சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் முத்தமிழ் விழா
அக்டோபர் 8, 2011 அன்று பிளசண்டன் ஹார்வெஸ்ட் மிடில் ஸ்கூலில், சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் முத்தமிழ் விழா ஒன்றை நடத்தியது. விழாவுக்குத் தலைமை தாங்கிய பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தமிழர் சிறப்புப் பற்றி உரையாற்றியதுடன், கவியரங்கத்துக்கும் தலைமை தாங்கினார். கவியரங்கத்தில், இளங்கோ மெய்யப்பன், ஜெயக்குமார் முத்தழகு, கௌரி சேஷாத்திரி, மலர்விழி பழனியப்பன், டெய்சி ஜெயப்பிரகாஷ், லேனா கண்ணப்பன், இந்திரா தங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஆறுமுகம் தயாரித்த 'கருப்பட்டி' என்ற குறும்படம் திரையிடப்பட்டது. கிராமத்தில் கருப்பட்டி தயாரிக்கும் மக்களின் கடின உழைப்பையும், வறுமையையும் எடுத்துக் காட்டுவதாக இந்தப் படம் இருந்தது.

திருமுடி துளசிராமன் விவாதமேடையைத் தலைமை தாங்கி நடத்தினார் 'குழந்தைகளை வளர்ப்பதில் தாயின் பங்கு அதிகமா? தந்தையின் பங்கு அதிகமா?' என்ற இந்த விவாதத்தில், சில குழந்தைகளே மேடையேறி, தாய்மார்களுக்கு வெற்றி ஓட்டளித்தது சிறப்பாக அமைந்தது. இதில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதுடன், பார்வையாளர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது. குழந்தைகள் சிலர் தமிழ்ப் பாடல்களைப் பாடி வந்திருந்தவர்களை மகிழ்வித்தார்கள்.பாகீரதி சேஷப்பன் தமிழ் மன்றம் நடத்திவரும் தமிழ் இலக்கியக் கூட்டம் பற்றியும், தமிழில் கவிதைகள் என்றக் கருத்துப் பற்றியும் உரையாற்றினார். ஸ்ரீதரன் மைனர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பெருங்கவிக்கோ அவர்கள் தான் எழுதிய சேது காப்பியத்தை மன்றத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

பாகீரதி சேஷப்பன்

© TamilOnline.com