தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-5)
இதுவரை:
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். ஷாலினி தூய தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி சூர்யாவுக்கும் கிரணுக்கும் எடுத்துக் கூறி இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு விண்ணப்பிக்கிறாள். சூர்யாவும் சமீபத்தில் தூய தண்ணீர் பற்றிய பல கட்டுரைகளைப் படித்திருந்ததால் அதில் மிகவும் ஆர்வமுள்ளதாகக் கூறி அந்நிறுவனத்துக்குச் சென்று விசாரிக்கச் சம்மதிக்கிறார். அங்கு சந்தித்த யாவ்னா என்ற இளம்பெண்ணை, அவளுடைய ஓட்டப் பயிற்சி பற்றிய தனது சரியான யூகங்களால் ஆச்சரியப்படுத்துகிறார் சூர்யா. பிறகு யாவ்னா மூவரையும் ஆராய்ச்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்று பலதரப்பட்ட உப்பகற்றல் நுட்ப சாதனங்களைப் பற்றி விவரிக்கிறாள் ...

*****


உப்பகற்றல் துறையில் மிகப் பழையதான ஆவிகுளிர்த்தல் (distillation) முறையையும், சமீபகால நுட்பமான எதிர்ச் சவ்வூடு பரவல் (reverse osmosis) முறையையும் யாவ்னா விளக்க, அவை உலகளாவிப் பெருமளவில் பயன்படுத்தப் படவேண்டுமானால் அவற்றுக்கான செலவைக் குறைத்தாக வேண்டும் என்று சூர்யா சரியாகக் குறிப்பிடவே, அவரது கூர்த்த அறிவைப் பாராட்டிய யாவ்னா தற்போதைய பெரும் உப்பகற்றல் நிலையங்களைப் பற்றியும் மற்ற நுட்பங்களைப் பற்றியும் மேற்கொண்டு விவரிக்கலானாள்.

"உலகில் தற்போது இயங்கி வரும் பெரும் உப்பகற்றல் தளங்கள் நாம் பார்த்த ஆவிகுளிர்த்தல் மற்றும் எதிர்ச் சவ்வூடு பரவல் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. சில தளங்கள், இரண்டையும் சேர்த்தே பயன்படுத்துகின்றன. சில அணுசக்தியால் இயங்கும் விமானந் தாங்கிக் கப்பல்களிலும் (aircraft carrrier), நீர்மூழ்கிக் கப்பல்களிலும் கூட அத்தகைய உப்பகற்றல் தளங்கள் உள்ளன..."

கிரண் இடைமறித்தான். "பழையகாலக் கடல்கொள்ளைக் கப்பல்களில சின்னப் பாத்திரத்தில கடல்நீரைக் காய்ச்சி நல்ல தண்ணி செஞ்சாங்க. இந்த்க் காலத்துலயும் அதேதான் போலிருக்கு! என்ன, ஒரே வித்தியாசம் நெருப்புக்குப் பதிலா, அணுசக்தி அடுப்புல பெரிய பாத்திரத்துல காய்ச்சறாங்க! அவ்வளவுதானே?"

யாவ்னா கலகலவென நகைத்தாள். "அப்படியும் வச்சுக்கலாமே. ஆனா இரண்டுக்கும் வித்தியாசம் ரொம்ப இருக்கில்லே. தீபாவளிக்கு இந்தியாவில விடற ராக்கெட் பட்டாஸுக்கும் ஸ்பேஸ் ஷட்டிலை ஆகாயத்துல ஏத்திவிடற நாஸா ராக்கெட்டுக்கும் உள்ள வித்தியாசம் போல."

ஷாலினி கரகோஷித்தாள். "நல்லா குட்டு வச்சே யாவ்னா. கிரண் இப்படித்தான் எதாவது வக்கிரமா சொல்லிக்கிட்டிருப்பான். வேணும் அவனுக்கு. ஆமா, நீங்க இங்க அணுசக்தி வச்சு உப்பகற்றல் செய்யற தளம்கூட வச்சிருக்கீங்களா என்ன?"

கிரண் வாய் பிளந்தான். "வாவ், அணுசக்தி நிலையமா? எங்கே, எங்கே? ரொம்ப நாளாப் பாக்கணும்னு ஆசை. சான்ஸே கிடைக்கலை. இப்பக் கிட்டப் போய் வசதியாப் பாக்கலாமா?"

சூர்யா பெரிதாகச் சிரித்தார். "இங்க அணுசக்தி சாதனமா? சான்ஸே இல்லை கிரண். உன் ஆசையை இன்னும் அடக்கித்தான் வச்சுக்கணும். அணுசக்தி சிறிதளவுல பயன் படுத்தணும்னாக் கூட அதுக்கு எவ்வளவு பாதுகாப்பு வேணும் தெரியுமா? இந்தமாதிரிக் கூடத்துல சும்மா அப்படியே போட்டு வைக்க முடியாது. வேணும்னா இவங்க அணுசக்தி பயன்படுத்துற மாதிரியான அதே டிஸைன்ல உப்பகற்றல் தளம் செஞ்சு, ஆனா அதுல அணுசக்திக்குப் பதிலா வெறும் எரிபொருள் சக்தி பயன்படுத்தியிருக்கலாம். பயோ-டீஸலா இருக்கலாம்னு நினைக்கிறேன்."

யாவ்னா ஆரவாரித்துப் பாராட்டினாள். "மீண்டும் ஹோம் ரன் அடிச்சிட்டீங்க சூர்யா. அணுசக்தித் தளம் மாதிரி செஞ்சு, பயோ-டீஸலேதான் பயன்படுத்தறோம். எப்படிக்
கண்டு பிடிச்சீங்க?"

சூர்யா தன் மூக்கைத் தொட்டுக் காட்டினார். "நான் தொழிற்சாலைகளில வேலை செஞ்சுக்கிட்டிருந்தப்போ டீஸல் எஞ்சின்களோட பழக்கம் இருந்தது. அது மட்டுமில்லாம, நாங்க வேலை செஞ்ச போன பிரச்சனையில சுத்த சக்தி பத்தி விசாரிச்சப்போ பயோ-டீஸல் பயன்படுத்திய இயந்திரங்களருகில இருந்தப்போ வந்த அதே மாதிரியான எண்ணை வாசம் இந்தக் கூடத்தில ஒரு பக்கத்திலிருந்து வருது. அதை வச்சுத்தான் கணிச்சேன்."

யாவ்னா கைகொட்டினாள். "எக்ஸலென்ட். நல்லா முடிச்சுப் போட்டுடீங்க!"

கிரண் ஆவலுடன் தொடர்ந்தான். "அப்படியே இருந்தாலும், அணுசக்தி வச்சு உப்பகற்றல் எப்படி செய்யறாங்கன்னு சொல்லேன் யாவ்னா. அது மெகா கூல்!"

ஷாலினி சிரித்தாள். “ஏய் கிரண்! அணுசக்தி மெகா கூல் இல்லைடா, அது மெகா ஹாட். உன்னை அப்படியே உருக்கிடும் ஜாக்கிரதை!"

யாவ்னா மீண்டும் கைகொட்டி கிண்கிணித்தாள். "ரொம்ப நல்லா சொன்னே ஷாலினி. மெகா ஹாட்தான்" என்று கூறிவிட்டு, தன் விளக்கத்தைத் தொடர்ந்தாள். நான் முதல்ல பழைய உப்பகற்றல் தள நுட்பத்தைப் பத்தி சொல்றேன். அப்புறம் அதோட சக்தி உற்பத்தியையும் எப்படி சேர்த்துச் செய்யறாங்கன்னு சொல்றேன்."

கிரண் மீண்டும் இடைமறித்தான். "சக்தி செலவழிக்கற உப்பகற்றலோட சேர்த்து சக்தி உற்பத்தியுமா! வாவ், இது பிரமாதமான டூ-ஃபார்-ஒன் டீலா இருக்கும் போலிருக்கே. கின்ஸூ கத்தி விளம்பரம் மாதிரி. நீங்க இப்பவே வாங்கினா இந்த கத்தியோட சேர்த்து இந்தக் கூர்மையாக்கற சாதனமும் இலவசம், உடனே கூப்பிடுங்க!" என்று தொலைக்காட்சிகளில் வருவதுபோல் ஏற்ற இறக்கத்துடன் கூறவே எல்லோரும் பலமாகச் சிரித்தனர்.

யாவ்னா "ரொம்ப தமாஷா இருக்கு கிரண்!" என்று பாராட்டிவிட்டுத் தொடர்ந்தாள்.

"முதலாவது, வேக்குவம் உதவியோடு செய்யற குறைவெப்ப உப்பகற்றல் (low temperature desalination). அதாவது, காற்றழுத்தம் குறையும் பொழுது, தண்ணீர் குறைஞ்ச வெப்ப நிலையிலேயே கொதிச்சு ஆவியாகுது. சாதாரண இப்ப நாம இருக்கற அறை வெப்ப நிலையிலேயே கூட ஆவியாக்க முடியும். இந்த மாதிரியான நுட்பம் அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகளில உப்பகற்றலுக்குப் பயன்படுது. அது மட்டுமில்ல... இந்தியாவுல சென்னை கடல்கரை கிட்டக்கூட ஓர் ஆராய்ச்சி ரீதியான குறை வெப்ப உப்பகற்றலுக்கான மிதக்கும் தளம் ஒரு நாளுக்கு மில்லியன் லிட்டர்கள் உற்பத்தி செய்யக்கூடிய திறனுடன் இயங்குது."

கிரண் ஆரவாரித்தான். "நீட்டோ ! எங்க அப்பா தன் சொந்த ஊர்ல இப்படிப்பட்ட நுட்பம் இருக்குன்னு தெரிஞ்சா பூரிச்சே போயிடுவார். என்ன ஷால்?"

ஷாலினி புன்னகையுடன் தலையாட்டி ஆமோதிக்க, யாவ்னா தொடர்ந்து விளக்கினாள். "நாம இதுவரைக்கும் பேசினது, வெறும் உப்பகற்றலுக்கு மட்டும் பயன்படுத்தறதுதான். ஆனா, சில தளங்கள் உப்பகற்றலையும் மின்சக்தி உற்பத்தி செய்யறதையும் சேர்த்தே செய்யறாங்க!"

கிரண் எக்களித்தான். "ஆஹா நான் முன்னமே சொன்ன மாதிரி டூ-இன்-ஒன்! சாக்கலேட், வனில்லா ரெண்டும் சேர்த்து வர்ற கோன் ஐஸ்க்ரீம் மாதிரி இருக்கே!"

யாவ்னா புன்னகையுடன் தொடர்ந்தாள். "ஐஸ்க்ரீம் கூல், குளிர்ந்ததாச்சே? இது ரொம்ப சூடு. அதுமட்டுமில்ல கிரண், நீ கேட்ட மாதிரியான கூல் ந்யூக்ளியர், ஹூம், இல்லை இல்லை, ஹாட் ந்யூக்ளியர் சக்தியையும் அதோட சேத்து பயன்படுத்தறது அதுல ஒரு வகை!"

கிரண் ஆர்வத்துடன், "யா, யா, அணு மின்சக்தி பத்தி மேல இன்னும் சொல்லு!" என்று தூண்டினான். சூர்யாவும் யோசனையுடன் தலையாட்டி மேலே தொடருமாறு சைகை செய்ய, ஷாலினியும் ஆர்வத்துடன் கவனம் செலுத்தினாள்.

யாவ்னா தொடர்ந்தாள். "உப்பகற்றலும் சக்தி உற்பத்தியும் சேர்ந்து செய்யறது உலகில பல இடத்துல நடக்குது. பெட்ரோலியம் அதிகமாகக் கிடைக்கும் மத்திய கிழக்காசிய நாடுகளில அந்த எரிபொருளையே பயன்படுத்தி மின்னுற்பத்தி நடக்குது. அப்போது உற்பத்தியாகும் வெப்பத்தையேப் பயன்படுத்தி உப்புத்தண்ணீரை ஆவியாக்கித் தூய தண்ணீர் ஆக்கறாங்க. பெட்ரோலிய எரிபொருள் அதிகமில்லாத ஜப்பான், இந்தியா போன்ற இடங்களில அணுமின்சக்தி நிலையங்களோட சேர்த்து குடிநீர் உற்பத்தி செய்யறாங்க.

சூர்யா குறுக்கிட்டு வினாவினார். "எந்த மாதிரி அனல் சக்தி பயன்படுத்தி மின்னுற்பத்தி செஞ்சாலும் அதோட நீராவி எடுத்து குடிநீர் தயாரிக்கலாம் இல்லையா?"

யாவ்னா ஆமோதித்தாள். "சரியா சொன்னீங்க சூர்யா! எந்த மாதிரி சக்தி வச்சு செய்யற மின்னுற்பத்தியின் போது உருவாகற வெப்பத்துலயும் தூய நீர் உற்பத்தி நடக்க முடியும். முன்னாடி வீணாகிக்கிட்டிருந்த வெப்பத்தைப் பல மின் நிலையங்களிலயும் இதுக்குப் பயன்படுத்தறாங்க. உம்... இதுல இன்னொரு சுவாரசியமான விஷயம். அமெரிக்க கடற்படையில இப்ப அணுசக்தியில ஓடற விமானந்தாங்கிக் கப்பல்களிலெல்லாம் ஒரு நாளுக்கு ஒண்ணரை மில்லியன் லிட்டர் அளவுக்கு இந்த மாதிரி குடிநீர் உற்பத்தி வசதியிருக்கு."

கிரண் ஆரவாரித்தான். "ஆஹா, இதுல எனக்குப் பிடிச்ச ரெண்டு கூல் விஷயம் சேர்ந்திருக்கு. அணுசக்தி மட்டுமில்லாம, விமானந்தாங்கிக் கப்பல். பிரமாதம். அடுத்த தடவை ஸான் ஃப்ரான்ஸிஸ்கோவுல கப்பல் விஜய வாரம் (fleet visit week) வர்றப்போ ..."

ஷாலினி அவனது கனவை இடை மறித்துக் கலைத்தாள். "போதுமே கிரண். நீயும் உன் போர் விமானங்களும்! நல்ல விஷயமா பேசலாம். யாவ்னா, நீ முன்னாடி ஜப்பான்ல குறைந்த வெப்ப உப்பகற்றல் நடக்குதுன்னு சொன்னே. இப்போ அணுமின்ச்கதியில நடக்குதுங்கறயே, எப்படி? புரியலையே?"

யாவ்னா தலையாட்டிக் கொண்டு விளக்கினாள். "விளக்கறேன். மின்சக்தியோட குடிநீரும் உற்பத்தி செய்யறது, சூர்யா சொல்றது போல் வெப்பத்தைப் பயன் படுத்தறதுதான். வெப்பத்தினால குடிநீரை அதிக வெப்பத்துல கொதிக்க வைக்கலாம். அல்லது மின்சக்தியைப் பயன்படுத்தி வேக்குவம் செஞ்சு குறைவெப்பத்துலயும் கொதிக்க வைக்கலாம். முக்கியமான விஷயம், மின்சக்தி, குடிநீர் ரெண்டையும் சேர்த்து செய்யறது. கொதிக்க வைக்கறது மட்டுமில்ல, இப்பெல்லாம், இந்த மாதிரியான உடனுற்பத்தி (co-generation) நிலையங்களில, எதிர்ச் சவ்வூடு பரவல் (reverse osmosis) போன்ற மற்ற நுட்பங்களையும் சேர்த்து உப்பகற்றல் அளவை அதிகரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதுனால ஜப்பான் மாதிரி இடங்களில இந்த முறைகள் எல்லாமே இருக்குன்னுதான் சொல்லணும்."

சூர்யா தலையாட்டி யோசித்துக் கொண்டு வினாவினார். "சரி, இந்த முறைகள்தான் பெருமளவில ஏற்கனவே பயன்படுத்தப் படுதுங்கறீங்க. அப்போ புது நுட்பங்கள் என்ன, நீங்க ஆராய்ஞ்சுக்கிட்டிருக்கற, இப்ப பிரச்சனைக்குள்ளாயிருக்கற நுட்பம் என்ன?"

யாவ்னா பாராட்டினாள். "சரியா விஷயத்த்துக்கு வந்தீங்க சூர்யா. அடுத்தது அதைப்பத்தி சொல்றேன் வாங்க" என்று சொன்னவள், சட்டென்று நிறுத்திவிட்டு பரபரப்பாகக் கூவினாள். "ஓ! அதை நான் சொல்றதை விட, எங்க நிறுவனர் தாமஸ் மார்ஷ், அவரே இங்க வந்துட்டாரே. அவர் சொன்னாத்தான் இன்னும் நல்லா இருக்கும்” என்றாள்.

அவள் காண்பித்த நபரின் தோற்றமும், அவர் கூறிய விஷயங்களும், அவரை அதிரடித்த சூர்யாவின் யூகங்களும் மிகப் பிரமாதமாக இருந்தன!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com