நவம்பர் 2011: வாசகர் கடிதம்
அக்டோபர் தென்றல் இதழில் முதலில் படித்தது சீர்காழி சிவசிதம்பரத்தின் நேர்காணல்தான். கல்கி அவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஓர் அருமையான கலை விமர்சகர் 2009ல் காலமான சுப்பிரமணியம் என்கிற சுப்புடு. வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சமில்லாத கலை விமர்சகர். ஒரு கச்சேரிக்கு அவர் வந்திருக்கிறார் என்றால் மேடையில் அமர்ந்திருக்கும் கலஞர்களுக்கு நடுக்கம் வந்துவிடும். கச்சேரி நன்றாக அமைந்துவிட்டால் பாராட்டுக்கும் பஞ்சம் இருக்காது. தவறு என்றால் சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டார். விமர்சனத்தில் நகைச்சுவையும் மிளிரும். ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியன்று தமிழிசைச் சங்கத்தில் நடைபெறும் கலைமாமணி சீர்காழி சிவசிதம்பரத்தின் கச்சேரிக்கு அவர் தவறாமல் வருவது வழக்கம். அவருடைய விமர்சனங்களைத் தொகுத்து 'சுப்புடு தர்பார்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. அதில் சீர்காழியின் கச்சேரியைப் பற்றி சுப்புடு, "இன்றைக்கு சீர்காழியின் கச்சேரியில் 'நிரோஷ்டா'வில் அருமையான ஒரு கீர்த்தனை பாடினார். நிரோஷ்டா என்றால் உடனே குடும்பக் கட்டுப்பாடு பற்றி நினைத்து விடாதீர்கள். இது ஒரு ராகத்தின் பெயர். அதைப்பாடுவது என்பது கம்பியின்மேல் நடப்பது போன்றது. பஞ்சமம் மத்யமம் இரண்டும் இருக்காது. அதைத் துளிக்கூட தப்பிதமில்லாமல் மிகச் சிறப்பாகப் பாடினார். அவரிடம் உள்ள இன்னொரு சிறப்பம்சம் பக்கவாத்தியமாக வயலின். மிருதங்கம், கடம், மோர்சிங், கஞ்சிரா என்று அரை டஜன் பேர்களைச் சுற்றி உட்கார வைத்துக்கொண்டு திறமையுடன் வேலை வாங்கிவிடும் ஒரு ரிங் மாஸ்டர் அவர்" என்று பாராட்டினார். அவருடைய வெண்கலக் குரலையும் அவர் பாராட்டியிருக்கிறார்.

கூடுதல் செய்தி: நிரோஷ்டா ராகத்தில் இயற்றிய பாடல் (பாடலிலும் பகர மகர எழுத்துக்கள் இருக்காது) நான் இயற்றி, எச்.எம்.வி. ரகு மெட்டமைத்தது.

டாக்டர். அலர்மேலு ரிஷி

*****


அக்டோபர் இதழில் டாக்டர் மு.வ. அவர்களின் அளப்பரிய தமிழ்த் தொண்டினையும், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்தின் நேர்காணலில் அவரது எளிமையான பரந்த சேவை மனப்பான்மையினையும் அறிந்து கொள்ள முடிந்தது. நேர்காணல் அவரது குரலைப் போலவே பரவசமூட்டுவதாக அமைந்திருந்தது. ஆச்சார்யா உமா ஜெயராசசிங்கம் அவர்கள் வாக்கு அவரது ஆன்மீக உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டியது. அவரது தொண்டுள்ளம் பாராட்டப்பட வேண்டியது.

குறுக்கெழுத்துப் புதிரில் சில கேள்விகள் நிஜமாகவே கடினமாகவும், புதிராகவும், மூளையைக் குடைவனவாகவும் உள்ளன. ஒவ்வொரு மாதமும் முழுப் புதிரையும் விடுவிக்க முயற்சி செய்வேன். ஆனால் ஒரு புதிரின் விடை தடைப்பட்டு விடும். எனினும் இந்தமுறை புதிர் முழுவதையும் விடுவித்து விட்டேன் என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்.

சுபத்ரா பெருமாள்,
கூபர்டினோ, கலிபோர்னியா

*****


இந்தியப் பண்பாட்டிற்காகவும், தமிழ் உலகுக்காகவும் தொண்டு செய்தவர்களையும், செய்பவர்களையும் இனங்கண்டு எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களைப் புரிய வைப்பதில் தென்றல் இதழுக்கு ஈடு இல்லை.

அக்டோபர் மாத இதழின் அனைத்துப் பகுதிகளும் அமோகம். மிகப் பழமையான பெயரான 'அவலோகித'த்தை மென்பொருளுக்குச் சூட்டிப் புத்துயிர் ஊட்டி அனைவருக்கும் தெரிய வைத்துள்ள வினோத் ராஜனை நினைத்து புளகாங்கிதம் அடைந்துள்ளேன். மு.வ.வின் 'கட்டாயம் வேண்டும்' படிக்கையில் மனம் வேதனையில்
கனத்தது.

நித்யவதி சுந்தரேஷின் சந்திப்பில் உமா ஜெயராசசிங்கத்தின் அனுபவங்களைப் படிக்கப் படிக்க, அவரது உழைப்பின் ஆழம் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் வித்திட்ட 'பாலவிஹார்' இன்று ஆல விருட்சம்போல் தழைத்து வளர்ந்து நம் சந்ததியருக்கான வரப்பிரசாதமாக அமைந்து கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மைல் கடந்து வந்தாலும், நம் மண்ணின் மணத்தை நம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் பால விஹாருக்கும் தென்றலுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சசிரேகா சம்பத்குமார்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

*****


'அன்புள்ள சிநேகிதியே' (அக்டோபர் இதழ்) படித்தேன். அதில் அமெரிக்காவில் இருப்பவர் 4 டிக்கட் எடுத்து தன் மைத்துனர் குடும்பத்தை இங்கு வரவழைக்க யோசிக்கும்போது இந்தியாவில் இருக்கும் மற்ற மைத்துனர்களைப் பற்றிப் பேசுவது சரியல்ல என்று தோன்றுகிறது. அவ்வளவு பரிதாபமாக இருந்தால் ஏன் தானே அவர்களை அழைத்துக்கொண்டு சுற்றுலா போகலாமே! எப்போதும் அடுத்தவர்களுக்கு வாத்தியாராக இருப்பதைவிடத் தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசிப்பது நல்லது. நியாயம் என்பது நாணயத்திற்கு இருபக்கம் இருப்பதுபோல்.

பத்மா வைத்தீஸ்வரன்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

*****


அக்டோபர் மாத 'தென்றல்' இதழில் வெளியாகியிருந்த டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்தின் நேர்காணலை வாசித்து சந்தோஷம், பெருமை இரண்டும் கொண்டேன். சந்தோஷம் - அவர் மருத்துவத் துறையில் சிறப்புறப் பணியாற்றுவதோடு இசைக் கலையிலும் வல்லவராக இருக்கிறார் என்பது. பெருமை - சிவசிதம்பரம் எனது மாணவர் என்பது. சென்னை மருத்துவக் கல்லூரியில், நான் உடற்கூறியல் பிரிவில் (கிஸீணீtஷீனீஹ்) ஆசிரியராக இருந்தபோது சிவசிதம்பரம் மாணவராக வந்து சேர்ந்தார். அவரது சகோதரியும் அதே கல்லூரியில் எனது மாணவியாகப் படித்தார். 1990ல் கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற என் மகளின் திருமண வரவேற்பின் போது டாக்டர் சிவசிதம்பரம் கச்சேரி செய்து தன் குருபக்தியை வெளிப்படுத்திக் கொண்டது பெருமை சேர்க்கும் விஷயம் அல்லவா?

டாக்டர் அனந்தராமன்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com