அக்டோபர் 8, 2011 அன்று சிகாகோவின் ஹாரிஸ் தியேடரில் நாட்யாவின் 'மலரும் மரம்' (The Flowering Tree) அரங்கேறியபோது அரங்கின் 1525 சீட்டுகளும் கிட்டத்தட்ட விற்றுத் தீர்ந்தன என்பது எந்தவொரு நடனக் குழுவுக்கும் சாதனைதான். அதிலும் முதன்முதலாகச் சிகாகோவின் முன்னணி அரங்கத்தில் தனித்து மேடையேறும் நாட்யாவுக்குத் தனித்துவமான சாதனை என்று சொல்லத்தான் வேண்டும்.
ஏ.கே. ராமானுஜன் பதிவுசெய்த பழைய தென்னிந்திய நாட்டுப்புறக் கதையை ஆதாரமாகக் கொண்டது 'மலரும் மரம்'. அந்தப் பாரம்பரியத்தில் இதில் ஒரு சூத்திரதாரியும் வருவார். கதையின் நாயகி குமுதாவுக்கு ஒரு வரம் என்னவென்றால் தான் நினைத்த மாத்திரத்தில் அவளால் ஒரு மரமாகிவிட முடியும். அந்த மரத்தின் பூக்கள் அபூர்வமான அழகு வாய்ந்தவையாதலால் அவற்றை விற்று குமுதாவும் சகோதரிகளும் வாழ்க்கை நடத்தினர். ஆனால், அந்த மரத்திலிருந்து தானாக விழும் பூக்களை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம், யாரும் பறிக்க முடியாது. குமுதாவின் அழகில் மயங்கி ஒரு ராஜகுமாரன் அவளை மணந்துகொள்கிறான். அவளுடைய மந்திர ஆற்றலை அறிந்ததும், அவனும் அதைப் பயன்படுத்திக் கொள்கிறான் ஆனால் அவளை அலட்சியம் செய்கிறான். குமுதாவுக்கு மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கிறதா என்பதுதான் மிச்சக் கதை.
இந்தக் கதைக்கு மேடை வடிவமைத்துத் தயாரித்தவர் நாட்யாவின் கலை இயக்குநர் ஹேமா ராஜகோபாலன். சூத்திரதாரியாக வந்த கிருத்திகா ராஜகோபாலனும் உடன் ஆடிய 20 நாட்டியமணிகளும் பார்வையாளர்களை ஒரு மாய உலகுக்கே அழைத்துச் சென்றனர். குமுதாவாக நடித்த ப்ரியா நெல்சன், இளவரசனாக வந்த வினய் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் நடிப்பு குறிப்பிடத் தகுந்தது. மேடை இயக்கம்: தீபாங்கர் முகர்ஜி; மூல இசையமைப்பு: ராஜ்குமார் பாரதி. இதில் ஜப்பானிய, ஆப்பிரிக்கத் தாளக்கருவிகளும் பயன்படுத்தப் பட்டன.
"சொல்லப்படும் கதையைத் தாண்டி ஆழமான கருத்தொன்று இந்த நாடகத்தின் அடிநாதமாக இருப்பதைப் பார்வையளர்கள் உணர்ந்து ரசித்தனர். 2012ல் இந்த நாடகம் அமெரிக்காவின் பிற பகுதிகளில் காணக் கிடைக்கும்" என்கிறார் ஹேமா ராஜகோபாலன்.
சிகாகோவிலிருந்து செய்தியாளர் |