ஒய்.ஜி. மகேந்திரனின் 'வெங்கடா3'
தமிழகத்தில் பிரபலமான 'யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்' (UAA) நாடகக்குழு தனது 61-ம் படைப்பான 'வெங்கடா3' நாடகத்தை அமெரிக்காவில் அரங்கேற்றியது. வழக்கமாக, தனது சென்னை நாடக குழுவினருடன் அமெரிக்கா வந்து நாடகம் வழங்கும் ஒய்.ஜி. மகேந்திரன், இந்த முறை முழுக்க முழுக்க சிகாகோ நாடகக் கலைஞர்களுடன் சேர்ந்து இந்த நாடகத்தை சிகாகோ, மில்வாக்கி ஆகிய இடங்களில் மேடையேற்றினார்.

'ஹ்யூமன் க்ளோனிங்' என்ற அறிவியல் நுணுக்கத்தை மையமாகக் கொண்ட வேங்கடாத்ரீ ஒரு வித்தியாசமான முயற்சி. மனிதர்களை க்ளோனிங் செய்வதிலுள்ள சாதக-பாதகங்களை நகைச்சுவை ததும்பக் கொடுத்திருக்கும் நாடகாசிரியர் சித்ராலயா ஸ்ரீராமும், இயக்குனர் ஒய்.ஜி. மகேந்திரனும் பாராட்டுக்குரியவர்கள்.

மத்தியத்தர குடும்பத் தலைவரான வேங்கடாத்ரீக்கு, குடும்பச்சுமையை சமாளிப்பதற்காக இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம். வேலைப்பளுவோடு, குடும்பப் பிரச்சனைகளும் சேர்ந்து கொள்ளவே, விழி பிதுங்கி நிற்கும் வெங்கடாத்ரீக்கு வழிகாட்டியாக வந்து சேர்கிறார் அவரது சித்தப்பா விஞ்ஞானி தோத்தாத்ரீ. வெங்கடா-3யைப் போலவே, வெங்கடா-1, வெங்கடா-2 என இரண்டு க்ளோன்களை அவர் உருவாக்கித் தர, அவற்றை வீட்டிலும், வெளியிலும் உலவவிடும் வெங்கடாத்ரீக்கு முளைக்கும் புதிய பிரச்சனைகளும், ஆள் மாறாட்டக் குழப்பங்களும், உள்மனப் போராட்டங்களுமே இந்த நாடகம்.

வெங்கடாத்ரீ மற்றும் அவரது இரண்டு க்ளோன்களாக மூன்று வேடங்களிலும் நடித்த ஒய்.ஜி. மகேந்திரனின் நடிப்பு அபாரம். கலையுலகில் பொன்விழாக் காணும் மகேந்திரனின் நடிப்பு, அவர் மூன்று வேடங்களை மாறி மாறி வித்தியாசப்படுத்திக் காட்டியதில் வெளிப்பட்டது. வெங்கடா-3 செய்யும் குழப்பங்களிலும், குளறுபடிகளிலும் பங்குகொள்ளும் அவரது தோழர் ஆரோக்கியசாமியாக நடித்த மணிகண்டனின் நடிப்புக்கு ஒரு பெரிய சபாஷ். அவர் அப்பாவியாக கேட்கும் கேள்விகளும், போடும் திட்டங்களும் சிரிப்புக் கொண்டாட்டம்தான். அலுவலக மேனேஜராக நடித்த சிகாகோ ரங்காவின் நடிப்பு அபாரம். க்ளோன்கள் மாறி மாறி வந்து மேனேஜரைக் குழப்பும் காட்சிகளில் அரங்கத்தில் சிரிப்பு வெடிகள். விஞ்ஞானியாகவும், தொலைக்காட்சித் தயாரிப்பாளராகவும் இரு வேடங்களில் நடித்த ராஜ் வரதனும், மாமனாராக நடித்த ஸ்ரீராமும் அருமையாக நடித்தனர். மனைவியாக வந்த ரஞ்சனியும், வம்பு மாமியாக நடித்த தீபாவும் நிறைவாகச் செய்தனர். சில காட்சிகளில் மட்டுமே தோன்றி அப்ளாஸை அள்ளிச் சென்றார்கள் ரமேஷ், ரகுவீர், அர்விந்த், மற்றும் மில்வாக்கி கார்த்திக்.

நாடகத்தின் அரங்க அமைப்பும் (ரமேஷ், அர்விந்த், ஸ்ரீராம்), ஒளி-ஒலி அமைப்பும் (கலை ரவி) சிறப்பாக இருந்தன. க்ளோனிங் மெஷினிலிருந்து உருவாகும் காட்சி, மூன்று க்ளோன்களும் ஒன்றாகத் தோன்றும் காட்சிகளின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இந்த நாடகத்தின் மற்றுமொரு ஹைலைட்.

இது சிகாகோ கலைஞர்களுக்கு ஒரு புதிய அனுபவம். தொலைக்கூட்டம் மூலம் முதல்கட்ட ஒத்திகை பார்த்த பின்பு, ஒரே வாரம் மகேந்திரனுடன் நேரடி ஒத்திகை பார்த்து மேடை ஏறியது ஒரு சாதனை என்றே சொல்லலாம். ஒருங்கிணைத்த ரங்காவும் அவரது குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள். இந்த நாடகத்தின் ஏற்பாடுகளை சிகாகோ ரகுராமன் நிறைவாகச் செய்திருந்தார்.

வித்யா,
சிகாகோ

© TamilOnline.com