சிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தின விழா
நவம்பர் 19, 2011 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் குழந்தைகள் தின விழா, அரோரா பாலாஜி கோவில் கலையரங்கில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கோலாட்டம், திரையிசைப் பாடல்கள், நடனங்கள் என்று பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றன. நிகழ்ச்சிகளை ஆதவ், ராகா, மனிஷா, ப்ரணவ், ஆகாஷ், வந்தனா, விமிக், நிதின் ஆகியோர் தூய தமிழில் அழகாகத் தொகுத்து வழங்கினர். வெறும் இருபதே மாதங்கள் ஆன மழலை காவ்யா பீட்டர் Bumble Bee ஆக உருமாறிக் கலந்து கொண்ட மாறுவேடப் போட்டியில் பாரதியார் (தீபா ஆனந்தன், ரிஷி சுரேஷ்), முருகன் (நிதின் ராமசாமி, ரிஷப் ரங்கநாதன்), ஸ்ரீ கிருஷ்ணர் (வசந்த ரங்கநாதன்), கண்ணகி (மனிஷா முத்து), தமிழ் உழவர் (விக்னேஷ்), தமிழ் ஆசிரியர் (இனியா மணி) எனப் பலப்பல அவதாரங்களும் உருவெடுத்தன.

'கணினிப் புரட்சியால் இளைய தலைமுறையின் சிந்தனைத் திறன் வளர்கிறதா, தளர்கிறதா?' என்ற தலைப்பில் நடந்த பட்டி மன்றத்தில் முதன்முறையாக அரங்கேறிய சிகாகோ தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கௌதமன், நீலன், விமிக், திவ்யா, பார்வதி, நிறைமதி ஆகியோர் வளமான தமிழில் தத்தம் கருத்துக்களை எடுத்து வைத்து வாதம் செய்தனர். நடுவராக வீற்றிருந்தார் டாக்டர் சந்திரன். ரிஷப், நேயா, அஜய், சஞ்சனா, விஸ்வஜித், புவனேஸ்வரி, ராஜேஸ்வரி திவ்யா, அர்ஜுன், சுஷ்மிதா, மிருதுளா, ப்ரவீணா, சுதர்ஷ், ரித்திகா என்ற கானக் குயில்கள் மெல்லிசைப் பாடல்கள் பாடினர். சினோவ் மேபிள்டனின் இசைக்குழு தலைமையேற்ற இந்த நிகழ்ச்சியை ரேணுவும், அனுவும் தொகுத்து வழங்கினர்.

நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தனர் அருள் பாலு, லக்ஷ்மி ஆனந்தன், சாந்தி வேலு, சாக்ரடீஸ் மணிகண்டன், ரகுராம் ஆகியோர். நிர்வாகக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார் சங்கத் தலைவர் டோனி சூசை. பி.கே. அறவாழியைப் புதிய தலைவராகக் கொண்டு 2012-13 ஆண்டுகளுக்கான பொறுப்பேற்கும் நிர்வாகக் குழு அங்கத்தினர்களை வரவேற்று அவைக்கு அறிமுகமும் செய்து வைத்தார். நன்றி உரையுடன் விழா நிறைவுற்றது.

ரமிதா சந்திரா,
சிகாகோ

© TamilOnline.com