செப்டம்பர் 11, 2011 அன்று, டிராயில் (மிச்சிகன்) உள்ள 'கலாரசனா' நாட்டியப் பள்ளியின் பத்தாவது ஆண்டு விழா லாரன்ஸ் டெக் கல்லூரி வளாக அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவில் விநாயகர் கவுத்துவம், நிருத்திய வந்தனம், அலாரிப்பு என ஏறத்தாழ பத்துக்கும் மேலான நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. ஐந்து வயதுக் குழந்தைகள் முதல் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகள் வரை தத்தமது பதங்களில் திறமையை இங்கு வெளிப்படுத்தினர். நடனத்திற்கான பாடல்கள் தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டிருந்தன. விழாவைத் தொகுத்து வழங்கிய ஆஷா சுப்ரமணியம் ஒவ்வொரு நடனத்திற்கும் ஒரு சிறிய விளக்கம் அளித்தார். பிறகு குரு தேவிகா ராகவன் தமது நன்றியுரையில் மிச்சிகனில் வாழும் தமது மாணவியர் குடும்பங்களின் மூத்தோர் மூவரை மேடைக்கு அழைத்து மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கச் செய்தார்.
குரு தேவிகா ராகவன் தஞ்சாவூர் பாணியில் பரத நாட்டியம் பயில்வித்து வருகிறார். நட்டுவாங்கம் மற்றும் வாய்ப்பாட்டில் வல்லுனரான இவர் மிச்சிகன் தமிழ்ச் சங்கத்திற்காகப் பல நடன நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்கியுள்ளார். டெட்ராய்ட் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் இவர் 'அல்காரிதம்' பயில்விப்பதில் வல்லுனர். அவரது பள்ளிச் சிறார்களை அறிவு விளையாட்டுப் போட்டிகளில் (Mind Games) தயார் செய்து, பிற பள்ளிகளுடன் போட்டியிடப் பயிற்சி அளித்து வருகிறார். இவரது கணவர் பேரா. ஸ்ரீகாந்த் ராகவன் மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர். சங்கத்தின் இளைஞர் குழுவைக் கொண்டு Adopt A Highway பணியை ஆண்டிற்கு ஒருமுறை செய்து வருகிறார்.
காந்தி சுந்தர், ட்ராய், மிச்சிகன் |