கோனாபட்டு கோவிந்தனின் ஆசை
கோனாபட்டு என்ற ஊரில் கோவிந்தன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு வேண்டிய அளவு செல்வம், நிலபுலன், வாழ்க்கை வசதி எல்லாமே இருந்தது. ஆனாலும், மாயாஜாலங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு இருந்தது.

எனவே அவன் அதுபற்றி அடிக்கடித் தன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான். நண்பர்களோ, அவனிடம், "இதோ பார். நீ இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ முயற்சி செய். உனக்கு வயதான பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள்

இருக்கிறார்கள். அவர்கள் நலனில் அக்கறை கொள். உன்னைவிடக் கீழான நிலையில் உள்ளவர்களுக்கு உதவு. அதை விடுத்து மாயம் மந்திரம் என்று உன் நேரத்தை விரயம் செய்யாதே!" என்று அறிவுரை சொன்னார்கள். ஆனால் கோவிந்தன்

அதைக் கேட்கவில்லை. ஒருநாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினான்.



காடு, மலைகள் எல்லாம் சுற்றினான். பல இடங்களில் அலைந்து திரிந்தான். பல மாதங்கள் கழிந்தன. ஆனாலும் பலனில்லை. அவனுக்கு மந்திரச் செயல்களைச் சொல்லித் தர யாருமே வரவில்லை. சோர்வுடன் ஒருநாள் காட்டில் உள்ள

மரத்தடி ஒன்றில் அவன் அமர்ந்திருந்தபோது முனிவர் ஒருவர் அங்கே வந்தார். அவரைக் கண்டு வணங்கிய கோவிந்தன், தன் ஆசையையும், அது நிறைவேற்றத் தான் பல மாதங்கள் அலைந்து திரிந்ததையும் கூறினான். எப்படியாவது அவர்

தனக்கு உதவ வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

அவன் சொன்னதைக் கேட்ட முனிவர், "என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்? உதாரணத்துக்கு ஒன்று சொல்" என்று கேட்டார்.

"நான் நீரின்மேல் நடக்க வேண்டும். அந்த ஆற்றலை மட்டும் நீங்கள் எனக்குத் தந்தால் போதும்" என்றான்.

மீண்டும் நகைத்த முனிவர், "அப்பா, நீரின்மேல் நடப்பதைத்தான் நீ பெரிய அதிசயமாக, சாதனையாக நினைக்கிறாயா? உண்மையான ஆற்றல் என்பது நீரின்மேல் நடப்பது அல்ல. அந்த நீரே நீ நடப்பதற்கு வழி விடுவதுதான். உனக்கென்று

உள்ள கடமைகளை நீ ஒழுங்காகச் செய்து வந்தால் எல்லா ஆற்றல்களும் தாமே உன்னைத் தேடி வருமே!" என்றார்.

முனிவர் சொன்னதில் உள்ள உண்மையைச் சிந்தித்துப் பார்த்தான் கோவிந்தன். தன்னைக் காணாமல் பெற்றோர், மனைவி, குழந்தைகள் எல்லாம் எவ்வளவு துயரம் அடைந்திருப்பர் என்பதை நினைத்ததும் அவனுக்கு துக்கமாகி விட்டது.

"முனிவரே, தன் கடமைகளை ஒருவன் சரிவரச் செய்வதே உண்மையான சாதனை என்பதைக் கண்டு கொண்டேன். அதை உணர்த்திய உங்களுக்கு என் நன்றி" என்று சொல்லிவிட்டுக் கோனாபட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

சுப்புத் தாத்தா

© TamilOnline.com