அறிவால் ஆளுங்கள் மனதை!
அன்புள்ள சிநேகிதியே

நான் ஒரு 38 வயது ஆடவன் சராசரி மனைவி, 4 குழந்தைகள். 15 வருட ஹிந்து கலாசார வரைமுறைக்குட்பட்டு பெற்றோர் பார்த்துச் செய்து வைத்த திருமணம். எதிர்பார்ப்புகளை அட்ஜஸ்ட் செய்து கொண்டு காலத்தைத் தள்ளி வருகிறோம். அவ்வப்போது பிணக்கு, பிறகு சமாதானம் என்று இருக்கிறது வாழ்க்கை. Professionally இருவரும் நன்கு achieve செய்து விட்டோம். உலகளாவிய பல்கலைக்கழகத்தில் பெரிய பதவி, பவிசு. இந்த அமைதியான ஓட்டத்தில் சென்ற வருடம் நேர்ந்தது ஒரு சூறாவளி. என் கல்லூரிக்காலச் சகமாணவி ஒரு மாதப் பயிற்சி நிமித்தம் நான் வேலை செய்யும் இடத்துக்கு வந்தாள். எனக்கு அவளுடன் கல்லூரி நாட்களில் பழகியது அவ்வளவாக நினைவில்லை. ஆனால் வந்த ஒரு வாரத்துக்குள் பழைய நினைவுகளை ஃப்ளாஷ்பேக் போல் விவரித்தாள் தோழி. கல்லூரி இரண்டாம் வருடம் பெங்களூர்-கோவா ரயில் பயணம், நான் அவளுக்குக் கொடுத்த ரோஜாச் செண்டு, எங்கள் நட்பு, பாசம், இனம் புரியாத ஈர்ப்பு. We never proposed to each other, then, 1990 சென்னை. வேறு ஜாதி. 2-3 மாத நட்பிற்குப் பிறகு பிரிந்து விட்டோம். 17 வருடத்திற்குப் பிறகு இந்தச் சந்திப்பு. அம்மணிக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஒரு குழந்தை. அவள் குடும்ப வாழ்க்கை அவளுக்கு ருசிக்கவில்லை என்று எளிதில் தெரிந்து விட்டது.

இந்த ஒரு மாதம் தினப்படி லஞ்ச், ஸ்டார்பக்ஸ் காஃபி, அவ்வப்பொழுது டின்னர் என்று சுற்றினோம். என் மனைவி தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் எங்கள் இருவருக்கும் ஒரு இனம் புரியாத பிணைப்பு ஏற்பட்டு விட்டது. கல்லூரி நாட்களில் எங்கள் பெற்றோரின் கட்டுப்பாடு, ஜாதி கோட்பாட்டுக்குள் திருமணம், இவற்றை நினைவுகூர்ந்து இவை இல்லாமல் இருந்திருந்தால், ஒருவேளை நாங்கள் இந்நேரம் ஒரு சந்தோஷமான (சினிமாவில் வரும் சூர்யா-த்ரிஷா போல) தம்பதி ஆக இருந்திருப்போமோ என்ற எண்ணம் தோன்றியது. செயற்கையான ஒரு திருமண வாழ்வு, அடிக்கடி பூசல் இவற்றை நினைத்தால் ரொம்ப எரிச்சல் வருகிறது. கூடவே வேலை செய்யும் வெள்ளைக்காரனின் ரொமாண்டிக் கல்யாணம், "Honey, honey!" என்று தழுவித் தழுவி இருக்கும் உறவுகள். இவற்றைப் பார்த்தால் பெருமூச்சு வருகிறது, இருவருக்கும். வரம்பை மீறா விட்டாலும், ஒரு கள்ளக் காதலின் அடையாளங்கள் முளைத்து விட்டன. திரும்பச் சென்றுவிட்டாள். அவள் இருப்பது வேறு நாடாக இருப்பதால், சந்திப்பு கிடையாது. ஆனாலும் சாக்குப் போக்கு சொல்லி ஒரே நேரத்தில் இந்தியா செல்வது, கூட வேலை செய்ய ப்ராஜெக்ட் தேடுவது என்று மாறி வருகிறது சூழல்.

எங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் அவ்வப்போது வரும் பிணக்குகள் சற்றே கூடியிருக்கிறது. ஆனால் செய்யும் தவற்றின் குற்ற உணர்ச்சியினால் மனைவியை அடிக்கடி வெளியே கூட்டிச் செல்கிறேன். உடைகள் வாங்கித் தருகிறேன், etc., etc.

இவளையும் எனது இல்லத்தவளையும் அவ்வப்போது எடை போடாமல் இருக்க முடியவில்லை. இது இப்படியே செல்ல முடியாது. வெள்ளைக்காரன் திருமணத்தை முறித்துவிட்டு, alimony, அப்பள money என்று அளந்துவிட்டு கள்ளக்காதலியோடு சென்றிருப்பான். என் மனைவியை என் குழந்தைகளின் தாயாகவும், இவளை என் வாழ்க்கைத் துணைவியாகவும் பாவிக்கத் தோன்றுகிறது. எங்கள் இருவருக்கும் இதை ஏற்க முடியவில்லை. வாழ்நாள் முழுக்கக் கூட வேலை செய்து கொண்டே எங்கள் (வரம்பை மீறாமல்) ஏக்கங்களைச் சரி செய்து கொள்ளவும் தயக்கம், குற்ற உணர்வு.

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" பாடல் கேட்க நன்றாக இருக்கிறதே தவிர, இந்த மேற்கத்திய சூழலில் options இருக்கும்போது, மனம் குரங்காகத்தான் இருக்கிறது. வழவழா கொழகொழா என்றில்லாமல், கையைப் பிசையாமல், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று ஒரு அட்வைஸ் கொடுங்கள்.

உங்கள்
குழப்பம் அடைந்த
குடும்பத்தை விரும்பும் நண்பன்
----------------

அன்புள்ள சிநேகிதிரே...

உங்கள் மனக்குழப்பத்தை சுருக்கமாக, தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் என் மனதிற்கு எங்கோ, ஏதோ இடறுகிறது. அதை வெளிப்படையாக்காமல், உங்கள் பிரச்சனையை மட்டும் பார்த்து, என் கருத்துக்களை எழுதுகிறேன்.

1. நாம் எதை வாங்கப் போனாலும் நாம் கொடுக்கும் விலைக்கேற்ப உள்ள 'quality' பொருளாகத்தான் தேடுகிறோம். அதைப்போல இந்த அமெரிக்கக் கலாசாரத்தில் உள்ள நல்லதை எடுத்துக் கொள்ளாமல், ஏன் பாசாங்கு உறவுகளுக்கு (Honey, honey, Alimony) முக்கியம் கொடுத்து அவர்களைப் போல் இருக்க ஆசைப்படுகிறோம்? நம்முடைய கலாசாரத்திற்கேற்ப, குடும்ப நன்மையை உத்தேசித்து ஏதோ முடிவு எடுக்கிறோம். அந்தக் கால கட்டத்தில் பெற்றோர்களின் சம்மதம் உங்கள் சந்தோஷத்திற்கும் மன நிம்மதிக்கும் முக்கியமாக இருந்திருக்கும். நீங்களும் எதிர்காலத்தை நினைத்து ஒரு கணக்கு போட்டு விட்டுத்தான், உங்கள் திருமணத்திற்கு இசைந்திருப்பீர்கள். இரண்டு பேரும் Professional ஆக இருந்து, நான்கு குழந்தைகளின் பெற்றோர்களாகவும் இருக்கும் சூழ்நிலையில் 'soul-mating relationship'க்கு நேரம் இருந்திருக்குமா என்பது சந்தேகம். அதனால் இனிமேல் இருக்காது என்பதாக முடிவு செய்ய முடியாது. நிறையப் பேருக்கு குழந்தைகள் பெரியவர்களாகி வீட்டை விட்டுச் சென்ற பிறகுதான் உறவுகள் புரிய ஆரம்பிக்கிறது. வலுக்க ஆரம்பிக்கிறது. Empty-nest syndrome enhances the bending between the couple. உங்களுக்கு அந்த நிலைமை வர நிறையக் காலம் இருக்கிறது. ஆனால் அந்த வருடங்கள் சீக்கிரம் பறந்து விடும். உங்கள் குழந்தைகளின் வளர்ப்பு எதிர்காலம் இரண்டும்தான் இப்போது உங்கள் இருவரையும் பிணைக்கும் சக்தியாக இருக்கிறது. நீங்கள் இப்போது கடந்து கொண்டிருப்பது ஒரு passing phase

2. 'குற்ற உணர்ச்சி' இருப்பது இயல்பு. நல்லதும் கூட. அதுதான் உங்களுடைய 'value'வை எடுத்துக் காட்டுகிறது. அந்தக் குற்ற உணர்ச்சி வராமல் இருப்பதற்கு ஒரே வழி உங்களுடைய மனக்கட்டுப்பாடு. அது வராமல் இருக்க முடியாது. எந்தக் கட்டுப்பாடு உங்களை இந்த அளவிற்கு படிப்பிலும் வேலையிலும் உயர்வைக் கொடுத்து உங்கள் உணர்ச்சிகளை 'வரம்பு' மீறாமல் செய்ய வைத்ததோ, அதே கட்டுப்பாடு உங்கள் குழந்தைகளின் தாயை மனைவியாகவும் பாசத்துடன் பார்க்க உதவும்.

3. "நான்கு குழந்தைகள்; 15 வருட இல்லற வாழ்க்கை" - பிணக்கு இல்லாமல், குழப்பம் இல்லாமல் இருக்க முடியாது. தினம், தினம் நடக்கும் போராட்டங்களையும் பொறுத்துக் கொண்டு ஒரு குடும்பம் முன்னேறுகிறது என்றால், அது ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையால்தான். அந்த நம்பிக்கையை நீங்கள் தவற விட்டால், இழப்பு உங்கள் பக்கம் அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியின் குணாதிசயங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவருக்கும் இந்த குடும்பச் சுமை, உங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளால் உண்டாகும் மனப்பாரம் எல்லாம் இருக்கிறது. உங்கள் குழப்பங்களை அழகாக அலசி ஆய்வு செய்யும் நீங்கள், உங்கள் மனைவியின் நிலைமையில் உங்களை இருத்தி, சிறிது ஆய்வு செய்தால் உங்களால் ஏற்படும் தர்க்கங்களை நீங்கள் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

4. Morality is what the soceity creates. அது சமூகத்துக்குச் சமூகம் மாறுபடும். நீங்கள் உங்கள் ஏக்கங்களையும், உணர்ச்சிகளையும் வளர்த்துக் கொள்ளக் கூடாது என்று சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை. இது உங்கள் உரிமை. ஆனால் values are universal. எந்தச் சமூகத்திலும் எந்த மதக் கோட்பாட்டிலும் நம்பிக்கை துரோகம் செய்வதற்கு உடன்பாடில்லை. ஆகவே, உங்கள் உரிமையை எந்த வகையில் வளர்த்துக் கொள்வது, இல்லை கட்டுப்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரியும்.

5. நீங்கள் சிந்திக்கத் தெரிந்தவர். பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்க உங்களால் முடியும். குழப்பத்தை அனுபவிப்பது இப்போது உங்களுடைய விருப்பமான செயலாகத் தெரிகிறது. இப்போது மனதைக் கொண்டு மூளையை அடக்கிக் கொண்டிருக்கிறீர்கள். மூளையைக் கொண்டு மனதை அடக்கும் திறமையும் உண்டு. You are a conscience fearing person. உங்கள் குழப்பம் சீக்கிரம் தெளிவாகும்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com