அக்டோபர் 15, 2011 அன்று சிகாகோ தமிழ் சங்கத்தின் 'தேனிசை மழை' பூலிங்ப்ரூக் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. சிகாகோ வாழ் பாடகர்களோடு, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஹரியுடன் நான், ஏர்டெல் சூப்பர் சிங்கர் முதலிய புகழ்பெற்ற நிகழ்ச்சிகளின் இறுதிச்சுற்றை எட்டிய திறமைமிக்க பாடகர்களும் பங்கேற்றுச் சிறப்பான நிகழ்ச்சியாக இதை உருவாக்கியிருந்தார்கள்.
மலேசியா வாசுதேவன் நினைவாக 'பொதுவாக என் மனசு தங்கம்', என்ற பாடலைப் பாடித் தொடங்கிய ஐங்கரன், மறைந்த நடிகர் ரவிச்சந்திரன் நினைவாக 'பொன்னான கைகள் புண்ணாகலாமா' என்பது போன்ற புகழ்பெற்ற பாடல்களை வழங்கினார். சிகாகோவின் பாடகி ரமா ரகுராமன் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்று இனிமையாகத் தொடங்கி, 'மலரே மௌனமா', 'நெஞ்சில் நெஞ்சில்' என்ற பல நெஞ்சைவிட்டு நீங்காத பாடல்களைப் பாடினார். அவர் தன் கணவர் ரகுராமனோடு பாடிய 'பாலிருக்கும்...' பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது.
சிகாகோ பாடகர் ரவிசங்கர், ஷைலஜா, பரணி எட்மண்ட், ஸ்வப்னா, ரங்கா, சந்திரகலா, டாக்டர் ரோச், ராமா, அரவிந்த், ஜெயஸ்ரீ, வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பாகப் பழைய/புதிய பாடல்களைப் பாடினர். பின்னர் பாபு பாடியபோது, சிகாகோவின் புகழ்பெற்ற நடன தம்பதியரான Dr. சுப்ரமணியன், சுசீலா சுப்ரமணியன் அழகாக நடனம் ஆடினர். ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் ரவி கோபிநாத், ப்ரீத்தி, 'ஹரியுடன் நான்' புகழ் ஹரிணி ஆகியோரின் திறமை அசர வைத்தது.
அரவிந்த் திருவிளையாடல் படத்தின் சவாலான கர்நாடக சங்கீதப் பாடல்களையும், ரவி கோபிநாத், ஹரிணி போன்றோர் சங்கதிகள் நிறைந்த பாடல்களையும் பாடியபோது அது நிச்சயம் இசைக்குழுவின் தலைவரான சினூ மேப்லேடன் மற்றும் குழுவினருக்குப் பெருத்த சவாலாக அமைந்தது. நிகழ்ச்சியை ரகுராமன், சபரி, மயூரி, ப்ரீத்தி, தேவராஜன் ஆகியோர் சுவையாகத் தொகுத்து வழங்கினர். சங்கத் தலைவர் டோனி சூசை, வீரா வேணுகோபால் ஆகியோர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய செயற்குழு உறுப்பினருமான ரகுராமன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தனர். சிறப்பாக நடந்த தேனிசை மழையின் விழாக் குழுவினர் அறவாழி, சீனி குருசாமி, லக்ஷ்மி ஆனந்தன் ஆகியோரை ராம் ரகுராமன் தலைமையேற்று வழிநடத்தினார்.
பாலடைன் ஆனந்தன் |