நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம்: குழந்தைகள் தின விழா
நவம்பர் 12, 2011 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் குழந்தைகள் தின விழாவை ஃபிராமிங்காமில் உள்ள கீப் உயர்நிலைப் பள்ளி அரங்கேற்றத்தில் கொண்டாடியது. வழக்கம்போல இந்த ஆண்டும் சிறுவர்/சிறுமியரின் வயதிற்கேற்ப மூன்று பிரிவுகளாகத் 'திருக்குறள் போட்டி' நடத்தி முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கான மாறுவேட அணிவகுப்பு மிக அருமை. முதன்முதலாக சூப்பர் சிங்கர் மெல்லிசைப் போட்டி அரங்கேறியது. ஜூனியர், சீனியர் சூப்பர் சிங்கரில் நல்ல குரல்வளம் கொண்ட குழந்தைகள் அழகாகப் பாடினர். முதல் சுற்றில் கடுமையான போட்டி இருந்ததால் நடுவர்கள் இரண்டாம் சுற்றில் வெற்றியை நிர்ணயம் செய்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

நெட்ஸ் தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவர் ரமேஷ் வெங்கட்ரமணி அனைத்து உறுப்பினர்களையும் சுவையாக அறிமுகப்படுத்தினார். முன்னாள் தலைவர்களான வித்யா கல்யாணராமன், பாலாஜி சதானந்தம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சிகளை மலர் செந்தில், தேவி சுந்தரேசன், நவீனா சண்முகம் ஆகியோர் சுவையாகத் தொகுத்து வழங்கினர்.

நெட்சின் பொங்கல் விழா பிப்ரவரி 2012 பற்றி அறிவிக்கப்பட்டது. உறுப்பினர் திருமதி. பமிலா வெங்கட் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

பமிலா வெங்கட்,
பாஸ்டன்

© TamilOnline.com