Best opportunities for Startups in 2007
2005-ஆம் வருடத்திலும் 2006-இலும் சில மிகப் பெரிய நிறுவன விற்பனைகளும் (acquisitions) முதற் பங்கு வெளியீடுகளும் (Initial Public Offering-IPO) நடைபெற்றதாலும், ஆரம்ப முதலீட்டாளர் (venture capitalists) பல வருட வறட்சிக்குப் பிறகு மீண்டும் தங்கள் பணப்பையைத் திறந்து சற்று தாராளமாக முதலீடு பொழிய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதாலும், புது நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான ஆர்வம் இப்போது பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது!
எந்தத் துறைகளில் புது நிறுவனங்களுக்கு தற்போது வாய்ப்புள்ளது என்றும், ஆரம்ப முதலீட்டார் எம்மாதிரி நிறுவனங்களில் முதலிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் என்னிடம் பலர் விசாரித்துள் ளார்கள். அவர்கள் எழுப்பிய பல கேள்விகளும் அவற்றைப் பற்றிய என் கருத்துக்களும் கதிரவனைக் கேளுங்கள் பகுதியில் இடம்பெறுகின்றன.
இக்கட்டுரையின் சென்ற பகுதிகளில், பெரும் நிறுவன வலைச் சாதனம் (enteprise networking) மற்றும் பெரும் நிறுவன மென்பொருள் துறைகளில் (enterprise software) மிகக் குறுகிய வாய்ப்புக்களே உள்ளன, ஆனால் சேவை மென்பொருள் (Software as a Service - SaaS), தகவல் மைய மெய்நிகராக்கம் (data center virtualization), நகர்வுத் தூர தகவல் தொடர்புக்கான (mobile telecom and datacom) தொழில்நுட்பங்கள், மற்றும் நுகர்வோர் வீட்டு வலை மற்றும் கேளிக்கை (consumer and home networking and entertainment) தொழில் நுட்பங்கள் போன்ற துறைகளில் வாய்ப்புக்கள் இருப்பதாகக் கண்டோம்.
2007-ஆம் ஆண்டில் நிறுவனங்களை ஆரம்பித்து முதலீடு பெறும் வாய்ப்புள்ள பிற துறைகளைப் பற்றி இப்போது காண்போம்.
பெரும் நிறுவனங்களைப் பற்றி அலசி ஆராய்ந்து அலுத்தாயிற்று, விட்டுத் தள்ளுங்கள்! ஏதோ இணையம் 2.0 (web 2.0) என்று அடிபடுகிறதே, அப்படி என்றால் என்ன? அதைப் பற்றி அபரிமிதமான பரபரப்பு உள்ளதே? அத்துறையில் என்னென்ன வாய்ப்புக்கள் உள்ளன?
அடி சக்கை! இது பிரமாதமான கேள்வி. எனக்கும் பெரும் நிறுவனங்களைப் பற்றிய அரைத்த மாவையே அரைத்து போரடித்துப் போய் விட்டது. இரண்டாம் இணையத்தில் கொஞ்சம் உலா வருவோம் வாருங்கள்.
1996-இல் ஆரம்பித்து 2000 வரை பெரும் வெடிப்பாக வளர்ந்து பிறகு புஸ்வாணமாகி விட்ட இணைய இயக்கத்தை, பலரும் இணையத்தின் முதலாவது இன்னிங்ஸ் என்கிறார்கள். 2001-இல் இருந்து 2005 வரை (அதாவது கூகிள் முதற் பங்கு வெளியீடு வரை) இணையத்தின் இருண்ட காலமாகவே இருந்தது. யாஹூ, ஈபே, அமெஸான் போன்ற இணையத்தை மட்டும் சார்ந்த நிறுவனங் களும், பல வங்கிகள், விமானப் பயண நிறுவனங்கள் போன்ற உண்மை உலக நிறுவனங்களும் இணை யத்தைப் பயன்படுத்தி லாபகரமாக வணிகம் நடத்தி வந்தனர். ஆனாலும் காண்பவர் மனத்தில் இணையத் தின் வாணிபப் பலனைப் பற்றி ஒரு கேள்விக் குறி இருந்து கொண்டுதான் இருந்தது. விளம்பரத்தை மட்டும் வைத்து இலவசமான சேவைகளை அளித்து பெரும் வெற்றி யாரும் பெறவில்லை. யாஹ¥ மட்டுமே ஓரளவு சமாளித்து வந்தது.
அந்த இருட்டைத் தகர்த்தெறிந்தது, பெரும் வெடிப்புடன் வெற்றிக் கொடி நாட்டிய கூகிளின் முதற் பங்கு வெளியீடும், அதைத் தொடர்ந்து, விளம்பரங்களை மட்டுமே வைத்து கூகிள் காட்டிய பெரும் வளர்ச்சியும் தான்! அதைக் கண்ட பிறகுதான் பலருக்கும் பல தரப் பட்ட இலவச இணையச் சேவைகளை வெளியிட்டு சோதனை செய்யும் நம்பிக்கை மீண்டும் பிறந்தது! சொல்லப் போனால், கி.மு. / கி.பி.,என்று சொல்வது போல, ஆரம்ப மூலதனத்தார் (venture capitalists) கூ.மு./கூ.பி., அதாவது 'கூகிளூக்கு மூன்', 'கூகிளுக்குப் பின்' என்றே சொல்ல ஆரம்பித்து விட்டனர்!
அதே சமயத்தில், ப்ரௌஸரில் ஒரு க்ளிக் செய்து விட்டு பதில் பெற ஐந்து நிமிட நேரம் காத்திருக்கும் உலகமய காத்திருத்தல் (world wide wait) என்று இணையத்தைக் கேலி செய்துகொண்டிருந்தனர். அதை மாற்றி, ப்ரௌஸருக்குள்ளேயே உடனுக்குடன் பதில் தருமாறு செய்யக் கூடிய Ashynchronous JavaScript and XML (AJAX) எனப்படும் பயனர் இடைமுகத் (user interface) தொழில்நுட்பம் கொண்டு வரப் பட்டது. பல இணையத் தளங்கள் அதைப் பயன் படுத்தியிருந்தாலும், கூகிள் நிலப்படங்கள் (google maps) அதைப் பயன்படுத்தி அந்தத் தொழில்நுட்பத்தால் என்ன சாதிக்க முடியும் என்று யாவரும் உணரும் வகையில் பெருமளவில் வெளிப்படுத்திவிட்டது. அதனால் AJAX என்பது இணையத் துறையிலுள்ள யாவர் நாவிலும் தவழத் தொடங்கி, இரண்டாம் இணையத்தின் இன்றியமையாத அங்கமாகிவிட்டது. பல இணையத் தளங்களும் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தன. உதாரணமாக, யாஹ¥ மின்னஞ்சல் AJAX தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனது பயனர் இடைமுகத்தை மிகச் சிறப்பாக்கிவிட்டது.
இரண்டாம் இணையத்தின் அடுத்த அம்சம் பல ஊடகத் தகவல்களைக் கலந்து தர ஆரம்பித்தது. இணையத்தின் ஆரம்பத் திலிருந்தே இது சாத்தியமானது என்றாலும், அலைப்பட்டைப் பற்றாக்குறையால் (shortage of bandwidth) பெரும்பாலும் பெரிய கோப்புக் களை (files) அனுப்ப வெகுநேரமானது; தவிரவும், JPEG போன்ற நிலைப் படங்கள் இருந்தாலும், ஒலி மற்றும் ஒளித் தகவல்களை வெகுவாகக் கலந்திருக்கவில்லை. ஆனால் ஓரிரு ஆண்டுகளாக, பல பயனர்கள் தங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் DSL, Cable போன்ற அகல அலைப்பட்டையை (broadband) பயன்படுத்த ஆரம்பித்ததால் ஒலி மற்றும் ஒளித் தகவல்களைப் பெருமளவில் இணையத்தளங்கள் சேர்த்தளிக்க ஆரம்பித் தனர். யூ-ட்யூப், ஆப்பிள் ஐ-ட்யூன் வீடியோ, மற்றும் நெட்·ப்ளிக்ஸ் போன்ற வீடியோ பயன்பாடுகள் சாத்தியமாயின. பெரும் ஊடக நிறுவனங்களான ABC, ESPN, Disney, TimeWarner, CBS போன்றவர்களும் மின்வலை மூலம் வீடியோக்களை வினியோகிக்க அனுமதி தர ஆரம்பித்துள்ளனர்.
அதே சமயத்தில் இணையத்தில் இன்னொரு பெரும் புரட்சியும் விளைய ஆரம்பித்தது. அதுதான் சமூக வலை (social networking) எனப்படுவது. அதாவது, பயனர்கள் தமக்கென ஒரு இணையப் பக்கத்தை அல்லது விரிப்பாடை (profile) வைத்துக் கொண்டு, அதன் மூலம் தம்மோடு, அல்லது தம்போன்ற ஈடுபாடுகள் கொண்ட மற்றவர்களின் பக்கத்தை அல்லது விரிப்பாடுகளைப் பின்னி ஒரு குறிப்பிட்ட வலையை உண்டாக்குவது. பிறகு அவரவர்கள் வலையோடு இணைந்துள்ளவர்கள், வேலைகளுக்காகவோ (உ-ம்: LinkedIn), இசைக் குழுக்கள் போன்ற குறிப்பிட்ட ஈடுபாடுகளுக்காகவோ (MySpace) அல்லது நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவோ (Friendster) தத்தம் வலைகளை பயன்படுத்துவார்கள். இது மிகப் பெரும் புரட்சியாகி, மைஸ்பேஸ் போன்ற சில சமூக வலைகள் பெரும் வெற்றியடைந்தன.
(யூ-ட்யூபையும் சிலர் சமூக வலை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டுகிறார்கள். ஆனால், அதில் உள்ள நகர்படங்களைப் பற்றி மற்ற பயனர்களின் கருத்துக்கள் பதிக்கப்படு மானாலும், சமூக வலைகளின் மற்ற இணைப்புக்கள், குறிப்பிட்ட ஈடுபாடுகள் போன்ற அம்சங்கள் அதில் இல்லை; யூ-ட்யூப் ஒரு நகர்ப்பட நுழைவுத்தளம் (video portal), சமூக வலையல்ல என்பது என் கருத்து.)
அத்தோடு, யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை வெளியிடக் கூடிய web log அல்லது வலைப்பூ (Blogs) இயக்கமும், பலரும் சேர்ந்து உருவாக்கி வளர்க்கும் விக்கி (wiki) எனப்படும் வலைத் தளங்களும் பிறந்து வேகமாக வளர்ந்தன. சொல்லப் போனால், மிகத் தொன்மையான, பெரும் சக்தியுடன் உலவி வந்த என்ஸைக்ளோபீடியா பிரிட்டா னிக்கா இப்போது மிகவும் படுத்து விட்ட தென்றால், அதற்கு Wikipedia என்ற வாசகர் களாலேயே உருவாக்கப்பட்ட என்ஸைக்ளோ பீடியாவை இலவசமாக அளிப்பதும் ஒரு முக்கிய காரணம் என்று கூறத்தான் வேண்டும்.
இணைய வாணிகத்திலும் ஒரு பரிணாம வளர்ச்சி (evolution) உண்டாயிற்று. Amazon, Barnes and Noble, Circuit City போன்ற வணிக நிறுவனங்களே சொந்த இணையத்தளங்கள் மூலம் தங்கள் பொருட்களை விற்பது மட்டுமல்லாமல், யார் வேண்டுமானாலும் தங்கள் பொருட்களை விற்க முடிந்தது. அது மட்டுமல்லாமல், வாங்குபவர்களின் விமர்சனங்கள் விற்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் இணைக்கப் பட்டது. eBay நிறுவனம் தனியார் விற்பனையை வெகுவருடங்களுக்கு முன்பே ஏல முறையில் ஆரம்பித்தது. ஆனால் பெருமளவில் பல இணையத் தளங்களிலும் (அமேஸானிலும் கூட) விற்கக் கூடிய வசதியும், வாங்குபவர்கள் கருத்துக்களை பெருமளவில் இணைக்கும் அம்சமும் கடந்த இரண்டு மூன்று வருடங்களில்தான் பெருகின. CraigsList எனும் இணையத் தளம் ஒரு பைசா கட்டணம் கூட இல்லாமல் தனியார் பொருட்களை விற்கும் விளம்பரம் போட வசதி செய்து கொடுத்தது. (அதை அடியேனும் ஓரிரு முறைகள பயன் படுத்திக் கொண்டுள்ளேன்!)
இத்தகைய பல தரப்பட்ட தொழில்நுட்ப மற்றும் வணிகரீதியான முற்போக்குக்கள் உண்டாகியுள்ளதால், இப்போதிருக்கும் இணையம் முந்தைய இணையம் மாதிரியல்ல, ஒரு முக்கிய மட்டத்தைத் தாண்டியுள்ளது என்று பலர் நிர்ணயித்தனர். அதனால், AJAX போன்ற தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தும், மிகவும் இடைப்பரிமாற்றமுள்ள பயனர் இடைப்பாடுகள் (highly interactive user interface), ஒலி, ஒளி கலந்த சிறப்பு ஊடக இணையத் தளங்கள், விலையின்றி, விளம்பரத்தால் மட்டுமே ஆதரிக்கப் பட்டுத் தரப்படும் இணையப் பயன்பாடுகள் (web applications), பயனர்களாலேயே அளிக்கப்படும் தகவல் மற்றும் உள்ளடக்கங்கள் (contents), மைஸ்பேஸ் போன்ற சமூக வலைகள்,
அவற்றுக்குள் நெருக்கமாகப் பின்னப்பட்ட வலை வாணிபம், போன்ற பல இணையப் போக்குகளையும் சேர்த்து, இரண்டாம் இணையம் (Web2.0) என்ற செல்லப் பெயர் (!) வைத்து அழைக்க ஆரம்பித்தனர். அதே பெயர் இப்போது பெரிதாக வளர்ந்து நிலைத்து விட்டது. இரண்டாம் இணையம் பெரும் பரபரப்பான துறை என்பதில் ஐயமில்லை. இரண்டாம் இணையத் தொழில்நுட்பங்களும், வணிக ரீதியான வெற்றிகளும் பெரும் புத்துணர்ச்சியும், புதுத் தைரியமும் அளித்துள்ளன. பயனர்களும், பல கோடிக் கணக்கில் இரண்டாம் இணையத் தளங்களுக்கும், பயன்பாடுகளுக்கும் ஆதரவளிக்கின்றனர். பயனர் கணக்கும் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், விளம்பரதாரர்களும் பழைய ஊடகங்கள் மட்டுமல்லாமல், இரண்டாம் இணையத்தையும் ஒரு முக்கிய ஊடகமாக கணித்து வேகமாக அதையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். கூகிளின் அதிவேக வளர்ச்சியே அதற்கொரு முக்கிய சான்று. யாஹ¥ விளம்பரங்களுக்கு சரியான தொழில்நுட்பம் தராததால் சற்று படுத்தது; இப்போது நல்ல தொழில்நுட்பம் அளிக்கவே மீண்டும் வளர ஆரம்பித்துள்ளது, இப்போக்கினாலேயே. AOL நிறுவனம் தன் சேவைகளில் விளம்பரரீதியானவற்றுக்கே முக்கியத்துவம் கொடுத்து, மின்னஞ்சலுக்கும் விலையைத் தவிர்த்தது இன்னொரு முக்கிய சான்று. மைக்ரோஸா·ப்ட்டும் இப்போது படு வேகமாக இக்களத்தில் குதித்துள்ளது.
ஆனால் புது நிறுவனம் ஆரம்பிக்கும் ஆர்வமுள்ளோர் இத்துறையைப் பற்றி சற்று யோசித்து நல்ல வாய்ப்பொன்றைக் கண்ட பிறகே ஆரம்பிக்க வேண்டும். இரண்டாம் இணையத்தின் வாய்ப்புக்களையும், அபாயங்களையும் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
கதிரவன் எழில்மன்னன்
தொடரும் |