கர்நாடக இசையுலகில் தனக்கென ஒரு தனிப் பாணியை உருவாக்கி ரசிக நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் 'அரியக்குடி' என்றும் 'ஐயங்கார்' என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். இவர், மே 19, 1890ல் காரைக்குடியை அடுத்த அரியக்குடி என்னும் சிற்றூரில், திருவேங்கடம் ஐயங்காருக்கும், நாச்சியார் அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். தந்தையார் ஜோதிடத்தில் வித்தகர். நகரத்தார் கோட்டை கட்டி வாழ்ந்த செட்டிநாட்டுப் பகுதியில் மிகுந்த செல்வாக்கோடு, அவர்களது அன்புக்கு உரியவராகத் திகழ்ந்தார். மகன் பிறந்த உடனேயே ஜாதகத்தைக் கணித்துப் பார்த்து, அவன் நாடு போற்றும் இசைவாணனாக வருவான் என்பதை உணர்ந்து கொண்டார். ஆகவே அவனுக்கு தகுந்த இசைப்பயிற்சி அளிக்கத் தீர்மானித்தார். ராமானுஜத்தின் கல்வி அவ்வூர் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தொடங்கியது. சிறுவயது முதலே ராமானுஜத்திற்கு இசையில் ஈடுபாடு இருந்தது. அவ்வூர் ஆலயத்தில் நடக்கும் பஜனைகளில் கலந்து கொண்டு ராமானுஜம், பாகவதர்களோடு சேர்ந்து பாடுவான். பிற சமயங்களில் சதா அந்தப் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருப்பான். இதைப் பார்த்த தந்தையார் தனது நண்பர் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரிடம் இசை பயில ராமானுஜத்தை அனுப்பினார். அவரிடம் குருகுலவாசமாகக் கற்று வரலானார் அரியக்குடி.
ஹரிகேசநல்லூர் பாகவதருக்குப் பின் புதுக்கோட்டை மலையப்ப ஐயரிடம் மாணவராகச் சேர்ந்தார். மலையப்ப ஐயர், தேவகோட்டையிலேயே தங்கி அரியக்குடிக்கு இசை பயிற்றுவித்தார். அவரிடம் மூன்றாண்டுகள் பயின்ற பின்னர் ஸ்ரீரங்கம் சென்ற அரியக்குடி, 'பல்லவி நரசிம்ம ஐயங்கார்' என்று புகழ்பெற்ற நாமக்கல் நரசிம்ம ஐயங்காரிடம் இசை நுணுக்கங்களைப் பயில ஆரம்பித்தார். அவருக்கு அப்போது 16 வயது. அங்கு மூத்த மாணவராக இருந்த சேஷ ஐயங்கார் அரியக்குடியின் மீது அன்பு பூண்டார். தினந்தோறும் விடியற்காலையில் எழுந்து சாதகம் செய்தால் 'மகரக்கட்டு' பாதிப்பு ஏற்படாது, குரல் மிக இனிமையாக இருக்கும் என்று அவர் அரியக்குடிக்கு அறிவுறுத்தினார். அதேபோல அரியக்குடி விடியற்காலையில் எழுந்து, ஸ்ரீரங்கம் கோயில் ஆயிரம் கால் மண்டபத்திற்குச் சென்று, மூன்றுமணி நேரத்திற்கு மேல் பக்தர் கூட்டம் வரும்வரை விடாமல் சாதகம் செய்வார். அந்த அசுர சாதகம் அவருக்குப் பல வெற்றிகள் பெற அடிப்படையாய் அமைந்தது.
நரசிம்ம ஐயங்காரிடம் இரண்டாண்டுகள் இசை பயின்ற அரியக்குடி, பின்னர் அக்காலத்தின் புகழ்பெற்ற இசை மேதையும், ராமநாதபுரத்தின் ஆஸ்தான வித்வானுமான பூச்சி ஐயங்காரிடம் மாணவராகச் சேர்ந்தார். அது அவரது வாழ்க்கையின் திருப்புமுனை ஆனது. பூச்சி ஐயங்கார் மிகப் பெரிய இசைமேதை. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் என பல மொழிகளில் வல்லவர். பட்டணம் சுப்ரமண்ய ஐயரின் மாணவர். லயத்தை விட ராகபாவத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். தமிழ் நாடெங்கும் இசைக் கச்சேரிகள் செய்தவர். பல சமஸ்தான மன்னர்களது ஆதரவையும், ஆதீனகர்த்தர்களின் பாராட்டுதலையும் பெற்றவர். மாணவரது திறனை அறிந்த அவர், தனக்குத் தெரிந்த அனைத்தையும் அரியக்குடிக்கு போதிக்க ஆரம்பித்தார். பூச்சி ஐயங்காருடன் கச்சேரிகளில் பின்பாட்டு பாடியும், தம்பூரா மீட்டியும், வீட்டில் தனியாக சாதகம் செய்தும் பல இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார் அரியக்குடி. அக்காலகட்டத்தில் அரியக்குடிக்கு பொன்னம்மாள் என்பவருடன் திருமணமும் நிகழ்ந்தது. இரு மகவுகள் வாய்த்தன.
அரியக்குடியின் முதல் கச்சேரி கண்டனூரில் நடந்தது. இசை ரசிகரான ஏ.ஆர்.எஸ்.எம். சோமசுந்தரம் செட்டியார் இல்லத் திருமணத்தில் முதல்நாள் பூச்சி ஐயங்காரும், அடுத்த நாள் கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயரும் பாட இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து அரியக்குடி பாடவேண்டும் எனத் தந்தை திருவேங்கடம் ஐயங்கார் விரும்பினார். செட்டியாரும் அதற்கு ஒப்புக் கொள்ள, குருநாதரும் சம்மதிக்க, அரங்கேறினார் அரியக்குடி. தோடி ராகத்தில் அமைந்த “விடலனு கோதண்டபாணி” என்பதுதான் அவர் பாடிய முதல் பாடல். தொடர்ந்து தனது இனிய குரலால் அந்த அரங்கையே தன் வசப்படுத்தினார். ரசிகர்கள் பலத்த கரகோஷம் செய்து பாராட்டினர். பூச்சி ஐயங்காரும், கோனேரி ராஜபுரம் ஐயரும், திருக்கோடிகாவல் கிருஷ்ணையரும் அவரைப் ஆசிர்வதித்துப் பாராட்டினர். அதுமுதல் தனித்துப் பல கச்சேரிகள் செய்யத் தொடங்கினார் அரியக்குடி. ஆனாலும் குருகுல வாசத்தை விட்டு விடவில்லை. தினமும் அதிகாலையில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சாதகம் செய்வார். புதுப்புது ராகங்களில் கீர்த்தனைகளை மெட்டமைத்துப் பாடிப் பயிற்சி செய்வார். இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது.
1918ல் முதன் முதலாகத் திருவையாறு தியாகராஜ ஆராதனையில் கலந்து கொண்டு பாடினார் அரியக்குடி. ஒருமுறை மதுரை புஷ்பவனம் பாடலைக் கேட்க திருப்பரங்குன்றம் சென்றிருந்தார் அவர். திடீரென புஷ்பவனத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக அரியக்குடி பாட வேண்டியதாயிற்று. அந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றதுடன் அவருக்கு நல்ல புகழையும் தேடிக் கொடுத்தது. சென்னையில் கச்சேரி செய்யும் வாய்ப்பும் வந்தது. சென்னை சரஸ்வதி சங்கீத கலாசாலையில் நிகழ்ந்த ஒரு கச்சேரி அரியக்குடியைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. தனக்கெனத் தனியாக ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டு சிறப்பாகக் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார் அரியக்குடி. சிறந்த வித்வான்களான பாலகிருஷ்ண ஐயர் (வயலின்), வேணு நாயக்கர் (மிருதங்கம்) ஆகியோர் அரியக்குடிக்குப் பக்கவாத்தியக் காரர்களாக விளங்கினர். பிற்காலத்தில் மைசூர் சௌடையா, டி.என்.கிருஷ்ணன் ஆகியோரும் பக்கவாத்தியம் வாசித்து அரியக்குடிக்குப் பெருமை சேர்த்தனர்.
இன்று கச்சேரிகளில் பாடப்படும் பத்ததி முறையை அறிமுகம் செய்ததே அரியக்குடிதான். அதுவரை சமஸ்தானங்கள், கோவில் திருவிழாக்கள், திருமணங்கள் போன்றவற்றில் பாடப்பட்டு வந்த கச்சேரிகள் மெள்ள மெள்ள சபாக்களில் ஒலிக்க ஆரம்பித்தன. சாதாரண மக்களும் கச்சேரிகளைக் கேட்க வர ஆரம்பித்தனர். ரசிகர்கள் விரும்பும் முறையில் கச்சேரி முறையை மாற்றி அமைத்தார் அரியக்குடி. ஒவ்வொரு கச்சேரியிலும் ஒரே ராகத்தையோ, பாடலையோ மட்டும் பாடாமல், நிறைய ராகங்களை பல கிருதிகளோடு, கலவையாகப் பாடும் உத்தியை அவர் கையாண்டார். பல குருநாதர்களிடம் பயின்ற இசை ஞானமும், பன்மொழிப் பாடல்கள், கீர்த்தனைகள் அறிந்திருந்த திறனும் அவருக்குக் கை கொடுத்தன. இசைக் கச்சேரியின் இன்றைய வடிவத்திற்கு அவரே மூலகர்த்தா. பாடுவதில் மட்டுமல்ல; பாடல்கள் இயற்றுவதிலும், அரிதான கீர்த்தனைகள், பாடல்களுக்கு மெட்டமைப்பதிலும் அரியக்குடி தேர்ந்தவராக இருந்தார். 1930ல் சுதேசமித்திரன் இதழ் தனது பொன் விழாவைக் கொண்டாடியபோது ஐயங்கார் அதனை வாழ்த்திப் பாடிய, கல்யாணி ராகத்தில் அமைந்த 'சுந்தரமான சுதேசமித்திரன்' பாடல் பலரைக் கவர்ந்த ஒன்றாகும். அது பின்னர் இசைத்தட்டாகவும் வெளியானது. அந்தப் பாடலுக்காக சுதேசமித்திரன் உரிமையாளர் தங்க இசைத் தட்டு அளித்து அரியக்குடியை கௌரவித்தார். பின் சுதேசமித்திரன் தனது வைர விழா ஆண்டைக் கொண்டாடிய போதும் இரண்டு பாடல்களை இயற்றிப் பாடினார் அரியக்குடி.
அக்காலத்தில், கச்சேரிகளில் தமிழ் சாகித்யங்களைப் பாடுவதில் சில வித்வான்களுக்குத் தயக்கம் இருந்தது. பாடினாலும் சபையினர் ஏற்றுக் கொள்வார்களோ, சம்பிரதாயத்தை மீறிய குற்றம் வந்து விடுமோ, பெரியவர்கள் அனுசரித்து வந்த முறையை மாற்றுவதாகுமோ என்றெல்லாம் நினைத்துத் தயங்கினார்கள். ஆரம்பத்தில் அரியக்குடிக்கும் அப்படி ஒரு தயக்கம் இருந்தது. ஒருநாள் காஞ்சி மகாப் பெரியவரை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது அவருக்கு. அரியக்குடியை ஆசிர்வதித்த பெரியவர், “இதோ பார்! கச்சேரியில் நீ தமிழிசையும் நிறைய பாட வேண்டும். அதுவும் திருப்பாவைக்கு ஸ்வரம் அமைத்து நீயே பாட வேண்டும். உன்னால்தான் அது முடியும்” என்று சொல்லி வாழ்த்தினார். உடனே தனது முயற்சியைத் தொடங்கிய அரியக்குடி, ஆய்வுகள் பல செய்து, கடினமாக உழைத்து திருப்பாவை, குலசேகர ஆழ்வார் பாடல்கள், ராமநாடகக் கீர்த்தனைகள் என எல்லா வற்றுக்கும் ஸ்வரக் குறிப்புகளை உருவாக்கினார். தனது கச்சேரிகளில் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடவும் செய்தார். அது சுதேசமித்திரன் பத்திரிகையில் வாராவாரம் விளக்கக் குறிப்புகளுடன் வெளியாகி அவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார் அரியக்குடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிலேடையிலும் வல்லவர் அரியக்குடி . அவர், கச்சேரியின் நடுவே அவர் அடிக்கடி பொடி போட்டுக் கொள்வது வழக்கம். ஒருமுறை திருச்சியில் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. முன் வரிசையில் அமர்ந்திருந்த இருவர், அரியக்குடி எத்தனை தடவை பொடி போடுகிறார் என்பதை எண்ணி, தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர். அரியக்குடி இதை கவனித்து விட்டார். சிறிது நேரம் சென்றது. திடீரென கச்சேரியை நிறுத்திப் பொடி டப்பியைத் திறந்த அரியக்குடி, அந்த இருவரையும் பார்த்துக் குறும்புச் சிரிப்புடன், "எல்லாரும் நன்னா பார்த்துக்கங்கோ. இதுவரை எண்ணாதவா நன்னா எண்ணிக்கோங்கோ. எட்டாவது தடவையாப் பொடி போடறேன் நான்.. பொடி..." என்றார். சபை கரகோஷம் செய்தது. கச்சேரியை ரசிப்பதை விடுத்து பொடி போடுவதை எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கோ மிகுந்த வெட்கமாகப் போய்விட்டது.
தனது பாடல்களாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து பாராட்டுக்களையும், கௌரவங்களையும் பெற்றிருக்கிறார் அரியக்குடி. வேலூர் நகர மக்கள் 'சங்கீத ரத்னாகரா', மியூசிக் அகாடமி 'சங்கீத கலாநிதி' ஆகிய பட்டங்களை அளித்தன. மைசூர் மஹாராஜா அரியக்குடியை தனது ஆஸ்தான வித்வானாக நியமித்து 'காயசிகாமணி' என்ற பட்டம் வழங்கினார். இந்தியன் ஃபைன் ஆர்ட் சொசைட்டி அவருக்கு 'சங்கீத கலா சிகாமணி' பட்டம் வழங்கியது. தவிர, தமிழ் இசைச் சங்கத்தின் 'பேரறிஞர்' பட்டத்தையும், இந்திய அரசின் 'சங்கீத நாடக அகாடமி விருதை'யும் பெற்றவர் அரியக்குடி. இவ்விருது இவருக்கு 1952ல் வழங்கப்பட்டது.
இசையுலகில் தனிப்பெருஞ் சாதனை படைத்த அரியக்குடி உருவாக்கிய வர்ணமெட்டுக்களைப் பயன்படுத்தியே பிற்காலத்தில் பலரும் பாடத் தொடங்கினர். அற்புதமான தனி சிஷ்ய பரம்பரையை அரியக்குடி உருவாக்கினார். பிற்காலத்தில் சிறந்த இசை வித்வான்களாகப் போற்றப்பட்ட பி. ராஜம் ஐயர், பாலக்காடு கே.வி.நாராயணசாமி, மதுரை என்.கிருஷ்ணன் போன்றோர் அவரது சிஷ்யர்களே. அரியக்குடியின் கடைசிக் கச்சேரியாக 1965ல் சென்னை வானொலியில் நடந்த சங்கீத சம்மேளன நிகழ்ச்சி அமைந்தது. அதன் பிறகு உடல்நலக்குறைவால் அரியக்குடி அதிகம் பாடவில்லை. 1967ம் ஆண்டு ஜனவரி 23 அன்று அவர் காலமானார். 1991ல் அவரது நூற்றாண்டு விழாவின் போது அவரது நினைவு தபால் தலையை வெளியிட்டு அரசு கௌரவித்தது. அவர் மறைந்தாலும் அவர் மெட்டமைத்த கீர்த்தனைகளும், உருவாக்கிய பத்ததி முறையும், சீடர்கள் பரம்பரையும் என்றும் அவர் புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.
பா.சு.ரமணன் |