மின்சாரம் இல்லாத சம்சாரம்
கூட்டுக்குடித்தனம் காணாமல் போய்த் தனிக்குடித்தனம் மேலோங்கி இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் நாங்கள் நான்கு குடும்பத்தினர் கூட்டுக்குடித்தனம் செய்ய நேர்ந்தது. திருமணம் ஆகி அமெரிக்கா வந்து தன் கணவர், தன் குழந்தை என்று வாழ்ந்து வந்த எங்களை அந்த ஹாலோவீன் பவர் அவுட்டேஜ் மாற்றிவிட்டது!

அன்று அக்டோபர் 29ம் தேதி. கனெக்டிகட்டில் கனத்த பனி மழை. அக்டோபர் மாதம் மரங்களில் இலைகள் விழாமல் இருந்ததால், மரங்கள் பனிப்பொழிவின் கனத்தைத் தாங்க முடியாமல் சரிந்து விழுந்தன. இதனால் மின் கம்பிகள் பல இடங்களில் சேதம் அடைந்ததால் மின்தடை ஏற்பட்டு விட்டது. வெளியே பிரெட் வாங்கச் சென்ற போதுதான் தெரிந்தது எங்களைச் சுற்றி உள்ள அத்தனை டவுன்களிலும் மிகுந்த சேதம் என்று. எல்லா இடத்திலும் மின் கம்பிகள் கீழே விழுந்து கிடந்தன. பெரும்பாலான வீடுகளில் எலெக்ட்ரிக் ஸ்டவ் ஆனதால் சமையல் செய்யவே வழி கிடையாது. சுடுதண்ணீரும் இல்லாமல் ஒரே அவஸ்தைப் பட்டோம். வீட்டில் உள்ள தெர்மோஸ்டேட் வேறு வெப்பநிலை கிடுகிடுவென்று இறங்குவதைக் காட்டி பயமுறுத்தியது. எங்கே பேட்டரி தீர்ந்துவிடுமோ என்ற பயத்தில் செல் போனையும் அதிகம் உபயோகிக்க மனம் இல்லாமல் அன்றைய இரவைக் கழித்தோம். அமெரிக்காவில் வாழ்ந்த பதினோரு வருடங்களில் கரண்ட் கட் என்ன என்பதையே அறியாத நாங்கள் இந்தக் கரண்ட் கட்டில் மிகவும் அவதிப் பட்டோம். எல்லாவற்றுக்கும் மேல் குளிர் வேறு.

மறுநாள் பொழுது விடிந்தது, கரண்ட் வந்த வழியாகத் தெரியவில்லை. என்ன செய்வது என்றும் புரியவில்லை. வீட்டின் டெம்பரேச்சர் 60 டிகிரியை நெருங்கி விட்டது. எப்படியோ இரண்டு நாட்கள் கழித்தோம். மூன்று வேளையும் பிரெட்தான். அன்று நவம்பர் 1ம் தேதி. வீட்டின் வெப்பநிலை 55 டிகிரி. கடவுள் கண் திறந்தார் என்றுதான் சொல்லவேண்டும். என்னுடைய தோழி தன் வீட்டில் கரண்ட் வந்து விட்டதாகவும், எங்களைத் தங்களுடன் வந்து தங்குமாறும் கூறினாள். இனி இங்கிருப்பதில் அர்த்தமில்லை என்று தீர்மானித்த நாங்கள் அவள் வீட்டுக்குச் சென்றோம். அங்கே போனால் எங்களைப் போலவே மேலும் இரண்டு குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர். மும்பையில் இருந்து வந்திருந்த ஒரு நண்பியின் மாமியார் மாமனாரும் கூட. எங்கள் அனைவரையும் தங்களுடைய குடும்பத்தினரைப் போலவே பாவித்து எங்களுக்கு வேறொ௫ வீட்டில் இருப்பது போன்ற உணர்வே இல்லாமல் என் தோழி வீட்டில் கவனித்துக்கொண்டனர். மூன்று பேர் இருக்கும் வீட்டில் நாங்கள் பதினாறு பேர்!

எப்படி சமாளிக்கப் போகிறோம், எப்படி சமைக்கப் போகிறோம் என்றும் திகைத்த நாங்கள் எங்கள் ஃபிரெண்ட் கொடுத்த ஊக்கத்தால் கல்யாண சமையல் செய்யும் அளவிற்குத் தேறிவிட்டோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகச் சமையல். எங்கள் வீடுகளில் மிச்சம் மீதி இருந்த காய்கறிகளை எல்லாம் அவளுடைய பிரிட்ஜில் அடைத்தோம். அவற்றை வைத்து பொரிச்ச குழம்பு, அவியல், சாம்பார், ஜீரா ரைஸ், சோலே, சப்பாத்தி என்று விதவிதமாகச் சமைத்துத் தள்ளினோம். இரண்டு கப் காபி கலக்கும் இடத்தில் பத்து கப் செய்தோம். ஒரு கப் சாதம் வைக்கும் இடத்தில் எட்டு கப் சாதம் வைத்தோம். வீடே கல்யாணக்களை கட்டிவிட்டது.

இதற்கு நடுவில் ஒரு தோழியின் திருமண நாளும் வந்தது. அதை வெகு சிறப்பாகக் கேக் வெட்டிக் கொண்டாடினோம். இத்தனை சந்தோஷத்திற்கும் நடுவில் கரண்ட் வரவில்லை என்ற கவலை இருந்து கொண்டேதான் இருந்தது. ஒவ்வொரு நாளும் வீட்டுக்குப் போய் வருவோம். ஆனால் வீட்டினுள் இருக்க முடியாத நிலைமை. வீட்டின் டெம்பரேச்சர் 55…50…44… என்று குறைந்த வண்ணம் இருந்தது. அக்கம் பக்கத்து வீடுகளின் பேஸ்மென்டில் ‘சம்ப் பம்ப்’ வேலை செய்யாததால் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்து விட்டது. தொலைக்காட்சியில் கவர்ன௫ம், மின்சார வாரியத்தின் தலைவரும் இன்று-நாளை என்று உறுதி அளித்த வண்ணம் இருந்தனர். ஆனால் கரண்ட் வந்தபாடில்லை. பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவித்து விட்டனர். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கோ இது ஒரு மிகவும் இக்கட்டான தருணம். Early Action/Decision காலேஜ் அப்ளிகேஷன் போடுவதற்குக் கடைசி நாள் நவம்பர் 1ம் தேதி. அதனால் அவ்வகுப்பு மாணவ மாணவிகள் லைப்ரரி, Barnes & Noble மற்றும் எங்கெல்லாம் WiFi இருக்கிறதோ அங்கு போய்த் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பிக் கொண்டிருந்தனர்.

எப்படியோ நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தன. எலிமெண்டரி, மிடில் ஸ்கூல் குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். அவர்களுக்கு விளையாடி, கதைபேசி மகிழ இது ஒரு நல்ல வாய்ப்பு. ஒவ்வொரு நாளும் sleepover தான். விதவிதமான சாப்பாடு. தாத்தா பாட்டியுடன் கேரம் விளையாடுவது முதல், கதை பேசுவதுவரை அவர்களுடைய பொழுது வெகு ஜாலியாகப் போய்க்கொண்டிருந்தது.

கடைசியாக நவம்பர் 7ம் தேதி, பத்து நாட்களுக்குப் பிறகு, எங்கள் வீட்டில் மின்சாரம் வந்தது. ஒரு வாரம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் கரண்ட் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குக் கரண்ட் வந்த செய்தி கேட்டு ஏண்டா வந்தது என்று எண்ணும் அளவிற்கு ஆகிவிட்டது. பிரிய மனம் இல்லாமல் நாங்கள் அவரவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். இப்போது அடுத்த பவர் கட்டை எதிர்நோக்கி இருக்கிறோம்!

கட்டுரை, படங்கள்: சீதா நாராயணன்,
கனெக்டிகட்

© TamilOnline.com