உலகில் மூன்று ஆப்பிள்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினவாம். ஆதாம் ஏவாளின் ஆப்பிள். புவியீர்ப்பு சக்தியை நியூட்டனுக்கு உணரவைத்த ஆப்பிள் இரண்டாவது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினியை உருவாக்கித் தந்து, ஐஃபோன், ஐபேட் போன்ற சாதனங்களையும் தந்து இன்று இணையத்தை எப்படி அணுகுகிறோம் என்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ஆப்பிள் (நிறுவனம்) மூன்றாவது. நியூட்டனுக்கும் ஃபோர்டுக்கும் நிகராக ஸ்டீவ் ஜாப்ஸை கூறுகிறார்கள் அமெரிக்கர்கள். அவரது மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் ஆப்பிள் சாதனங்களின் பயனாளர்கள், குவியும் இரங்கல் செய்திகள் போன்றவை வேறு யாருக்கும் கிட்டாதவை. தகவல் தொழில்நுட்பக் காரர்களுக்கு மட்டுமல்லாமல், தனது ஐபேட், ஐஃபோன், ஐபாட் போன்ற சாதனங்கள் மூலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்திருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவு எல்லா வயதினருக்கும் இழப்பே. ஜனவரியன்று எக்ஸான் மோபில், பெட்ரோ சைனாவுக்கு நிகரான சந்தை மதிப்பை எட்டியிருந்த ஆப்பிள் அவற்றை முந்தி, உலகின் அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாக ஆனது மிகப்பெரிய சாதனை. அதற்குக் காரணகர்த்தா ஸ்டீவ் ஜாப்ஸூம் அவர் படைத்த உன்னதமான சாதனங்களும்தான்.
அவரது சுயசரிதை வெளிவந்துவிட்டது. 2005ல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையின் பட்டமளிப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த ஸ்டீவ் ஜாப்ஸின் சிறப்பான பேச்சு யூட்யூபில் இருக்கிறது. கிட்டத்தட்ட தொண்ணூற்றிரண்டு லட்சம் பேர் இதுவரை அந்தப் பேச்சைப் பார்த்திருக்கிறார்கள், கேட்டிருக்கிறார்கள். அவரது வாழ்விலிருந்து மூன்று முக்கிய விஷயங்களை அந்தப் பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். கல்லூரிப் படிப்பைக் கால்வாசி கூட முடிக்காமல் விட்டது உட்பட அவர் பட்ட கஷ்டங்களை விவரித்திருக்கிறார். காலி கோக் பாட்டில்களைச் சேகரித்து (ஒவ்வொரு பாட்டிலுக்கும் ஐந்து சென்ட் கிடைக்கும்) அதில் கிடைக்கும் சொற்ப பணத்தை வைத்து தினமும் முழுதாக ஒருவேளை உணவுகூட உண்ண முடியாமல் அரைகுறையாகச் சாப்பிட்டு நண்பர்களின் அறைகளில் தரையில் படுத்துத் தூங்கிக் காலத்தை ஓட்டியிருக்கிறார். ஞாயிற்றுக் கிழமைகளில் ஹரே கிருஷ்ணா கோவிலில் கிடைக்கும் சாப்பாட்டுக்காக ஏழு மைல் நடந்திருக்கிறார்.
இருபது வயதில் தனது வீட்டின் கராஜில் நாமெல்லாரும் இன்று பயன்படுத்துகிற personal computer ஒன்றை உருவாக்கினார் ஸ்டீவ். முப்பது வயதில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு பில்லியன் டாலர் மதிப்பையும் நான்காயிரம் பணியாளர்களையும் எட்டுகிறது. பத்து வருஷத்தில் அதைச் சாதித்திருக்கிறார்! புகழின் உச்சியில் ஸ்டீவ். அவரால் கொணரப்பட்ட (பெப்ஸியிலிருந்து) ஜான் ஸ்கல்லிக்கும் அவருக்கும் ஒத்துப்போகாமல் நிறுவன இயக்குநர்கள் (Board of Directors) ஜானை ஆதரித்து, ஆப்பிளிலிருந்து ஸ்டீவை நீக்கினார்கள். ஒரு நிறுவனத்தின் நிறுவனரே வேலையிழப்பது அமெரிக்காவில்தான் நடக்கும்போல. மறுபடி தொடக்கத்திலிருந்து வர வேண்டிய சுமையற்ற நிலையாக அதை எடுத்துக்கொண்டு NEXT என்ற நிறுவனத்தைத் துவங்கி நடத்தினார். ஆப்பிள் பிறகு நெருக்கடியில் தத்தளிக்க மறுபடி அவர் நிறுவனத்தின் முதன்மை அலுவலர் பணிக்கு அழைக்கப்பட்டார். இது நடந்தது 1996ல். இதற்கிடையே பிக்ஸர் அனிமேஷன் ஸ்டூடியோவையும் துவங்கி வெற்றிகரமாக நடத்தினார். ஸ்டீவின் மறுபிரவேசம் ஆப்பிளுக்கு புனர்ஜன்மம் அளித்தது. அன்று ஆரம்பித்தது ஆப்பிளின் வெற்றிப் பயணம். இன்றைக்கு உலகின் அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாக வந்து நின்றிருக்கிறது. இது யாரும் செய்யாத சாதனை.
ஆரம்ப காலத்தில் மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸூடனான ஸ்டீவின் நட்பு, வலது கரமான ஸ்டீவ் வூஸ்னியாக் (இன்னும் இவர் ஆப்பிளில் இருக்கிறார்) ஆகியோரைச் சுற்றி, அவர்களது ஆப்பிளின் எழுச்சி, வீழ்ச்சி, மைக்ரோசாஃப்டின் விஸ்வரூப வளர்ச்சிக்கான விதை என்று சுவாரஸ்யமான தகவல்களைப் பின்னி 1999-இல் வந்த Pirates of Silicon Valley படத்தை நீங்கள் மறந்திருக்க முடியாது. பார்க்காதவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய கற்பனை கலந்த ஆவணப்படம் அது. 1984-இல் ஆப்பிள் வெளியிட்ட சூப்பர் பௌல் விளம்பரத்தின் பின்னணியில் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகத் தோன்றுபவர் (நோவா வைல்) சொல்லும் வசனங்கள் சுவாரஸ்யமானவை ("இது வெறும் படமல்ல - எலக்ட்ரான்களைக் காந்த சக்தி மூலம் வடிவங்களாகவும், ஓசையாகவும் மாற்றுவதைக் காட்டும் படமல்ல - எங்கள் நோக்கம் உலக உருண்டையில் ஒரு நெளிவை ஏற்படுத்துவது - அதைச் செய்யாவிட்டால் பிறந்ததற்குப் பலனே இல்லை. ஒரு ஓவியரைப் போல, ஒரு கவிஞரைப் போல சிந்தனையை மாற்றும் சக்தியாக இருக்கப் போகிறோம். மனித எண்ணங்கள் குறித்த வரலாற்றை மாற்றி எழுதப் போகிறோம். அப்படித்தான் நாம் நினைத்துச் செயல்படவேண்டும்!"). அதற்குப் பின் வந்த எல்லா சூப்பர் பௌல் விளம்பரங்களுக்கும் முன்னோடியாக விளங்கியது ஆப்பிளின் 1984 மக்கின்டாஷ் அறிமுக விளம்பரம். அது எண்பதுகளில் வந்த சிறந்த விளம்பரமாக Advertising Age Magazine-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டதும்கூட. இன்னொரு சுவாரஸ்யமான காட்சி - 1971ல் பெர்க்லி பல்கலைக்கழக மாணவர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்படுவது - உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இரண்டு ஸ்டீவ்களும் (ஜாப்ஸ், வூஸ்னியாக்) ஓடி ஒதுங்கி மறைந்து கொள்வார்கள். ஜாப்ஸ் சொல்வார் "இவர்கள் தாம் புரட்சியாளர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாமல்லவா புரட்சியை ஏற்படுத்தப் போகிறவர்கள்!". கணினித் துறையில் ராட்சசனாக விளங்கிய ஐபிஎம்மின் ஓர் அறையளவு பெரிய, சாதாரணர்களால் பயன்படுத்த இயலாத பிரம்மாண்ட கணினிகளைச் சுருக்கி மேசைமேல் நாம் இப்போது உபயோகிக்கும் நாய்க்குட்டி மாதிரி கணினிகளைக் கொண்டுவந்து, கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்திற்குத் தாவி, Graphical User Interface (GUI) என்று இங்கு எல்லா சாதனங்களிலும் வியாபித்திருக்கும் திரையையும் கொண்டுவந்து, மௌஸ் என்ற வினோத வஸ்துவையும் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். ஆப்பிளின் தொழில்நுட்ப மூளை வூஸ்னியாக் என்றால், விற்பனை மூளை ஜாப்ஸ்.
ஸ்டீவ் ஜாப்ஸின் இளம்பிராயம் அவ்வளவு மகிழ்ச்சியானது அல்ல. மணமாகாத பதின்ம வயது கல்லூரிப் பெண்ணான அமெரிக்கர் ஜோவான் கரோலுக்கும் சிரியத் தந்தையான அப்துல் ஜன்டாலிக்கும் பிறந்த ஸ்டீவ் பிறந்ததும் க்ளாரா, பால் ஜாப்ஸ் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். தனது உண்மையான தாய் யாரென்று தெரியாமல் பல வருடங்கள் தேடியிருக்கிறார். தனக்குப் பிறந்த மகளையே தன் மகள் என்று ஒத்துக்கொள்ளாமல் வீம்பாகப் பத்து வருடங்கள் இருந்துவிட்டுப் பின்னர்தான் ஸ்டீவ் ஏற்றுக்கொண்டார். மகளுக்கு ஸ்டீவ் வைத்த லிஸா என்ற பெயரிலேயே பல கணினிகள் ஆப்பிளால் பின்பு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த லிஸாவில்தான் மௌஸ், வண்ணத்திரை எல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இது ஆப்பிளின் கண்டுபிடிப்பா? இல்லை. ஸ்டீவ் சொல்வதாக அப்படத்தில் வருவது "நல்ல ஓவியர்கள் காப்பியடிப்பார்கள். சிறந்த ஓவியர்கள் திருடுவார்கள்!". ஜெராக்ஸ் நிறுவனத் தொழில்நுட்ப வித்தகர்கள் கண்டுபிடித்ததுதான் GUI-ம் Mouse-ம். ஆனால் அவர்களுக்கே தமது கண்டுபிடிப்பின் அருமை தெரியாமல் போனது விசித்திரம். ஸ்டீவ் ஜாப்ஸையும் அவரது வித்தகர்களையும் ஜெராக்ஸ் அவர்களது ஆய்வகத்திற்கு அழைத்துக் கண்டுபிடிப்புகளைக் காட்டினார்கள். ஸ்டீவிற்கு அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற யோசனை உதித்து அப்படியே அதை அவரது ஆப்பிள் கணினியில் கொண்டுவந்து "லிஸா"வை அறிமுகப்படுத்தினார். அதன்மூலம் ஆப்பிள் ஈட்டிய வருமானம் 100 பில்லியன் டாலர்!
ஆத்ம தேடலில் உந்தப்பட்டு 1974-இல் இந்தியா வந்து சிறிது காலம் இருந்திருக்கிறார் ஸ்டீவ். இந்தியாவின் ஏழ்மை, சுகாதாரமின்மை, வறுமை போன்ற "நிஜங்கள்" முகத்திலறைந்து, இந்தியா குறித்து அவர் வைத்திருந்த பிம்பத்தை உடைக்கவே, மறுபடியும் கலிஃபோர்னியாவுக்குத் திரும்பிவிட்டார்.
ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் மிகச் சிறப்பாக இயங்கினாலும், மைக்ரோசாஃப்ட் போல அதிக அளவில் பயன்பாட்டுக்கு வராததற்கு முக்கிய காரணம், ஆப்பிளே அதற்குத் தேவையான வன்பொருள் (Hardware), மென்பொருள் இரண்டையும் தயாரித்து தன்னுடைமையாக வைத்திருப்பதுதான். அதனால் ஒரு கட்டத்தில் மலிவான கணினிகளோடு போட்டி போட முடியாமல், விற்பனை சரிந்து திவாலாகும் நிலைக்கு ஆப்பிள் வந்துவிட்டது. சாம்பலிலிருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல தனது ஐபாட் என்ற கையடக்கக் கருவியைச் சந்தையில் இறக்கி மீண்டெழுந்தது ஆப்பிள். ஐபாட் மூலம் அதுவரை வாக்மேன், ஸிடி, இசை சாதனங்கள் என்று கோலோச்சிய ஸோனி ஒலி சாம்ராஜ்யத்தின் ஆணிவேரை அசைத்தது. அறை முழுதும் அடையும் காஸட்கள், ஸிடிக்களைத் துறந்து ஆயிரக்கணக்கான பாடல்களை ரேஷன்கார்டைவிடச் சிறிய ஐபாடில் அடக்கியது பெரும் சாதனை. அதோடு நில்லாமல் ஆப்பிள் இணையக் கடைகளைத் திறந்து பாடல்களை தரவிறக்கம் செய்து ஐபாடில் ஏற்றும் வசதியையும் ஏற்படுத்த, அது ஆப்பிளின் புகழையும் விற்பனையையும் உச்சாணிக் கொம்பில் கொண்டு போய் வைத்தது.
பிறகு ஐஃபோன், ஐபேட் என்று இறக்கிய கதையையெல்லாம் தென்றல் ஜனவரி இதழில் வெளியான ‘முகத்தில் முகம் பார்க்கலாம்’ கட்டுரையில் பார்த்துவிட்டோம். பயனரின் அனுபவத்தை எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளே ஆப்பிள் அறிமுகப்படுத்திய அனைத்துச் சாதனங்களுக்கும் அடிநாதம். ஆப்பிள் சாதனங்களோடு தலையணையளவில் User Manuals எதுவும் வருவதில்லை. கணினியோ, ஐபாடோ, ஐஃ.போனோ, ஐபேடோ - ஸ்விட்சை அமுக்கி சில நிமிடங்களில் ஒரு குழந்தைகூடத் தானாக இயக்கிவிடும் மகா எளிமை, கவர்ச்சி, அடிக்கடி Ctrl+Alt+Del என்று செய்ய வேண்டியிருக்காதது, வைரஸ், ட்ரோஜன் குதிரை, குக்கீ என்று தலைவலியைத் தரும் தொல்லைகள் இல்லாதது என்பது ஆப்பிளின் பெரும் வெற்றிக்கும், ரசிகர் கூட்டத்திற்கும், புகழுக்கும் காரணம். ஆப்பிளின் புதுமை அறிமுகப்படலங்கள் பெரிய திருவிழா. ஆப்பிள் ஸ்டோர் ஆப்பிள் ரசிகர்களுக்குக் கோவில் மாதிரி.
அமெரிக்க கஜானாவைவிட ஆப்பிளிடம் அதிகப் பணம் இருக்கிறது என்பது பங்குச் சந்தை சரிந்த நாட்களில் மிகப்பெரிய செய்தியாக வலம்வந்தது. அவ்வளவு பணம் படைத்த நிறுவனத்தின் சார்பாக - போட்டியாளர் மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ் போல கோடிக்கணக்கான பணத்தை நற்காரியம் எதற்கும் ஸ்டீவ் செலவழிக்கவில்லை. இதைப் பெரிய பிரச்சினையாகவும் குற்றமாகவும் சாடியவர்கள் பலர். எல்லாருக்கும் ஸ்டீவின் பதில் "நான் ஒருவனின் பசிக்கு ஒருநாள் மட்டும் மீனை தானமாக அளிப்பதைவிட, அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதைச் சிறந்ததாகக் கருதுகிறேன்" என்பதே.
ஸ்டீவ் ஜாப்ஸ் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்லை. ஆனால் அனைத்து தரப்பட்ட மக்களையும் ஏதோ ஒருவிதத்தில் அவரது படைப்புகள் தொட்டிருக்கின்றன; அன்றாட செயல்பாட்டை எளிதாக்கியிருக்கின்றன. இணையத்தைக் கையடக்கக் கருவிகளில் கொண்டு வந்திருக்கின்றன. அவரது மறைவு நம்முள் சோகத்தை நிரப்புகிறது.
அவரது இறுதி நாட்கள் பற்றித் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மரணம் நெருங்குவதை உணர்ந்து கொண்டவர் இறுதிவிடை சொல்வதற்காகப் பெரிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து ஒவ்வொருவராக வீட்டுக்கு அழைத்து அவர்களுடனான வாழ்வின் தருணங்களைப் பகிர்ந்துகொண்டு, நன்றி கூறி அனுப்பியிருக்கிறார். கடைசி சில நாட்களில் குடும்பத்தினருடன் கழித்து அமைதியாக இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். ஒரு பொதுமேடையில் ஸ்டீவ் சொன்னது "வாழ்க்கையின் சிறந்த கண்டுபிடிப்பு மரணம்!"
மருத்துவ விடுப்பில் நீண்டகாலம் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு முதன்மை அலுவலர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதன் பிறகு ஸ்டீவை யாராலும் பார்க்க முடியவில்லை. அவரது மரணச் செய்தியை ஆப்பிள் அறிவித்தபோது, அது நிகழப்போகிறது என்று பலர் அறிந்திருந்தாலும், உலகம் அதிர்ச்சி அடைந்தது. ஃபேஸ்புக், ட்விட்டர், மின்னஞ்சல், வலைத்தளங்கள், இணையப் பக்கங்கள், மின்செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் என்று அனைத்துத் தகவலகங்களிலும் பயனர்கள், ரசிகர்கள், வல்லுநர்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று அனைவரும் பொதுவாக தெரிவித்த ஒரு செய்தி iSad.
வற்றாயிருப்பு சுந்தர், பாஸ்டன் |