இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். ஷாலினி தூய தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி சூர்யாவுக்கும் கிரணுக்கும் எடுத்துக் கூறி இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு விண்ணப்பிக்கிறாள். சூர்யாவும் கிரண், ஷாலினி இருவருடன் அக்வாமரீன் என்னும் அந்நிறுவனத்துக்குச் சென்று அங்கு சந்தித்த யாவ்னா என்ற இளம் பெண்ணை, அவளுடைய ஓட்டப் பயிற்சி, வரவேற்பறையின் கலையமைப்பு ஆகிவற்றைக் கூர்ந்து கவனித்து, கணித்து தன் திறனில் நம்பிக்கை பெறச் செய்கிறார். பிறகு யாவ்னா மூவரையும் ஆராய்ச்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்று பல தரப்பட்ட உப்பகற்றல் நுட்ப சாதனங்களைப் பற்றி விவரிக்கிறாள். ஆவியாக்கல் (distillation), எதிர்ச் சவ்வூடு பரவல் (reverse osmosis) போன்ற எளிதான பழம் நுட்பங்களைப் பற்றிக் கூறிவிட்டு புதுநுட்பங்களைப் பற்றி விவரிக்க ஆரம்பிக்கையில்...
*****
சென்னையிலேயே பயன்படுத்தப்படும் குறைவெப்ப உப்பகற்றல், அணு மின்நிலையங்களில் வெளிப்படும் வெப்பத்தையும் பயன்படுத்தி தூய தண்ணீர் தயாரித்தல் போன்ற வியத்தகு விஷயங்களை யாவ்னா விவரித்ததும், சூர்யா தற்போதைய புதிய தூய தண்ணீர் உற்பத்தி நுட்பங்களைப் பற்றியும் அவர்கள் நிறுவனம் அதில் என்ன செய்கிறது என்று கூறவும் தூண்டவே, அவற்றைப் பற்றிக் கூற திறந்த வாயை, அப்போது உள்ளறையிலிருந்து ஆராய்ச்சிக் கூடத்துக்குள் நுழைந்த உருவத்தைப் பார்த்து படக்கென்று மூடிக் கொண்டு, பிறகு தன் நிறுவனர் தாமஸ் மார்ஷே வந்து விட்டார், அவர்தான் அவற்றைப் பற்றி விவரிக்கச் சரியானவர் என்று பரபரப்பாகக் கூவினாள்!
உள்ளே நுழைந்த தாமஸ் மார்ஷ் மற்றவர்களை சுற்றிப் பார்த்து மேலும் கீழுமாக நோட்டம் விட்டார். அவரைப் பதில் நோட்டம் விட்ட சூர்யா, கிரண், ஷாலினி மூவருக்கும் அவரது தோற்றம் பிரமிப்பளிப்பதாக இருந்தது. தூயநீர் ஆராய்ச்சிக் கூடத்தின் நிறுவனரான தாமஸ் மார்ஷ், கடோத்கஜனையும் தோற்கடிக்கும் ஆஜானுபாகுவான உடல்வாகு கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், வெள்ளை வெளேரென்று பளபளத்த, சற்றே நீளமான கேசமும் அவர் அவ்வப்போது நீவி விட்டுக் கொண்டிருந்த தாடியும் பெரிய மீசையும், அவர் அணிந்திருந்த தங்க விளிம்பு கொண்ட கண்ணாடியும் அவரை ராஜ களையுடன் கூடிய விஞ்ஞானியாகக் காட்டின.
அவரது தோற்றத்தைக் கண்டு வியந்த கிரண் ஷாலினியிடம் முணுமுணுத்தான், "இவர் என்ன வர்ஜின் குழுவோடத் தலைவர் ரிச்சர்ட் ப்ரான்ஸனை சூப்பர் ஸைஸ் பண்ணிட்டா மாதிரின்னா இரூக்கார்?" ஷாலினி அவனை "உஷ். சும்மா இரு, அவருக்குக் கேட்டுடப் போறது" என்று கண்டித்தாள். ஆனாலும் யாவ்னாவுக்குக் கேட்டு விடவே, அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவர்கள் மூவரையும் தாமஸ் மார்ஷுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
தாமஸ், தன் உருவத்துக்கு ஏற்றாற் போலவே, கை குலுக்கும்போது கஜகம்பீரமாகப் பெரும் அழுத்தத்துடன் குலுக்கினார். சூர்யா அந்தக் குலுக்கலின் அழுத்தத்தைச் சற்றே முகபாவம் மாறினாலும் முறுவலுடன் சமாளித்துக் கொண்டார். ஆனால் அதற்குத் தயாரில்லாத கிரணோ கையை விடுவித்துக் கொண்டு தாமஸின் பின்பக்கம் அவசரமாகப் போய்க் கையை உதறிக்கொண்டு ஒரு சிறிய நடனமே ஆடிவிட்டான்! யாவ்னா சிரிப்பை அடக்கிக் கொள்ளமுடியாமல் களுக்கென்று ஒலியெழுப்பவும், தாமஸ் அவளைக் ஒரு கணம் கேள்விக் குறியுடன் பார்த்துவிட்டு ஷாலினிமேல் தன் கவனைத்தைத் திருப்பினார்.
கிரணுக்கு ஆன கதியைக் கவனித்து விட்ட ஷாலினி உள்ளுக்குள் பல்லைக் கடித்துத் தயாரித்துக்கொண்டு தயக்கத்துடன் கையை நீட்டினாள். ஆனால் தாமஸோ ஒரேயடியாக மாறி அவள் கையை தன் பெரும் உள்ளங்கைகளுக்குள் மென்மையாக எடுத்துக்கொண்டு தலையை மெல்லத் தாழ்த்தி, "இந்த ஆராய்ச்சிக் கூடமே உங்கள் வருகையால் பொலிவேறியுள்ளது!" என்று கூறவே, ஷாலினி நாணம் கலந்த முறுவலுடன் நன்றி முணுமுணுத்தாள்!
கிரண் ஷாலினியிடம் வலியோடு உறுமினான். "ராட்சஸன்! பாரு என் கையைப் போட்டு பயங்கரமா நசுக்கிட்டு உன் கையை மட்டும் லேசாத் தடவி வழியறான்!". ஷாலினி அவனை முறைத்து மீண்டும் அடக்கினாள்.
சூர்யா நசுக்கப்பட்ட தன் வலக்கையை இடக்கையால் தடவி விட்டுக்கொண்டே தன் கூரிய பார்வையை தாமஸ்மேல் தீர்க்கமாக வைத்து, தனக்கே உரித்தான அதிர்வேட்டு ஒன்றை எடுத்து வீசினார். "உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மிஸ்டர் மார்ஷ். உங்கள் வரவேற்பறையில் நீங்கள் அமைத்திருக்கும் விஞ்ஞான பூர்வமான, அறிவார்த்தமான கலையமைப்பு பிரமாதம். நீங்கள் வியட்நாமில் அமெரிக்காவுக்காகப் படையில் சேவை செய்து, அங்கிருந்து இரண்டு குழந்தைகளையும் தத்து எடுத்திருப்பது உங்கள் நாட்டுப் பற்றோடு கலந்த மனித நேயத்தையும் காட்டுகிறது."
ஷாலினியிடம் குழைந்துவிட்டு புன்னகையுடன் இருந்த தாமஸின் முகபாவம் அதிர்ச்சியில் மாறி பிரமிப்பையும் ஓரளவு பயத்தையும் கூடக் கலந்து காட்டியது. ஓரிரு முறை ஏதோ சொல்வதற்காக வாயைத் திறந்தவர் வார்த்தைகள் வெளிவராமல் திணறி மீண்டும் மூடிக்கொண்டார்.
அப்படியே பல கணங்கள் அமைதியில் கடந்தது. இறுதியாக சுதாரித்துக் கொண்ட தாமஸ் தடுமாற்றத்துடன் வினாவினார். "இந்த விஷயம் எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? என் சொந்த, குடும்ப விவகாரங்கள்... யாருக்கும் தெரியாமல் நல்லா மறைச்சு வச்சதா நினைச்சேனே!"
சூர்யாவின் யூகசக்தியை ஏற்கனவே தன் விஷயத்தில் உணர்ந்திருந்த யாவ்னாவும் வியப்புடன் பார்த்தாள். தனக்கே தெரிந்திராத தாமஸின் சொந்த விஷயங்களைப் பற்றிச் சூர்யா பிட்டுப் பிட்டு வைத்ததைக் கண்டு எப்படி அவருக்குத் தெரிந்திருக்க முடியும் என்ற பிரமிப்புடன் அடுத்து என்ன நடக்கிறது என்று ஆவலுடன் பார்க்கலானாள். சூர்யாவைப் பற்றி நன்கு அறிந்திருந்த ஷாலினியும் கிரணும், அவர் இந்த விஷயங்களை எப்படி யூகித்தார் என்னும் விளக்கத்தை வழக்கமான ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
தாமஸோ குழப்பமும் பிரமிப்பும் மாறி கோபத்துக்கு இடம் தரவே உஷ்ணத்துடன் தொடர்ந்தார். "இதோ பாருங்க சூர்யா, என் தொழில் துறைக்கான பிரச்சனைக்கு உதவி செய்வீங்கன்னுதான் நான் யாவ்னா சொன்னதுக்கு சம்மதிச்சு உங்களை கூப்பிட்டேனே ஒழிய இந்த மாதிரி என் தனிப்பட்ட குடும்ப விஷயங்களைப் பத்தி முன்கூட்டியே என்னைக் கண்காணிச்சு உளவு வேலையெல்லாம் பார்க்கறத்துக்காக இல்லை. சே! ஏன் இப்படி..." என்று குமுறிக் கொண்டே போனவரை சூர்யா கையை உயர்த்திக் காட்டித் தணித்தார். சூர்யாவின் நேர்மை பொலிந்த, அமைதியான முகபாவமும் படபடப்பின்றி அவர் செய்த அமைதி சைகையும் தாமஸை மௌனமாக்கின.
சூர்யா விளக்கலானார். "நான் உளவு வேலையெல்லாம் செய்யலை மிஸ்டர் மார்ஷ். நீங்க எங்க வசிக்கிறீங்கங்கறது கூட இன்னும் எனக்குத் தெரியாது. இங்க இருக்கிற சில விஷயங்களைக் கவனிச்சு அதோட என் கணிப்பு மற்றும் யூகங்களையும் சேர்த்துத்தான் உங்களைப்பத்தி புரிஞ்சிகிட்டுப் பாராட்டினேன்."
ஆனால் தாமஸுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. "என்னைப் பார்த்த சில நொடிகளுக்குள்ள எப்படி இந்த மாதிரியான ரகசியங்களை நீங்க கணிக்க முடியும்? என்னால் துளிக்கூட நம்ப முடியலை. சரி. உங்களுக்கு ஒரு சான்ஸ் தரேன். எப்படின்னு நீங்க விளக்குங்க பார்க்கலாம். அந்த விளக்கத்தால எனக்கு உங்க யூகசக்தி மேல நம்பிக்கை வந்துதுன்னா நாம தொடரலாம். அப்படி இல்லைன்னா, நான் உங்களை வெளியில தள்ள வேண்டி வரும்" என்றார்.
கிரண் பதிலுக்கு ஆக்ரோஷத்துடன், "யாரைப் பாத்து என்ன சொல்றீங்க மிஸ்டர் மார்ஷ்? கொஞ்சம் அளந்து பேசுங்க..." என்று பொங்க ஆரம்பிக்க, ஷாலினியும் கூட கோபத்துடன் எதோ கூற ஆரம்பித்தாள். சூர்யா தன் இரண்டு கைகளையும் அமர்த்தி அவர்களை அடக்கிவிட்டு, "மிஸ்டர் மார்ஷ், உதவ வந்துட்டு, சும்மா விட்டு ஓடிடறது எனக்குப் பழக்கமில்லை. உங்க அறைகூவலை நான் ஏத்துக்கறேன். என் விளக்கத்துக்கு அப்புறமும் உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா ஒரு பிரச்சனையும் எங்களுக்கில்லை, நாங்க விலகிக்கறோம்" என்று ஒத்துக்கொண்டு மேலே தன் கணிப்புக்களை விளக்கலானார்.
"தாமஸ், நீங்க் பார்க்கறத்துக்கே மிகவும் கவனத்தை ஈர்க்கும் வகையான தோற்றமுடையவரா இருக்கீங்க. ஆனாலும் உங்க தோற்றத்தைவிட என் கவனத்தை உடனே கவர்ந்தது உங்க கழுத்தைச் சுத்தியிருக்கற, தங்கச் சங்கிலியில் கோர்த்து ஊஞ்சலாடிக்கிட்டிருக்கற உங்க லாக்கெட்தான். அது சாதாரண லாக்கெட் இல்லைங்கறதை அதைப் பார்த்தவுடனே தெரிஞ்சுக்கிட்டேன்."
சூர்யா விளக்கத்தை ஒரு கணம் நிறுத்தவும், மற்றவர்கள் ஆர்வத்துடன் அந்த லாக்கெட்டைப் பார்த்துக்கொண்டு அவர் கூறுவதைக் கேட்டனர். தாமஸ் தன் லாக்கெட்டை ஒரு கையால் தொட்டுக்கொண்டு கண்கள் ஆர்வத்தில் குறுகினாலும், சற்றும் குறையாத அவநம்ம்பிக்கையோடு "ஊம்..." என்று மேலே தொடருமாறு மறு கையால் சைகை செய்தார்.
சூர்யா தலையாட்டிவிட்டுத் தொடர்ந்தார். "உங்க லாக்கெட் மத்த லாக்கெட்டுகள் மாதிரி ஒரே வட்ட அறையோட இல்லை. அதுல மூணு வட்ட அறைகள் ஒரே மூடிக்குப் பின்னாடி இருக்கு. அதோட மூடியின் கொக்கி கொஞ்சம் லூஸாவும் இருக்கு. அது நீங்க நடக்கறப்போ, குனியறப்போ எல்லாம் திறந்து மூடுது." தாமஸின் கவனம் லாக்கெட்மேல் செல்லவும் சூர்யா மீண்டும் விளக்கத்தை நிறுத்தினார்.
தாமஸ் ஆச்சர்யத்தோடு லாக்கெட்டை எடுத்துப் பார்த்தார். "அட, லூஸாத்தான் இருக்கு. நேத்து ராத்திரி எடுத்து வைக்கறப்போ மூடி லேசா அழுந்திடுச்சு. அதுல லூஸாயிடுச்சு போலிருக்கு. நான் கவனிக்கவேயில்லை. நீங்க சட்டுன்னு கவனிச்சிட்டீங்களே?" என்றவர், அவநம்பிக்கை சற்றுக் குறையவும், ஆர்வத்துடன், "சரி இன்னும் என்ன கவனிச்சிங்க? சொல்லுங்க" என்று ஊக்குவித்தார்.
சூர்யா மேற்கொண்டு தன் கணிப்புக்களை விவரிக்கலானார். அவரது சுவையான விளக்கம், தாமஸின் அவநம்பிக்கையை அடியோடு தகர்த்தெறிந்து, சூர்யாவின் யூகத் திறமையின் உச்சத்தை எடுத்துக் காட்டவே சூர்யாதான் தன் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்ற பூரண நம்பிக்கையை தாமஸுக்கு வளர்த்தது.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |