பால் குடிக்காத பூனை
தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் அமைச்சரவையில் இருந்த விகடகவி. மிகுந்த புத்திசாலி. ஒருமுறை மன்னருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. 'பால் குடிக்காத பூனை' உலகத்தில் உண்டா என்பதுதான் அது. உடனே அமைச்சரவையைக் கூட்டி அதுபற்றி விசாரித்தார். அமைச்சர்களோ, "மன்னா, பால் குடிப்பது பூனையின் பிறவிக் குணம்" என்றனர். ஆனால் தெனாலிராமன் மட்டும் இதற்கு பதில் கூறாமல் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த மன்னர், "தெனாலிராமா, நீ ஏன் மௌனமாக இருக்கிறாய்?" என்று கேட்டார்.

அதற்கு தெனாலிராமன், "மன்னா, எந்த ஒன்றின் பிறவிக் குணத்தையும் நம்மால் மாற்ற முடியாது என்றாலும், வளர்ப்பு முறையால் அதை மாற்ற முடியும். ஏன், பால் குடிக்காத பூனையை என்னால் உங்களுக்குக் காட்ட முடியும்" என்று கூறினான்.

மன்னர் திகைத்தார். மற்ற அமைச்சர்களோ மறுத்தனர். உடனே மன்னர், "ராமா, உனக்கு மூன்று மாத கால அவகாசம் தருகிறேன். அதற்குள் பால் குடிக்காத பூனையை எனக்குக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் உனக்கு சிறைத் தண்டனை" என்றார். ராமனும் அதை ஒப்புக் கொண்டான். தெனாலிராமன், சந்தைக்குச் சென்று ஒரு பூனைக் குட்டியை வாங்கிக் கொண்டு தன் வீட்டை அடைந்தான். பூனைக்குப் பாலைத் தவிர்த்துத் தான் உண்ணும் உணவுப் பொருட்கள் அனைத்தையும் வைத்து அன்போடு வளர்த்து வந்தான். பூனையும் உண்டு கொழுத்து வளர்ந்தது.

நாட்கள் சில சென்றன. ஒரு நாள் பாலை நன்கு கொதிக்க வைத்து அதை ஆறிய பாத்திரத்தில் ஊற்றிப் பூனைக்கு வைத்தான் தெனாலிராமன். பசியோடு வந்த பூனை பாலில் வாயை வைத்தது. சூடு தாங்காமல் 'மியாவ்' என கத்திக் கொண்டே ஓடிப் போனது. இப்படியே தெனாலிராமன் தினமும் சூடான பாலை வைப்பதும், அதைக் குடிக்க வந்த பூனை நாவைச் சுட்டுக் கொண்டு அலறி ஓடுவதும் வாடிக்கையானது.

சில வாரங்கள் சென்றன. ஒருநாள் பாலைச் சூடாக்காமல் அப்படியே பாத்திரத்தில் ஊற்றிப் பூனையின் அருகில் வைத்தான் தெனாலிராமன். தினமும் நாவைச் சுட்டுக்கொண்ட அனுபவத்தால், பூனை அதைப் பார்த்ததுமே கத்திக் கொண்டு ஓடியது. அதுமுதல் பால் பாத்திரத்தைப் பார்த்தாலே அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தது பூனை.

மூன்று மாதம் கழிந்தது. மன்னன் அறிவித்த நாளும் வந்தது. பூனையை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றான் தெனாலிராமன். அரசர் முன்சென்று அதனைக் கீழே வைத்தான். நன்கு கொழுத்திருந்த அந்தப் பூனையைப் பார்த்த மன்னர், 'தெனாலிராமன் பூனையை நன்கு பராமரித்திருக்கிறான்' என்று எண்ணி மகிழ்ந்தார். தனது வீரர்களில் ஒருவனை அழைத்து முதலில் பூனைக்குச் சில உணவுப் பொருட்களை வைக்கச் சொன்னார். பூனை அவற்றைத் தின்றது. அடுத்து மன்னர் வீரனிடம் ஒரு பெரிய கிண்ணத்தில் பாலைக் கொண்டுவரச் சொன்னார். வீரனும் பாலைக் கொண்டு வந்து பூனையின் முன் வைத்தான். பூனை அலறி அடித்துக் கொண்டு விட்டத்தில் தாவியது.

மன்னர் தன் வீரர்களை விட்டுப் பூனையைப் பிடிக்கச் சொன்னார். மீண்டும் அதன்முன் பாலை வைக்கச் சொன்னார். பூனையோ அலறியபடியே வீரர்களை நன்கு பிறாண்டி விட்டு அங்கிருந்து ஓடிப் போனது.

பால் குடிக்காத பூனையைப் பார்த்த மன்னரும், அமைச்சர்களும் அப்படியே திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தனர். உடனே மன்னர் கிருஷ்ணதேவராயர், "தெனாலிராமா, இது மிகப் பெரிய ஆச்சரியம். நீ சொன்னபடியே செய்து காட்டி விட்டாய்! உலகிலேயே பால் குடிக்காத பூனை இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். உனக்கு நூறு வராகன் பரிசளிக்கிறேன். ஆமாம். நீ இதனை எப்படிச் சாதித்தாய்?" என்று கேட்டார்.

ராமனும் தயங்கியவாறே நடந்ததைச் சொன்னான். உடனே கோபம் கொண்ட மன்னர், "ராமா, நீ ஓர் உயிரைத் துன்புறுத்தி அல்லவா இதனைச் செய்திருக்கிறாய். இது மிகப் பெரிய குற்றம். உன்னை சிறையில் தள்ளுகிறேன்" என்றார்.

உடனே தெனாலிராமன், "மன்னா. நான் பூனைக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுத் துன்புறுத்தவில்லை. பாலை மட்டும் அதனை வெறுக்கும் படியாகச் செய்தேன். அது தவறுதான். ஆனால், பழக்கத்தினால் எதையும் மாற்ற முடியும் என்பதைத் தங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் அப்படிச் செய்தேன். என்னை மன்னியுங்கள்" என்றான். அவன் கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்த மன்னர் அவனை மன்னித்ததுடன் பரிசளித்தும் கௌரவித்தார்.

சுப்புத் தாத்தா

© TamilOnline.com