Carnatic Music Idol USA
அமெரிக்காவில் பிறந்து, கர்நாடக சங்கீதம் பயின்று வரும் இந்தியக் குழந்தைகளின் திறமையைக் குன்றிலிட்ட விளக்காக வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் சமீபத்தில் நடந்தேறியது Carnatic Music Idol USA நிகழ்ச்சி.

மேக்ஸிமம் மீடியா நிறுவனத்தினருடன் கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனா அமைப்பு இணைந்து வழங்கிய இந்நிகழ்ச்சி ஜெயா டி.வி.யில் வரும் நவம்பர் மாதம் ஒளிபரப்பப்படும். Carnatic Music Idol என்னும் நிகழ்ச்சி ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிடி இசை நிகழ்ச்சியாகும். இவ்வருடம் இந்நிகழ்ச்சி முதன்முதலாக அமெரிக்க மண்ணில் நடத்தப்பட்டு Carnatic Music Idol USA என்னும் பெயரில் ஒளிபரப்பப்பட உள்ளது. வட அமெரிக்காவில் சிகாகோ, அட்லாண்டா, நியூயார்க், சான் ஹோசே ஆகிய இடங்களில் செப்டம்பர் மாதத்தில் பல்வேறு தினங்களில் முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் தேர்வு பெற்ற குழந்தைகள், இறுதிப் போட்டியில் பங்கேற்க விரிகுடாப் பகுதியிலுள்ள மில்பிடாஸ் நகரின் ஷிர்டி சாயி கோவில் அரங்கில் செப்டம்பர் 24 சனிக்கிழமையன்று கூடினர்.

பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களான நெய்வேலி சந்தான கோபாலன், சௌம்யா, சசிகிரண் ஆகிய மூவரும் நடுவர்களாக இருந்தனர். இப்போட்டியில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு க்ளீவ்லாண்ட் ஆராதனையில் சிறப்புச் சுற்றில் பாடும் வாய்ப்புடன், 'மேக்ஸிமம் மீடியா' ஜெயா டிவி வழங்கும் "மார்கழி மஹோத்ஸவம்" நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பும் வழங்கப்படுமாம். இதில் வெற்றி பெற்ற இளம் பாடகர்கள் யாரென்று அறிய ஜெயா டி.வியில் நவம்பர் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் 'Carnatic Music Idol USA' நிகழ்ச்சியைப் பாருங்கள்.

அருணா கிருஷ்ணன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com