தென்கலிஃபோர்னியா தமிழ் மன்ற ஆண்டுவிழா
அக்டோபர் 15, 2011 அன்று, ஆரஞ்ச் கவுன்டியிலுள்ள 'தென்கலிஃபோர்னியா தமிழ் மன்றம்' தனது ஆறாம் ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. விழாவில் திரட்டப்பட்ட நிதியை 'சங்கரா கண் அறக்கட்டளை'க்கு நன்கொடையாக அளித்தது. விழாவின் சிறப்பம்சமாக வடகலிபோர்னியாவின் பிரபல மெல்லிசைக் குழுவினரான 'இளையராகம்' இளையராஜாவின் பாடல்களை வழங்கியதாகும். சம்பத் கரிகாலன் வரவேற்புரையோடு நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு பாடலுக்கும் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. சில பாடல்களுக்கு ஏற்றாற்போல் பாடுபவர்கள் உடையணிந்து வந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது. வந்திருந்தோருக்கும் பாட வாய்ப்பளித்தது ரசிகர்களை உற்சாகப் படுத்தியது. நிகழ்ச்சியை பாலாஜி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் நடுவில் ஸ்ரீராம் சங்கரா கண் அறக்கட்டளையின் தொண்டுகளை விளக்கிப் பேசினார். பின் அறக்கட்டளையின் காரியதரிசி முரளி உரை ஆற்றினார்.

தமிழ் மன்றத்தின் நாராயணன் குலுக்கல் முறையில் ரசிர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். கமிட்டி உறுப்பினர் அருள் நன்றியுரை வழங்கினார். பிற உறுப்பினர்களான அனுவும் ஹரியும் இதுபோன்று பல நிகழ்ச்சிகளை அன்பர்களுக்கு வழங்க இருப்பதாகக் கூறினார்கள்.

அருள்,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com