காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு உரிய நியாயம் வழங்கக் கோரியும் மார்ச் 18, 2007 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
முன்னதாக இறுதி தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. முடிவில் தமிழகத்துக்கு பாதகமான அம்சங்களைக்கண்டறிந்து இதுகுறித்து நடுவர் மன்றத்தில் விளக்கம் கேட்கப்படும்; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதற்கிடையில் அ.தி.மு.க மற்றும் ம.தி.மு.க எம்.பிக்கள் கூட்டாக தில்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரடியாகச் சந்தித்து இறுதித் தீர்ப்பை அரசிதழில் உடினடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். சந்திப்பின் போது அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கையெழுத்திட்ட மனு ஒன்றையும் பிரதமரிடம் அளித்தனர்.
இதுகுறித்துக் கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி, இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால், தீர்ப்பில் உள்ள பாதங்கள் குறித்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு பறிபோகும் என்றார். மேலும் அவர் இறுதித் தீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட வற்புறுத்துவது சட்டப்படி சாத்தியமில்லை என்றும் கூறினார். முதல்வரின் இந்த கருத்தைக் கடுமையாக மறுத்த எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா, அரசிதழில் வெளியிடுவதற்கும் மேல்முறையீடு செய்வதற்கும் தொடர்பில்லை என்று கூறினார்.
இதற்கிடையில் கர்நாடக மாநில சட்டப்பேரவையில் தேசிய நதிநீர்க் கொள்கை வகுக்கப்படும் வரை காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது என்று ஒருமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு சார்பில் காவிரி நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யாதது, தீர்ப்பை அரசிதழில் வெளியிட எந்த நடவடிக்கையையும் எடுக்காதது, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்யதாது போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, இப்பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து வருகின்றன என்று கடுமையாக குற்றம் சாட்டினார். இவற்றை அடுத்து வந்ததுதான் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம்.
உண்ணாவிரதத்தில் அவருடன் அ.தி.மு.கவைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனர் ந. சேதுராமன் தொடங்கிவைத்தார். அன்று மாலை ம.தி.மு.க பொதுசெயலர் வைகோ ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதியில் பேசிய வைகோ, 'மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள மக்கள் விரோத அரசுகளைத் தூக்கி எறிவதற்கான போராட்டத்தின் தொடக்கம்தான் அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
மூன்று மாத காலம் முடிவடைவதற்கு முன் பன்மாநில நதி நீர்த்தாவா சட்டப்பிரிவுப்படி நடுவர் மன்றத் தீர்ப்பினை அரசிதழில் வெளியிடும்படி கேட்பது பொருத்தமாக இருக்காது என்று பிரபல வழக்கறிஞர்கள் பராசரன் மற்றும் ராவ் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்நிலையில் காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக விரைவில் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச உள்ளதாக கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி பத்திரிக்கையாளர்களிடையே கூற, அதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தேவையில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: கேடிஸ்ரீ |