பாஸ்டனில் மார்பகப் புற்றுக்கு எதிரான நடை
அக்டோபர் 2, 2001 அன்று பாஸ்டனில் 'Making strides against Breast Cancer Walk' நடந்தது. நானும், என் குடும்பத்தினரும் நண்பர்களுமாக ஐந்துபேர் இதில் பங்கேற்றோம். காலைப் பனி, குளிர், தூறல் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லா வயதினரும், எல்லா நாட்டினரும் ஒன்றிணைந்து எறும்புபோல் சுறுசுறுப்பாக வெளிர்சிவப்பு ஆடையணிந்து நடந்தது மனதிற்கு நெகிழ்வாக இருந்தது.

எனக்கு Breast Cancer வந்து குணமாகி 15 வருடங்கள் ஆகின்றன. ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த நடையில் என் பையனும் மருமகளும் கலந்து கொள்வதுடன் நிதி திரட்டி அளிப்பார்கள். இளைய மகன் சோமேஷூம் மருமகள் வித்யாவும் இதற்கும் சென்னை அடையார் புற்று நோய் மையத்திற்கும் நிதி கொடுத்து வருகிறார்கள். 'சிறுதுளி பெருவெள்ளம்' அல்லவா? இந்தமுறை நானே பிங்க் ரிப்பன் (Survivor Ribbon) அணிந்துகொண்டு இரண்டு மைல் வாக்கில் கலந்து கொண்டது, புற்றுநோய் வந்து பிழைத்த மற்றவர்களை வாழ்த்தியது, அவர்களுடன் ஊடாடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது, வழி பூராவும் தொண்டர்கள் பிங்க் ரிப்பன்களை ஆட்டி ஊக்குவித்தது, கை நிறைய (பை நிறைய) நினைவுப் பொருட்களை (உணவுப் பொருட்களை) கொடுத்தது போன்ற நிகழ்வுகள் மனதிற்கு மிகவும் உற்சாகம் அளித்ததுடன் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் அமைந்து விட்டது.

அனுராதா ரகுராம்,
மால்டன், மசாசூசெட்ஸ்

© TamilOnline.com