கிளீவ்லாண்டில் கண்ணதாசன் விழா
அக்டோபர் 15, 2011 அன்று கவிஞர் கவியரசரின் நினைவு நாளை கிளீவ்லாண்டின் (ஓஹையோ) 'வடகிழக்கு ஓஹையோ தமிழ்ச் சங்கம்', பார்மா அரங்கில் நடத்தியது. சங்கத் தலைவர் மெய் ஜி. மெய்யழகன் வரவேற்றுப் பேசி, சிறப்பு உரையாளர் 'சொல்லின் செல்வி' உமையாள் முத்துவை அறிமுகப்படுத்தினார்.

விழா நடத்துனர் ஏழுமலை அப்பாச்சி, கவியரசருடனான தனது அனுபவத்தை முன்னுரையாகச் சொன்னார். பின் உமையாள் முத்து அவர்களின் தலைமை உரையுடன் விழா துவங்கியது. சங்கத்தின் அங்கமான 'தமிழருவி பேச்சார்வலர் மன்றம்', 'கவியரசு கண்ணதாசன் புகழுக்கு மிகவும் பெருமை சேர்ப்பது அவரது காதல் பாடல்களே! – தத்துவப் பாடல்களே!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தியது. தமிழருவியின் தலைவி ஜெயந்தி ரமணனும், ஆனந்த் தண்டபாணியும் காதல்தான் என்ற தரப்பிலும், தத்துவம்தான் என்ற தரப்பில் செந்தில் சௌரிராஜனும், பூங்கோதை ஜெயராஜ் ஆகியோரும் பேசினார்கள். நடுவர் உமையாள் முத்து தனது நகைச்சுவை கலந்த பாணியில் தத்துவம்தான் கவிஞருக்குப் புகழ் சேர்த்தது என்று தீர்ப்பளித்தார்.

பின்னர் சங்கத்தின் முத்தமிழ் நாடகக் குழு வழங்கிய '2050ல் கவியரசர்' என்ற சிறு நகைச்சுவை நாடகம் நடைபெற்றது. ஸ்வர்ணலதா மெய்யழகன் நாடகத்தை இயக்க சுந்தரக்கண்ணன் மாணிக்கம், சிவக்குமார் சுந்தரம், ஐஸ்வர்யா சிவக்குமார், மாலா அப்பாச்சி, கார்த்திகேயன் செங்கோடன் ஆகியோர் நடித்தனர்.

பட்டிமன்றம், நாடகம் இவற்றினிடையே கவியரசரின் பாடல்களை ஸாம் ராஜையா, ராகவன் கோபாலகிருஷ்ணன், ஹேமா சுரேஷ் ஆகியோர் சிறப்பாகப் பாடினார்கள். நிகழ்ச்சி, பொருளாளர் தினகரன் வடிவேல்ராஜனின் நன்றியுரைக்குப் பின் தேசியகீதத்துடன் நிறைவுற்றது.

மெய் மெய்யழகன்,
கிளீவ்லாண்ட்

© TamilOnline.com