செப்டம்பர் 17 ,2011 அன்று அபிநயா டான்ஸ் கம்பெனியின் கலை இயக்குநர் மைதிலி குமார் அவர்களின் சிஷ்யை ரேகா நாகராஜனின் பரதநாட்டிய அரங்கேற்றம் சரடோகா மேல்நிலைப் பள்ளியில் உள்ள மெக்கஃபீ சென்டரில் நடைபெற்றது. மல்லாரியில் தொடங்கி, அலாரிப்பும், ஜதீஸ்வரமும் சம்பிரதாய பூர்வமாக ஆடப்பட்டன. அரங்கேற்றத்தின் முக்கிய உருப்படியான வர்ணத்தை நாட்டக்குறிஞ்சியில் அமைந்த 'சுவாமி நான் உந்தன் அடிமை' என்ற பாடலுக்கு ஆடியபோது சிதம்பரத்தில் ஆடிய சிவனின் நிருத்ததைக் காணத் துடிக்கும் மங்கையாய், பக்தையாய் ஆடினார். மதுரை முரளிதரனின் 'பொற்பாதம் தூக்கியே', 'மாடு மேய்க்கும் கண்ணா' என்ற காவடிச்சிந்து, அமிர் கல்யாணி ராகத் தில்லானா என்று எல்லாமே வெகு அழகு. ரேகாவின் தந்தை ராதா நாகராஜன் ஒரு தமிழர், தாயார் அயனோ ஒரு ஜப்பானியர். தன் மகளின் அரங்கேற்றத்திற்கு முக்கியக் காரணம் தன் மனைவியே என்கிறார் நாகராஜன். தன் மாமியார், மாமனாருக்காக இந்தியக் கலாசாரத்தையும், தன் பெற்றோர்களுக்காக ஜப்பானிய கலாசாரத்தையும் முழுமையாகக் கற்க வேண்டும் என்பது என் விருப்பம் என்றார் அயனோ.
குரு மைதிலி குமார் (நட்டுவாங்கம்), ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), நாராயணன் (மிருதங்கம், கஞ்சிரா), சாந்தி நாராயணன் (வயலின்), மஹாதேவன் (மோர்சிங்) ஆகியவை நல்ல பக்கபலமாக அமைந்திருந்தன.
நித்யவதி சுந்தரேஷ் |