அட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு
கிறிஸ்துமஸ் என்றாலே விழாக் கோலமும், அலங்காரமும், பரிசுப் பொருட்கள் பரிமாறுவதும் முக்கிய நிகழ்ச்சிகளாகும். அட்லாண்டா தமிழ் சபை மக்களும் இந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளைத் தங்கள் ஆலயத்தில் கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார்கள். சிறு பிள்ளைகளையும் கையில் பிடிக்க முடியுமா? அவர்களுக்கும் தான் ஆனந்தம். அதிலும் கிறிஸ்துமஸ் தாத்தா தரும் பரிசுப் பொருளைப் பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்பில் சில சிறுவர்கள் தூங்கவே மாட்டார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா வடதுருவத்திலிருந்து எப்படி வருவார்? வீட்டிற்குள்ளே எந்த வாசல் வழியாய் வருவார்? என்ற கேள்விகளுடன் பரபரப்போடு இருப்பார்கள்.

நவம்பர் மாதம் 26ம் தேதி சனிக்கிழமை தொடங்கி நன்றியறிதலின் (Thanksgiving) நாட்கள் முடிந்தவுடன் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலை நேரங்களில் வீடு வீடாகப் போய் சபை போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களும் சபையாரும் கிறிஸ்துமஸ் துதிப்பாடல்களைப் (Christmas Carols) பாடி சபைக் குடும்பங்களை மகிழ்வித்து கிறிஸ்து ஏன் பிறந்தார் என்ற நற்செய்திகளைக் கூறி உற்சாகப்படுத்துவார்கள். நீங்கள் அட்லாண்டா பெருநகரில் வசிக்கும் தமிழராக இருப்பீர்களானால், இந்தச் சிறப்பு பாடல்குழுவினர் உங்கள் இல்லங்களுக்கு வர விரும்பினால் சபை போதகரைக் கீழே தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வருடமும் குடும்பப் பாடல் ஆராதனை (Family Sing Song Service) நிகழ்ச்சி குடும்பத்தினரின் திறமைகளையும் இறைவன் அருளிய தாலந்துகளையும் வெளிப்படுத்தும் வண்ணமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் பக்தி பாடல்களைப் பாடி இறைவனைப் போற்றும் நிகழ்ச்சி டிசம்பர் 11ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு அட்லாண்டா தமிழ் சபை தேவாலயத்தில் நடைபெறுகின்றது. பங்குபெற விரும்புவோர் போதகரை கீழே தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

அட்லாண்டா தமிழ் சபையின் ஞாயிறு பள்ளி மாணவ மாணவியரின் தாலந்துகளையும் திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் நோக்கோடு கலை நிகழ்ச்சியை ஞாயிறு பள்ளி ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியைகளும் தயாரித்து இயக்கும் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் (Christmas Children Program) டிசம்பர் 18ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது. முடிவில் கிறிஸ்துமஸ் தாத்தா வந்து எல்லா சிறு பிள்ளைகளுக்கும் வெகுமதிகளை அளிப்பார்.

கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக டிசம்பர் 25ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை (Christmas Service) நடைபெறும். அதில் போதகர் பால்மர் பரமதாஸ் அவர்கள் விசேசச் செய்தி அளிப்பார்கள். பாடல்குழுவினர் சிறப்புப் பாடல்களைப் பாடி சபையினரை கிறிஸ்துமஸ் நாளின் அதிசய உணர்வுகளுக்குள் அழைத்துச் செல்லுவார்கள். மதியம் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்படும். நீங்களும் உங்கள் பிள்ளைகளுடன் வந்து பங்கு பெறுங்கள்.

2011ம் வருடத்தை ஆலயத்தில் தொடங்கிய நாம், இந்த வருடத்தை ஆலயத்தில் முடித்து, புதுவருடத்தை ஆலயத்தில் ஆரம்பிக்கும் வண்ணம் டிசம்பர் மாதம் 31ம் தேதி சனிக்கிழமை இரவு 10:30மணிக்கு விசேசித்த காத்திருப்பு ஆராதனை (Watchnight Service) நடைபெறும். கடந்த வருடம் பூராவும் காத்த தேவனுக்கு வருடத்தின் கடைசியில் நன்றி செலுத்தி விட்டு புது வருடத்தை தேவனுடைய சந்நிதியில் தொடங்குவதே இந்த ஆராதனையின் நோக்கம். எனவே டிசம்பர் 31ம் தேதி சனிக்கிழமை இரவு 10:30 மணி ஆராதனைக்கு குடும்பமாக வாருங்கள்!

2012ம் வருடத்தின் முதல் நாள் ஜனவரி 1ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆராதனை காலை 10 மணிக்கு ஆலயத்தில் நடைபெறும். மேலும் விபரங்களை சபையின் இணைய தளம் www.atlantatamilchurch.org மூலம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: pastor@atlantatamilchurch.org

போதகர் பால்மர் பரமதாஸ்,
அட்லாண்டா

© TamilOnline.com