இளைய தலைமுறையினருக்கு கர்நாடக சங்கீதம் மற்றும் பரத நாட்டியத்தின் நுணுக்கங்களைக் கொண்டு செல்லும் வகையில் 'விவ்ரித்தி-2011' என்ற நிகழ்ச்சியை பல்லவிதா அமைப்பு வடிவமைத்திருப்பதாக அதன் முதன்மை நிர்வாகி லதா ஸ்ரீராம் தெரிவித்தார். சென்ற ஆண்டில் கர்நாடக சங்கீதம் மட்டுமே இடம்பெற்ற இந்த விழாவில் இந்த ஆண்டு பரதநாட்டியமும் சேர்ந்திருக்கிறது. டி.எம். கிருஷ்ணா போன்ற பிரபல இந்திய வித்வான்கள் இந்த நிகழ்ச்சிக்காக வந்த போதும் அவர்கள் கச்சேரி செய்யாமல், இளையவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதையே பிரதானமாகச் செய்கிறார்கள். விழாவின் கச்சேரிகள் அனைத்துமே இளையவர்களால் வழங்கப்படுபவைதாம். "சென்ற ஆண்டு விவ்ரித்திக்குக் கிடைத்த வெற்றி இந்த ஆண்டும் சிறப்பாகவும் இன்னும் விரிவாகவும் செய்ய என்னை ஊக்குவிக்கிறது" என்கிறார் லதா ஸ்ரீராம்.
2011 அக்டோபர் 20 முதல் 24 வரை சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, நவம்பர் 3 முதல் 6 வரை பாஸ்டனில் நடைபெறுகிறது. இதன் பணிப்பட்டறைகளை டி.எம். கிருஷ்ணா வடிவமைத்து நடத்துகிறார். 'மேடைக்கச்சேரியின் உருவும் அதை அமைப்பதும்', 'ராகத்தின் சாரம்' போன்ற தலைப்புகளில் வெவ்வேறு படிநிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்தப் பணிப்பட்டறைகள் நடத்தப்படுகின்றன. இவற்றை நடத்துவதில் லலிதா கான வித்யாலயா, ராகமாலிகா, ஸ்வரலஹரி/யுவபாரதி அமைப்புகள் பல்லவிதாவுடன் கைகோத்துள்ளன.
விவ்ரித்தியின் இலையுதிர்கால விழா நவம்பர் 11 முதல் 13 வரை ஓலோனி கல்லூரியின் ஸ்மித் மையத்தில் நடைபெறும். டி.எம். கிருஷ்ணாவுடன் சங்கீதா சிவகுமார் அவர்கள் இசைகுறித்த செயல்முறை விளக்கத் தொடர்நிகழ்வில் பங்கேற்பார். பத்ரி சதீஷ்குமார், மேலக்காவேரி பாலாஜி ஆகியோர் இவர்களுக்கு மிருதங்கம் வாசிப்பர். அக்கரை சுப்புலக்ஷ்மி அவர்களும் இதில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தச் செயல்முறை விளக்கத் தொடரை சௌத் இண்டியா ஃபைன் ஆர்ட்ஸ் (SIFA) இணைந்து வழங்குகிறது. இந்நிகழ்ச்சிகளுக்கு சுசீலா நரசிம்மன், சுபா நரசிம்மன், அஜய் நரசிம்மா ஆகியோர் வயலினும், விக்னேஷ் வெங்கட்ராமன், மிருதங்கமும், குஹன் வெங்கட்ராமன் வீணையும் வாசிப்பர்.
விரிகுடாப் பகுதியின் இசை தம்பதியர் சுபப்ரியா ஸ்ரீவத்சன், ஸ்ரீவத்சன்; சம்ஸ்கிருத அறிஞர் டாக்டர் ராஜலக்ஷ்மி ஸ்ரீனிவாசன்; உபன்யாச மேதை பேட் கிருஷ்ணன் ஆகியோரின் செயல்முறை விளக்கம் இசையோடு பக்தியின் சங்கமமாக இருக்கும். லதா ஸ்ரீராம், ஆஷா ரமேஷ், அனு சுரேஷ், சுசீலா நரசிம்மன் ஆகியோரின் சிஷ்யர்கள் தத்தமது இசைத் திறனை வெளிப்படுத்துவர். பல்லவி ஸ்ரீராம், ரசிகா குமார், வித்யா சுந்தரம், வினித்ரா மணி ஆகியோரின் பரதநாட்டியம் விவ்ரித்தியை மிளிரச் செய்யும். சித்தார்த் ஸ்ரீராம் (குரலிசை), அனிருத்தன் வாசுதேவன் (நட்டுவாங்கம்), ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), நிஷாந்த் சந்திரன் (வயலின்) ஆகியோர் நடன நிகழ்ச்சிக்குப் பக்கம் வாசிப்பார்கள்.
கலைமாமணி குருவாயூர் துரை அவர்களைப் 'பல்லவிதா' கௌரவிக்க உள்ளது. மிருதங்க வித்வான் நாராயணன் நடராஜன், SIFAவின் முன்னாள் தலைவர் அருண் ஐயர், ஒபாமா நிர்வாகத்தில் சொற்பொழிவு எழுதுபவரான விக்ரம் ஐயர் ஆகியோர் பாராட்டுரை வழங்குவார்கள். நரசிம்மா, வசந்தி வெங்கட்ராமன், பிரவீணா வரதராஜன், வித்யா சுப்ரமணியன் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்கள்.
இவை தவிர பல்லவிதா ஆசியக் கலைகள் அருங்காட்சியகத்தோடு இணைந்து விரிகுடாப் பகுதிப் பொதுமக்களுக்கு இந்திய நிகழ்கலைகளை எடுத்துச் செல்கிறது. ஹார்வர்ட் மற்றும் பிற பாஸ்டன் அமைப்புகளுடன் இணைந்து ஒரு 'Ethnomusicology' மாநாடு மற்றும் செயல்முறை விளக்கங்களை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் தகவலுக்கு: இணையதளம்: www.pallavita.org மின்னஞ்சல்: VivRti@pallavita.org
செய்திக்குறிப்பிலிருந்து |