"உங்கள் இளமைப் பருவத்தின் இனிய அனுபவம் எது?" என்று என்னிடம் யாராவது கேட்டால் பாட்டியிடம் அல்லது அம்மாவிடம் கதை கேட்ட தருணம்தான் என்று தயங்காமல் பதில் சொல்வேன். நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் கண்டிப்பாக இருக்கும். அதுதான் நம் கற்பனையைத் தூண்டிவிட்ட காலம். "நான் அனுமானைப் போல பலசாலி ஆகப் போகிறேன், சக்ரவர்த்தி சிவாஜியைப் போல வீரனாகப் போகிறேன், காந்தியைப் போல உத்தமனாகப் போகிறேன், தெனாலி ராமனைப் போல புத்திமான் ஆகப் போகிறேன்" என்று நமக்குள்ளே சொல்லிக்கொள்ள வைத்த காலம்.
கூட்டுக்குடும்பங்கள் குறைந்து போய்விட்ட இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு கதை கேட்பதில் உள்ள சுகம் தெரியாமலே போய்விட்டது. அந்த இடத்தை டி.வி.யும் கணினியும் பிடித்துக் கொண்டுவிட்டன. அவர்களுக்குப் பிடித்த கணினியின் வழியாகவே பாரம்பரியக் கதைகளைச் சொல்ல வந்துள்ளது www.TheFungle.com என்ற இணைய தளம். இப்படி ஒரு இணையதளத்தை உருவாக்க நாராயணன் வைத்தியநாதனுக்குத் தூண்டுகோலாக இருந்தது எது?
"என் பாட்டிக்கு நிறைய கதைகள் தெரியும். நான் குழந்தையாக இருந்தபோது பாட்டியிடம் கதை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும். வெளிநாடுகளில் வாழும் நம்முடைய குழந்தைகள் பாட்டி, தாத்தாவுடன் சேர்ந்திருக்கும் பொழுதுகள் மிகக் குறைவு. நமக்கோ குழந்தைகளுக்குக் கதை சொல்ல நேரமில்லை. எனவே நான் அனுபவித்த அந்த சுகம் நம் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த இணையதளத்தை என் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கினேன்" என்கிறார் நாராயணன் வைத்தியநாதன்.
இந்த இணையதளம் நம் பாரம்பரியக் கதைகளை குழந்தைகளுக்கு அழகிய சித்திரங்களுடன் அளிக்கிறது. இங்கு குழந்தைகள் கதைகளின் வழியாக நம் பண்டைய கலாசாரம், பண்டிகைகள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இசை, ஓவியம் இவற்றின் மூலம் நம் பாரம்பரியம் பற்றி அறியலாம். பழைய புராணகாலப் பாத்திரங்களைச் சந்தித்து உரையாடலாம். பத்துவயதுக்கு உட்பட்ட குழந்தைகளைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது திஃபங்கிள்.காம்.
கதை படிக்க வேண்டுமானால் இங்கே கணினி விளையாட்டு (Computer Game) மூலம் அதற்கான புத்தகத்தைப் பெற வேண்டும்! கம்ப்யூட்டர் கேமுக்கு ஆகட்டும் கதைக்காகட்டும், இதிலிருக்கும் சித்திரங்களின் அழகு சொல்லி முடியாது. கண்டிப்பாகக் குழந்தைகளை வசீகரிக்கும் காடு, மிருகங்கள், கதை மாந்தர்கள், எல்லாம் கண்ணைக் கவரும் வண்ணங்களில். இதில் நுழைந்தால் பெரியவர்களே தம்மை மறந்துவிடக் கூடும். உலகத் தரமுள்ள கிராஃபிக்ஸ்.
இந்தியக் கதைகள் மட்டுமல்ல, பல நாடுகளின் பாரம்பரியக் கதைகளும் குழந்தைகளுக்கு உலகக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திப் பரந்த நோக்குடையர்வகளாக ஆக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் ஃபங்கிள் நிறுவனர்கள். கேம்ஸ், வினா-விடைகள் இவற்றின் மூலம் சொல்லித் தருகிறது ஃபங்கிள். தற்சமயம் இந்தியக் கதைகள் மட்டுமே இங்கு காணக்கிடைக்கிறது. விரைவில் ஜப்பானியக் கதைகளையும் சேர்க்கப்படும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
"நாங்கள் நடத்திய ஆய்வில் 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இவ்விணைய தளம் தங்கள் குழந்தைகளின் பொழுது போக்கைப் பயனுள்ளதாக்குகிறது, அவர்கள் தனிமையைப் போக்க உதவுகிறது என்று சொன்னார்கள். மேலும் பல்வேறு நாட்டுக் கதைகளையும் தரும் எங்கள் ஆர்வத்துக்கு இது வேகம் தருகிறது" என்கிறார் நாராயணன். இங்கே கதைகள் வாசிக்கக் கிடைப்பது மட்டுமல்லாமல், அவற்றைக் குழந்தைகளே சொல்லவும் கேட்கலாம். விரைவில் பாட்டி, பேரக்குழந்தைகளுடன் உரையாடுவது போல் மேம்படுத்தப் போகிறோம் என்கிறார் நாராயணன்.
அதுமட்டுமல்ல, இங்கே பெரியவர்கள் மேற்பார்வைக்கும் வசதி உண்டு. அவர்கள்தாம் பதிவு செய்து விளையாடப் போகும் சிறாருக்குப் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைத் தரவேண்டும். "குழந்தைகள் இன்ன கதை படித்தார்கள் எனப் பெற்றோர்களுக்கு நாங்கள் தகவல் அனுப்புகிறோம். அதனால் அவர்கள் அந்தக் கதையைப் பற்றிக் குழந்தைகளோடு ஆர அமறப் பேசலாம். அப்போது பெற்றோர்கள் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் நேரடியாகப் பங்கேற்கவும், அவர்களோடு அன்புப் பரிமாற்றம் செய்யவும் அதிக வாய்ப்பு ஏற்படுகிறது" என்கிறார் இவர்.
ஆரம்பத்தில் கணினியில் மட்டும் கிடைக்கப் பெற்ற இத்தளம், தற்போது iPad, iPhone ஆகியவற்றிலும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் ANDROID இயங்கு தளக் கருவிகளிலும் கிடைக்கச் செய்யப் போகிறார்கள். உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களில் பணி செய்த அனுபவமிக்க வல்லுனர்கள் இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்கிறார்கள். இவர்கள் MySims, Maximo, Lego Star Wars, Indiana Jones, Batman, ZOMG & Ratatouille ஆகிய விளையாட்டுக்களை உருவாக்கிய குழுக்களில் பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சென்னையிலும் அமெரிக்காவிலும் என இரண்டு குழுக்களாக இவர்கள் இயங்கி வருகிறார்கள்.
தி ஃப்ங்கிள் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட Gamaya Inc. நிறுவனத்தால் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் நிறுவனர் மற்றும் CEO நாராயணன் வைத்தியநாதன் வீடியோ விளையாட்டுத் துறையில் 17 வருட அனுபவம் கொண்டவர். இவர் எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் முதன்மைப் பொறியாளராகவும், மற்றும் காப்காம் USA, MSPI இந்தியா ஆகிய நிறுவனங்களில் தலைமைப் பொறியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
போகோ டாட் காம், எலக்ட்ரானிக்ஸ் ஆர்ட்ஸ் மற்றும் காப்காம் USA ஆகிய நிறுவனங்களில் மென்பொருள் வல்லுனராக 9 வருடங்கள் பணியாற்றிய டெட்சுயா சகஷிடா இதன் முதன்மைத் தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் இணை நிறுவனர்.
மற்றொரு இணை நிறுவனரும் கலை இயக்குனருமான டாக்டர். எழில்.கே.வி. வேந்தன் TT Games (வார்னர் ப்ரதர்ஸ், UK), கோட்மாஸ்டர்ஸ் UK, மற்றும் MSPI இந்தியா ஆகிய நிறுவனங்களில் முதுநிலை ஓவியர் மற்றும் கருத்துருக் கலைஞராக 15 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.
காப்காம், காய்யா ஆன்லைன், லோக்கோமோட்டிவ் கேம்ஸ், எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் 11 வருடங்களுக்கும் மேல் பணியாற்றியுள்ள தாமஸ் "ரெக்கி" ஷ்ரைபர் (Thomas "Reggie" Schreiber) கமாயாவின் மற்றொரு இணை நிறுவனரும், முதன்மை வரைகலையாளரும் ஆவார்.
தி ஃபங்கிளின் வீச்சு இந்தியா, மற்றும் வட அமெரிக்காவில் மட்டுமே பரவியுள்ளது. விரைவில் பிற நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கான பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். பெற்றோர்கள் www.TheFungle.com தளத்தில் பதிவு செய்து ஐந்து கதைகள், நான்கு உலகத் தடங்கள், விளையாட்டுக்கள் ஆகியவற்றைப் பின் தொடர்ந்து சென்று களிக்க முடியும். உங்கள் விமர்சனத்தை feedback@thefungle.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
அதுமட்டுமல்ல, உங்களுக்குத் தெரிந்த பாரம்பரியக் கதைகளை ஃபங்கிளுக்கு அனுப்பினால் அவற்றை வெளியிடத் தயராக உள்ளனர். குழந்தைகளுக்கான கதைகளுக்குச் சித்திரம் வரைவதில் உங்களுக்கு ஆர்வமும் திறனும் இருந்தால் அதிலும் உதவலாம். இதன் மூலம் நம் பாரம்பரியக் கதைகள் மறைந்து போகாமல் காப்பதுடன், நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருங்காலத் தலைமுறையினருக்கு, அதுவும் உலக அளவில், எடுத்துச் செல்லலாம்.
மீனாக்ஷி கணபதி |