(லட்சுமிப் பாட்டி தொண்ணூறைத் தொடப் போகிறார். அமெரிக்க இளசுகளுக்கு அவர் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறார். என்ன சொல்றார்னு கேட்டுத்தான் பாருங்களேன்)
இப்ப நான் சொல்லும் பாட்டி வைத்தியத்துக்கு அறிவியல்பூர்வ விளக்கம் இருக்குமா என்று தெரியாது. ஆனால் நடைமுறையில் நல்ல பலன் கண்டிருக்கிறேன்.
வயிற்றுப் பிரச்சனைகள் ஃபிரெண்டு வீட்டில கன்னா பின்னான்னு தின்னுட்டு வயிறு பிச்சுக்கிச்சா? ஒரு கரண்டி தயிரில் கொஞ்சயம் வெந்தயம் கலந்து சாப்பிடுங்க. வயிற்றுப்போக்கு உடனடியாக நின்றுவிடும்.
வயிற்று வலி ஏற்பட்டால் இளஞ்சூட்டில் விளக்கெண்ணயை வயிற்றுப் பகுதியில் தடவினால் வலி அறவே ஓடிவிடும்.
எடை குறைக்க இப்போதெல்லாம் உடல் எடை குறைக்க வேண்டும் என்று உடற்பயிற்சி மையத்திற்கு ஓடுகிறார்கள். உணவைக் கட்டுப்பாடுடன் அளவாக வேளை தவறாமல் உண்டால், அவ்வப்போது சாப்பிடும் நொறுக்குத் தீனி அளவு குறையும். இதனுடன் வீட்டு வேலை செய்தாலே உடல் எடை தானே குறையும். தினமும் வீட்டைச் சுத்தம் செய்ய குனிந்து நிமிர்ந்து பெருக்கினாலே தொப்பை விழாமல் இருக்கும். ஜிம்முக்கு அழும் காசு மிச்சம். இப்போதேல்லாம் எல்லாத்துக்கும் ஒரு மெஷின். பாத்திரம் தேய்ப்பது முதல் துணி துவைப்பது வரை. கையால் துவைத்து கொடியில் உலர்த்தி மடித்து வைத்தால் துணியும் நெடு நாட்களுக்குக் கிழியாமல் வரும். மின்சாரம் விரயமாவதைத் தடுக்கலாம். அமெரிக்காவில் என்றில்லை, இந்தியாவிலும் இதே கதைதான். இன்னும் சொல்லப்போனால் வேலைக்காரப் பெண்மணி அங்கே துணியை எடுத்து வாஷிங் மெஷினில் போடுவதைக் கூடச் செய்கிறார். அவர் தன்னிஷ்டம் போல் சோப்புதூள் அள்ளிக் கொட்டுவதில் மிஞ்சுவது உடல் அரிப்புதான்.
கண் மை தயாரிக்க என் கொள்ளுப் பேத்தி டீனேஜர். அவளுக்கு முகப்பூச்சு மேல் ஆசை அதிகமாக இருக்கிறது. பருவத்தில் பூச்சு இல்லாமலே அழகு கொஞ்சுவது இயற்கை என்று சொன்னால் புரிவதில்லை. அந்தக் காலத்தில் கண்ணுக்கு மை எழுத ஆசையாய் இருக்கும். அதை வீட்டிலேயே தயார் செய்து விடுவோம். ஒரு சட்டியின் அடிப்பாகத்தில் சந்தனத்தைத் தடவுவோம். நாலு செங்கல்லை அடுக்கி அதன் நடுவில் அகல் விளக்கொன்றில் விளக்கெண்ணெய் வைத்து நல்ல வெள்ளைத் துணியை சுத்தமாகத் துவைத்துத் திரியாகத் திரித்து அகலில் போடுவோம். அந்தத் திரியை ஏற்றி அதன் மீது இந்தச் சட்டியைச் சூடு செய்வோம். சந்தனம் நல்ல கருப்பாக மாறிவிடும். இது முடிச்சு முடிச்சாக மாறியது, அப்படியே வழித்தெடுத்து மைக் குப்பியில் அடைத்து வைத்தால் கண்ணுக்கு மை எழுதலாம். இந்த மைப் பொடியை இடுவதற்கு முன்னர் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் தடவி இட்டுக் கொண்டால் கண்கள் மின்னும். விளக்கெண்ணெயோ, மையோ ஏராளமாகப் போட்டுப் பூசிக் கொள்ளக் கூடாது. மேனி அலங்காரத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இரவு வேளையில் கண்ணுக்கு மை இடுவது கூடாது. ஆனால் இந்தக் காலத்தில் எல்லா கொண்டாட்டங்களும் முகப் பூச்சுக்களும் பொழுது சாய்ந்தபின்னர் தானே நடக்கின்றன!
கருப்புச் சாந்து தயாரிக்க எனக்கு நான்கு பெண் குழந்தைகள். இவர்களுக்குக் கருப்புச் சாந்து வீட்டிலேயே தயார் செய்து விடுவேன். ஜவ்வரிசியை லேசாகக் கருப்பாகும் வரை வறுக்க வேண்டும். அதைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய கூழைக் கொதிக்க வைக்க வேண்டும். இது கொதித்துக் கொதித்து கால் பாத்திரம் வரை ஆன பின்பு கொட்டாங்குச்சியில் நிரப்பி நல்ல நிழலில் காய வைக்க வேண்டும். வெயிலில் காய்ந்தால் பாளம் பாளமாகி விடும். கொட்டாங்குச்சியில் இருக்கும் சாந்தை நெற்றியில் இடுவதற்கு முன்னர் சிறிது தண்ணீர் கலந்து இட வேண்டும். அந்த கருஞ்சாந்திற்கு ஒரு தனி அழகுதான். இதில் ரசாயனப் பொருள் கலக்காததால் முகத்தை பாதிக்காது. இப்போது வரும் ஸ்டிக்கர் பொட்டுகளில் இருக்கும் ரசாயனம் பலருக்கு அலர்ஜியாக இருக்கிறதே!
லட்சுமிப் பாட்டி, கனெக்டிகட் |