தலையில் ஒரு குட்டு
கேரளாவில் திருச்சூரில் என் அக்கா வின் வீட்டுக்கு பக்கத்து வீடு பிரபாகரன் எஞ்சினியர் வீடு. நாங்கள் வருடா வருடம் குருவாயூர் செல்லும் போதெல்லாம் திருச்சூர் அக்கா வீடும் வடக்கு நாதர் கோவிலும் மறக்க மாட்டோம். அதுபோல் பக்கத்து வீட்டுப் பிரபாகரன் அவர்களின் அம்மா அப்பாவையும் எல்லோ ரும் பார்த்து வருவோம். பிரபாகரன் அமெரிக்காவில் வசிப்பவர். இதனால் அவரை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. நாங்களும் ஆறு மாதத்துக்கு அமெரிக்காவில் எங்கள் மகன் வீட்டில் இருப்பவர்கள்தான் என்றாலும் பிரபாக ரனைப் பார்த்ததில்லை.

இந்தமுறை குருவாயூர் முடிந்து அக்கா வீடு சென்றபோது பிரபாகரனின் அம்மா செளந்தரி எங்களைச் சாப்பிடக் கூப்பிட்டார். பிரபாகரும் அன்று அதிசயமாய் அங்கு இருந்தார். அழகான தோட்டம். வயல் சூழ்ந்த இடத்தின் நடுவே அமைந்த அவர்கள் வீடும் கேரளாவில் தனிச்சிறப்பு.

தோட்டத்து வாழை இலையில், அடை, அவியல், ஓலன், பொரியல், பப்படம் என்று தேங்காய் எண்ணெய்ச் சமையல் பிரமாதமாக இருந்தது.

'டேய்! பிரபா. இவர் டாக்டர். இவர் பையன்களும் அமெரிக்காவில்தான் இருக் காங்க. இவங்க சென்னை ஆறு மாதம் அமெரிக்கா ஆறு மாதம் என்று இருக்கறாங்க' என்றார் செளந்தரி.

அதே சமயம் அவர் என்னைப் பார்த்து 'என்னங்க, இனிமே பிரபா இங்குதான் இருப்பான். அமெரிக்கா போக மாட்டான்' என்றார்.

நாங்கள் வியந்து போய், 'ஏன்.. என்னாச்சு?' என்று கேட்டோம்.

ஏனெனில் கம்ப்யூட்டர் எஞ்சினியரான பிரபாகரன் அமெரிக்கா சென்று பத்து வருடம் ஆச்சு. அங்கேயே உத்தியோக உயர்வு, சொந்த வீடு, கல்யாணம், இரண்டு ஆண் குழந்தைகள் என்று வாழ்ந்தவர். ஏன் இப்படி முடிவு எடுத்தார்? ஒருவேளை அம்மா, அப்பாவுக்கு வயதானதால் கூடவே இருக்க இப்படி முடிவு எடுத்தாரா? அவரையே கேட்டோம்.

அவர் சொன்ன பதில்... வித்தியாசமான முடிவு அது.

'அமெரிக்காவில் ஓஹையோ ஸ்டேட்டில் வசித்தான் பிரபாகரன். ஓமனா அவரது அழகான மனைவி. ஒபராயா கவுண்டி ஆஸ்பத்திரியில் ஹெட் நர்சாக இருந்தாலும் கணவனுக்கு ஏற்ற நல்ல மனைவி. இரண்டு ஆண் குழந்தைகள். சந்திரன், இந்திரன் என்று பெயர். பெரியவனுக்கு எட்டு வயது. சின்னவனுக்கு ஆறு வயது. இருவரும் ஸ்கூல் சென்று கொண்டிருந்தனர்.

'இதில் வேடிக்கை என்னவென்றால் பையன்கள் இருவரும் வீட்டில்கூடத் தமிழோ, மலையாளமோ பேசாமல் அமெரிக்கன் இங்கிலீஷில் தான் பேசுவார்களாம். பிரபாகரனும், ஓமனாவும் நிறையச் சொல்லி இருக்கிறார்கள். 'டேய்! நாமொன்னும் அமெரிக்கன் இல்லை. தாய்நாடு இந்தியா தான். நம் நாட்டுக்குப் போனால் என்ட அச்சன், அம்மே, சேச்சிகூட நீங்கள் மலையாளத்தில் சம்சாரிக்கணும். இல்லே, தமிழ்லே சம்சாரிக்கணும் குட்டிங்களா' என்று நிறையத் தடவை சொல்லியும் கேளாமல் பசங்கள் இருந்திருக்கிறார்கள்.

வீட்டில் பூஜையறை பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை. கோயிலுக்குச் சென்றால் 'வரமாட்டேன்' என்று காரிலேயே உட்கார்ந்து கொள்வார்களாம்.

எட்டு வயசிலேயே இப்படி இருந்தால் வளர்ந்து இவர்கள் வாலிபர் ஆனால் என்னாவது?

அவர்கள் பயந்தபடியே ஒருநாள் ஆகி விட்டது.

அன்று ஒரு சனிக்கிழமை. பிரபா அன்று ஆபீஸ் லீவு. ஓமனாவும் லீவு. ஏதோ விஷமம் செய்தான் என்று ஓமனா கரண்டியால் சின்னவன் இந்திரனை ஒரு போடு போட்டிருக்கிறாள். அந்த இடத்தில் நெற்றியில் ஒரு வீக்கம். இது குழந்தைகள் கீழே விழுந்து விட்டாலோ அல்லது தலையை இடித்துக் கொண்டாலோ கூட இப்படி வீங்கும்.

பெரியவன் இந்திரன் இதை உடனேயே போலீஸ் நம்பருக்கு போன் செய்யப் போலீஸ் வந்தது. சின்னவனை ஆம்புலன்சில் ஆஸ்பத் திரிக்கு அனுப்பிவிட்டு பிரபாகரனையும், ஓமனாவையும் கைது செய்து அழைத்துக் கொண்டு போயினர். சிறை, கோர்ட், கேஸ் என்று ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவு செய்தபின் வெளியில் வந்தனர்.

வந்ததும் பிரபாகரன் செய்த முதல் காரியம்.

வேலையை ரிசைன் செய்துவிட்டு, வீட்டை விற்றுவிட்டு, அமெரிக்காவில் பிறந்ததால் அமெரிக்க சிட்டிசனான அந்த இரு பிள்ளைகள¨யும் மனைவியோடு அழைத்துக் கொண்டு இந்தியா புறப்பட்டு விட்டார். பிரபாகரனின் நண்பர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. மூட்டை முடிச்சோடு இந்தியா திரும்பிவிட்டார்.

சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியதும் பிரபா செய்த முதல் வேலை இந்திரன், சந்திரன் இருவரையும் அருகில் கூப்பிட்டு தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து அவன் கையில் செல்போனை கொடுத்து, ''இந்தாடா! இதான் இங்குள்ள போலீஸ் நம்பர். இதுக்கு போன் செய்! செய்து போலீசைக் கூப்பிடு!'' என்றதுதான்.

பிரபா செய்தது சரியா தவறா என்று சொல்ல எனக்கு உரிமையில்லை. ஆனால் என் கருத்து சூப்பர் பிளான்! பிரபாவின் தனிப்பட்ட இமேஜை பாதித்த விஷயம், ஆம் அவர் பையனாலேயே. ஆனால் இதன் பாதிப்பு அந்த பிள்ளை அப்பாவை எதிர்க்கும் எதிரி போலும் ஆகலாம். சின்னப் பையன் என்பதால் நல்லவனாயும் ஆகலாம்.

ஆனால் என் பிரார்த்தனை 'ஹே குருவாயூரப்பா! இந்த பிள்ளைகள் நல்லவர் களாகவே இருக்கட்டும்' என்பதுது¡ன்.

சசி ரேகா

© TamilOnline.com