GATS தீபாவளி கொண்டாட்டம்
நவம்பர் 5, 2011 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்க (GATS) தீபாவளிக் கொண்டாட்டம் லேனியெர் உயர்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெற்றது. காலை 11 மணிக்கு விழா துவங்கியது. பாட்டு, நடனம் எனச் சிறியவர்களும், பெரியவர்களும் போட்டி போட்டு நிகழ்ச்சிகளை அளித்தனர். சங்கத் தலைவர் முனைவர் இரவி பழனியப்பன் தலைமையிலான செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விருது வழங்கி கவுரவிக்கப் பட்டனர்.

தமிழ்த் தேனீப் போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகத்தின் (American Tamil Academy) தலைவர் முனைவர். அரசு செல்லையா பரிசு வழங்கினார். முனைவர் நிக்கோலஸ் ராஜா (Best Volunteer), மருத்துவர் இந்திரன் இந்திரகிருஷ்ணன் (Person of The Year), வெனில்லா கலை பார்த்திபன் (Youth of the Year) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2012ன் தலைவராக தங்கமணி பால்ச்சாமியும், புதிய செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப் பட்டு அறிமுகப் படுத்தப்பட்டனர்.

அட்லாண்டா மாநகரத்தின் முதல் இந்திய கான்சல் ஜெனரல் மேதகு அஜித் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சங்கத்தின் 30ம் ஆண்டு விழா மலரை அதன் ஆசிரியர் முனைவர் உதயகுமார் வெளியிட, அஜித் குமார் மற்றும் மலர்க்குழுவினர் பெற்றுக் கொண்டனர். பின்னர் வந்தது GATS சூப்பர் சிங்கரின் இறுதிப் போட்டி. விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் இரவி நடுவராக மற்ற நடுவர்களுடன் இணைந்து நடத்தியது சங்க வரலாற்றில் ஒரு மைல் கல். இளையவர்கள் பிரிவில் பிரணவ் சாமிநாதனும், பெரியவர்கள் பிரிவில் திவ்யா சுகுமாரும் இதில் வெற்றி பெற்றனர்.

உமா பாபா,
இரவி பழனியப்பன்

© TamilOnline.com