செய்தார். வேத கிருஷ்ணனின் மிருதங்கமும், ஹம்சா ரகுவீரின் பாட்டும், விஜி ப்ரகாஷ் நட்டுவாங்கமும் அருமை.

இந்த அரங்கேற்றத்துடன் நிறுத்தி விடாமல் அம்புஜம் தொடர்ந்து ஆட வேண்டும். காரணம், இந்தக் கால இளைஞிகளுக்குச் சவால் கொடுக்க அவரால் இயலும் என்பதே!

இந்திராபார்த்தசாரதி,
டொரன்ஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com