கா. அப்துல்கபூர்
கவிமணி தொடங்கி அழ.வள்ளியப்பா, வாண்டுமாமா, கல்வி கோபாலகிருஷ்ணன், பூவண்ணன், ரேவதி, பூதலூர் முத்து எனப் பலர் தமிழில் சிறுவர் இலக்கியத்துக்குச் சிறந்த பங்களிப்புகளைத் தந்துள்ளனர். கல்விப் பணியோடு இவ்விலக்கிய வகையின் வளர்ச்சிக்கும் நல்ல பங்களிப்பைத் தந்திருப்பவர் பேரா. கா. அப்துல்கபூர். இவர் கன்னியாகுமரி அருகே உள்ள திருவிதாங்கோட்டில் காட்டு பாவா சாஹிப்-முகமதம்மாள் தம்பதியினருக்கு, மே 25, 1924 அன்று மகனாகப் பிறந்தார். தக்கலை உயர்நிலைப் படிப்பில் மலையாளத்தை முதல் மொழியாகவும், அரபியை இரண்டாவது மொழியாகவும் எடுத்துத் தேர்ந்தார். இண்டர்மீடியட் படிக்கும் போதுதான் அவருக்குத் தமிழ் அறிமுகமானது. தமிழின் சிறப்பும், நுண்மையும் அவரைப் பெரிதும் கவரவே ஆர்வமுடன் கற்றார். உறவினரும் நண்பருமான 'உமர்க்கண்' என்பவர் நடத்திய 'நண்பன்' என்னும் கையெழுத்துப் பத்திரிகையில் கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அதே இதழ் அச்சு வடிவம் பெற்றபோது அதன் கௌரவ ஆசிரியராகவும் அப்துல்கபூர் பணியாற்றினார்.

தமிழார்வத்தால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் வகுப்பில் சேர்ந்த இவர் முதல் மாணாக்கராக வெளிவந்தார். அக்காலத்தில் இவருடன் பயின்ற மாணவர்கள் க. அன்பழகன், நெடுஞ்செழியன், மதியழகன், பி.சி.அலெக்ஸாண்டர் போன்றோர். பயிலும் காலத்தில் அண்ணா, பாரதிதாசன் போன்றோருடன் ஏற்பட்ட தொடர்பு இவரது தமிழார்வத்தை விரிவுபடுத்திற்று. 22ம் வயதில் அரசினர் முஸ்லிம் கல்லூரியில் (இன்றைய காயிதேமில்லத் கல்லூரி) தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1947ல் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்த்துறை பொறுப்பேற்றுக் கொண்டார். அக்கால கட்டத்தில் வாணியம்பாடியில் உருது மொழிக் கவியரங்குகள் அடிக்கடி நடைபெற்று வந்தன. அதனைப் பார்த்த அப்துல்கபூர், சக பேராசிரியர்களின் உறுதுணையுடனும், மாணவர்களின் ஆதரவுடனும் தமிழ்க் கவியரங்குகளை நடத்த ஆரம்பித்தார்.

1952வரை வாணியம்பாடி கல்லூரியில் பணியாற்றிய அப்துல்கபூர், அதன் பின் திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் கீழ்த்திசை மொழித்துறைத் தலைவராகப் பணியாற்றத் தொடங்கினார். 'சிற்பி' பாலசுப்ரமணியம், மணவை முஸ்தபா போன்றோர் அக்காலத்தில் அவர்தம் மாணாக்கர்களாக விளங்கினர். மாணவர்களின் உள்ளம் கவர்ந்த அப்துல்கபூர் சிறந்த சொற்பொழிவாளரும் கூட. மலையாளம், அரபி, உருது, ஆங்கிலம், தமிழ் எனப்
பன்மொழித் தேர்ச்சி அவரது கருத்து விரிவாக்கத்துக்கு உறுதுணையாய் அமைந்தது. இவரது முதல் நூலான 'நாயகமே...' 1954ல் இலங்கையில் உள்ள திருக்குர் ஆன் இயக்கத்தினரால் வெளியிடப் பெற்றது. இவரது சொற்பொழிவுகளை திருசசி வானொலி நிலையம் தொடர்ந்து ஒலிச்சித்திரங்களாக ஒலிபரப்பியது. பின்னர் அவை தொகுக்கப்பெற்று 'இலக்கியம் ஈந்த தமிழ்' என்ற நூலாக வெளிவந்தது. கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், கவிதை, உவமை, வரலாறு என பலவற்றின் தொகுப்பாக அமைந்த அந்நூல் கற்றோரால் பெரிதும் வரவேற்கப்பட்டது. தொடர்ந்து பல நூல்களை எழுதினார்.

அப்துல்கபூரின் மனைவி பெயர் ஜமீலா பீவி. தமக்குப் பிறந்த மகவுக்குத் தான் பணியாற்றிய கல்லூரி நிறுவனத் தலைவர் நினைவாக ஜமால் முகமது என்று பெயரிட்டார். 1956ல் மதுரை உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் சௌதிய்யா கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர், அதன் பின் கல்லூரி முதல்வராக உயர்ந்தார். கல்லூரி முதல்வராய்ப் பணியாற்றிய முதல் தமிழ்ப் பேராசிரியர் கா. அப்துல்கபூர்தான். இதன் பின்னர்தான் சி. இலக்குவனார், வ.சுப. மாணிக்கம் போன்றோர் முதல்வராகப் பொறுப்பேற்றார்கள். அடுத்து, தஞ்சை மாவட்டத்தின் புகழ்பெற்ற கல்லூரியான காதர் முகையதீன் கல்லூரியில் 1962 முதல் 67 வரை தமிழ்த்துறைத் தலைவராகவும் முதல்வராகவும் பொறுப்பு வகித்தார். பல்வேறு கூட்டங்களில் பேசிய இவரது பேச்சால் கவரப்பெற்ற அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் கல்வியாளருமான நெ.து. சுந்தர வடிவேலு, "நான் எத்தனையோ சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். அப்துல்கபூர் நிகழ்த்திய சொற்பொழிவைப் போன்று வேறு எங்குமே கேட்டதில்லை" என்று புகழ்ந்துரைத்திருக்கிறார்.

மாணவர் நலனுக்காகவும், இளைஞர் கல்வி அறிவு வளர்ச்சிக்காகவும் தன்னலமற்று உழைத்த அப்துல்கபூரின் உள்ளம் சிறார் நலன் குறித்துச் சிந்தித்தது. வளரிளம் பருவத்தில் உள்ள சிறுவர்களுக்கு தக்க வழி காட்டி அவர்களை உயர்த்துவதே இனித் தனது நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் உறுதி பூண்டார். அந்நிலையில் சேத்துப்பட்டில் அமைந்திருந்த பிறைப்பள்ளி எனப்படும் சிறார் பள்ளியில் முதல்வர் பதவி ஏற்க அழைப்பு வந்தது. கல்லூரி முதல்வர், ஒரு சாதாரணப் பள்ளிக்கு முதல்வராகச் செல்வதா என நினைக்காமல், சிறார்தம் வாழ்க்கை உயர்த்தும் நோக்கத்துக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகவே அதைக் கருதி அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார் பின்னர் அப்பள்ளி வண்டலூர் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்த அப்துல்கபூர், அவர்களுக்கெனப் பல கதைகளையும், பாடல்களையும் எழுதினார். அவை பின்னர் தொகுக்கப்பெற்று 'அரும்பூ' என்னும் பெயரில் நூலாக வெளியாகின. அதேசமயம் இஸ்லாமிய சமயம் சார்ந்த பல்வேறு பணிகளையும் மேற்கொண்டார். இவர் எழுதிய இஸ்லாமிய பக்திப் பாடல்கள், பிரபல பாடகர் நாகூர் அனிபாவால் பாடப்பட்டு 'ஹஸ்பிரப்பி ஜல்லல்லாஹ்' என்னும் பெயரில் இசைத்தட்டு வடிவம் பெற்று பலத்த வரவேற்பைப் பெற்றது. 1971ல் இவர் வெளியிட்ட 'இறையருள் மாலை' என்னும் தெய்வீகத் துதிநூல் வெளியீட்டு விழாவில், ஊர் மக்களால் இவருக்கு 'இறையருட் கவிமணி' என்னும் பட்டம் வழங்கப்பட்டது. 1974 வரை பிறைப்பள்ளி முதல்வராகப் பல அரும்பணிகளை மேற்கொண்ட அப்துல்கபூர், பின் கும்பகோணம் மாவட்டத்து இஸ்லாமியப் பெருமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, அங்கு உருவாக்கப்பட்ட அல் அமீன் உயர்நிலைப்பள்ளியில் நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் மிகுந்த சமயப்பொறை உடையவராக விளங்கினார் அப்துல் கபூர்.

"பொற்சைவ வைணவமும்
புத்தபிரான் பொன்னுரையும்,
....
நாயன்மார் நாவமுதும்
நல்லாழ்வார் பாசுரமும்.."

எனப் பிற சமயங்களையும் சான்றோர்களையும் தனது கவிதைகளில் புகழ்ந்து பாடியுள்ளார். இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சொற்பொழிவாற்றியுள்ளார். அப்துல்கபூர் பற்றி சிற்பி, "நெஞ்சை வருடும் கவிஞராய், நல்லறிஞராய்த் தமிழகம் அப்துல்கபூர் அவர்களை அறிந்திருக்கிறது; மாணவர் உலகம் நேசித்திருக்கிறது" என்கிறார். மணவை முஸ்தபா, "இலக்கிய மேடைகளில் இஸ்லாமிய இலக்கியங்களை மக்கள் விரும்பிக் கேட்கும் வகையில் எடுத்துச் சொல்லி வந்த பெருமை பேராசாரியர் கா. அப்துல்கபூர் சாகிப் அவர்களுக்கு உண்டு. இதற்குப் பெருந்துணையாக அமைந்தது அவரது எடுப்பான தோற்றமும், துள்ளுதமிழ் நடைப்பேச்சும், சொல்லும் முறையுமாகும்" என்கிறார்.

உடல்நிலை கருதி பணிப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அப்துல் கபூர், படைப்பிலக்கியத்தின் மீது தனது கவனத்தைச் செலுத்தினார். இஸ்லாமியர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் "மதிநா" என்னும் திங்களிதழைத் தொடங்கி நடத்தினார். வெறும் சமயக் கட்டுரைகளை மட்டும் வெளியிடாது இஸ்லாமியர் வாழ்வில் பின்பற்ற வேண்டிய நன்னெறிகள், சிந்தனைகள், கட்டுரைப் போட்டிகள், சிறுகதைப் போட்டிகள் இவற்றோடு தோப்பில் முகமதுமீரான் போன்றோரது சிறுகதைகளையும் வெளியிட்டு இதழை ஓர் இலக்கியப் இதழுக்கு நிகராக உயர்த்தினார். "அபூ ஜமால்" என்ற பெயரில் சிறுவர் படைப்புகள் பலவற்றையும் தொடர்ந்து வெளியிட்டார். சுமார் பத்தாண்டுகள் இவ்விதழ் வெளிவந்தது. இவ்விதழ் பற்றி கி.வா.ஜ, "இறையுணர்வை உணர்த்துகின்ற அருமைக் கொள்கை குறைவிலதாய்க் கொண்டுள்ள இத்திங்களிதழ் என்றும் கொழித்து வாழ்க" என வாழ்த்தியுள்ளார்.

உடல் நலிவுற்றதால் தன் சொந்த ஊருக்குத் திரும்பிய அப்துல்கபூர், திருவனந்தபுரத்தில் உள்ள திராவிட மொழியியல் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாகச் சிலகாலம் பணியாற்றினார். பின் தக்கலையில் உள்ள தமது இல்லத்தையே நூலகமாக்கி, ஓய்வு நேரத்தைப் படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிட்டார். இக்கால கட்டத்தில் இவர் உருவாக்கிய 'மிக்க மேலானவன்' நூல் ஆன்மீக, அறிவியல் துறை அறிஞர்களால் பெரிதும் போற்றப்பட்டது. 7 உரைநடை நூல்கள், 12 கவிதை நூல்கள், ஒரு குழந்தைப் பாடல் நூல், ஒரு பிரார்த்தனை நூல் ஆகியவற்றைப் படைத்துள்ள அப்துல்கபூரின் நூல்கள் சொல்லாழமும், பொருட்சுவையும் மிக்கவை. 'இலக்கியம் ஈந்த தமிழ்' என்னும் நூல் சென்னை, அண்ணாமலை, கேரள பல்கலைக்கழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டது. 'இஸ்லாமிய இலக்கியம்', 'வாழும் நெறி இஸ்லாம்', 'இனிக்கும் இறை மொழிகள்', 'அறவாழ்வு' போன்றவை இவரது குறிப்பிடத்தக்க நூல்களாகும். இவரது குழந்தைப் பாடல்கள், சொற்சுவையும் பொருட்சுவையும், ஓசை நயமும் மிக்கனவாய் அமைந்துள்ளன . இந்நூல் பற்றி டாக்டர் இராசம்மாள் தேவதாஸ், "குழந்தை இலக்கியத்திற்குத் தேவையான அத்துணை பொருட்பொலிவும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. குழந்தைகள் உடல், உள்ளம், உயிர் மூன்றும் மகிழ்ச்சி அடைய இது ஒரு அருமையான படைப்பு. இம்மாதிரிப் பாடல்களை எல்லாக் குழந்தைகளும் ருசித்து அனுபவிக்க வேண்டும். ஆகவே எல்லாப் பள்ளிகளிலும் குறிப்பாக மழலைப் பள்ளிகளில் உள்ள நூலகங்களில் இந்நூல் இடம்பெற வேண்டும்" என்கிறார்.

நூலின் சிறப்புக்குச் சான்றாக கீழ்கண்ட சில பாடலகளைச் சுட்டலாம்.

"கலகல கலகல கண்ணம்மா!
கண்ணைத் திறந்து பாரம்மா
கிலுகிலு கிலுகிலு கிட்டப்பா
கிலுகிலுப்பையைத் தட்டப்பா!"

"அலைவதினால் அலையாகும்
திரள்வதினால் திரையாகும்"

போன்ற பாடல்கள் குழந்தைகளின் சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளன.

"இறையருட் கவிமணி, இலக்கிய மாமணி:
அப்துல் கபூரை அறியார் எவருளர்
கம்பீரமான கவிதைக் குயில் அது
களங்கமில்லா பௌர்ணமி நிலவது"

என்று புகழ்ந்துரைக்கிறார் கவிஞர் மு. மேத்தா.

தமிழ்ப்புலவர் குழு உறுப்பினர், இலக்கிய ஆட்சிக் குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகள் வகித்திருக்கும் அப்துல்கபூர், தீன்வழிச் செம்மல், தமிழ்ச் செம்மல் உட்படப் பல பட்டங்களையும் பெற்றிருக்கிறார். கலிஃபோர்னியாவின் அனைத்துலகக் கலைப் பண்பாட்டு மையம் இவரது தமிழ்ச் சேவையைப் பாராட்டி 1992ல் டி.லிட் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தமிழுக்கும் இஸ்லாமிய சமயத்திற்கும் பல்வேறு பணிகள் ஆற்றிய அப்துல்கபூர் ஜனவரி 11, 2002 அன்று தமது 78ம் அகவையில் காலமானார். தமிழ்த் தொண்டாற்றிய இஸ்லாமியர்களுள் பேராசிரியர் அப்துல்கபூருக்கு மிகமுக்கிய இடமுண்டு.

(தகவல் உதவி: ஹ.மு. நந்தர்சா எழுதிய 'இந்திய இலக்கியச் சிற்பிகள், கா. அப்துல்கபூர்', சாகித்திய அகாதமி வெளியீடு)

பா.சு.ரமணன்

© TamilOnline.com