தென்கலிஃபோர்னியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வாரப் பத்திரிகை India Journal. அமெரிக்காவாழ் இந்தியர்கள் துவங்கி நடத்தும் இந்தப் பத்திரிகையின் துணையாசிரியர் தமிழரான திருமதி நிம்மி ரகுநாதன். நிம்மி சமீபத்தில் பேட்டி கண்ட பிரமுகர் திரு ஜக்கி வாசுதேவ். கட்டுரையின் தலைப்பு 'Fired By Life'. தென்றலுடன் நிம்மி உரையாடியதை Fired By Life என்றே சொல்லலாம், அவ்வளவு விறுவிறுப்பாகப் பேசினார் அவர். அதிலிருந்து...
*****
காந்தி சுந்தர்: நீங்கள் பிறந்தது வளர்ந்தது பற்றி... நிம்மி: நான் பிறந்தது புது டில்லியில். வளர்ந்தது புனேயில். என் தந்தையின் பணி காரணமாக இந்தியாவில் இந்தூர், பெங்களூரு மற்றும் ஐரோப்பா போன்ற இடங்களில் வாழ்ந்திருக்கிறேன். பெர்க் கலியில் இதழியல் முடித்த பிறகு ஹவாயில் ஆய்வறிஞராகப் பணியாற்றிய படியே பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினேன். அப்போது இந்தியாவில் வெளிவரும் 'தி வீக்' பத்திரிகைக்குக் கட்டுரைகள் எழுதினேன். பிறகு திரு. ராஜ் ரகுநாதன் அவர்களோடு திருமணம் ஆகவே, தென்கலிஃபோர்னியாவில் வசிக்கத் துவங்கினேன். முதலில் இங்குள்ள பத்திரிகைகளின் சிறப்பிதழ்களுக்கு கட்டுரைகள் எழுதி அனுப்புவேன். பிறகு இந்தியா ஜர்னலில் முழுநேரப் பணியாளராகச் சேர்ந்தேன். தென் கலிஃபோர்னியாவில் அதிக சர்குலேஷனில் இருப்பது இந்தியா ஜர்னல். அதன் பதிப்பாளர் நவ்நீத் சுக் எனக்கு முழுமையான படைப்புச் சுதந்திரம் கொடுத்துள்ளார்.
கா: நீங்கள் பணிபுரிவது ஒரு வாரப் பத்திரிகையில். அதிலுள்ள சவால் என்ன? நி: ஒரு இதழை முடித்துவிட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த இதழுக்கான கெடு வந்துவிடும். தினசரி பத்திரிகையைக் காட்டிலும் வேலை நெருக்கடி குறைவு என்றாலும் கடகடவென நடப்பவற்றை கவனித்து, அவற்றைல் எதைப் பதிப்பது என்பதைத் தேர்வு செய்வதில் ஒரு சவால் உள்ளது. இப்போது கணினி, இணையம் எல்லாம் வந்துவிட்டதால், மக்கள் அனைத்துச் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டு விடுகிறார்கள். பத்திரிகை நடத்துவதே ஒரு சவாலாகி விட்டது.
கா: உங்கள் தொழிலில் உங்களுக்கென்ற வழிகாட்டித் தத்துவம் (Guiding Philosophy) என்று எதைச் சொல்வீர்கள்? நி: உண்மையைத் திரிக்காமல் உள்ளதை உள்ளபடி எழுதுவது. உதாரணத்திற்கு, ஒருவர் பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கிறார் என்பதால் மட்டும் அவரை மிகைப்படுத்தக் கூடாது. அவரது சாதனைகளைப் பொறுத்து அவற்றை எடுத்துக் கூறலாமே தவிர அவரை 'ஆஹா ஓஹோ' என்று புகழக் கூடாது. இதுவே என் கருத்து.
கா: ஒரு துணையாசிரியர் என்ற முறையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நி: நான் நமது தெற்காசிய மக்களின் சாதனைகள், எங்கள் ஊரில் நடக்கும் நிகழ்வுகள், பிரமுகர்களின் வருகை, பள்ளிச் செய்தி, தேர்தல் நிலவரம் போன்ற அனைத்துச் செய்திகளையும் தொகுத்து வழங்க வேண்டும். இதில் எனக்குத் துணையாக எனது குழுவினரும் சுயமாக இயங்கும் செய்தியாளர்களும் உள்ளனர். வியாழக் கிழமைக்குள் செய்திகளைப் பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமைக்குள் தொகுத்து, செவ்வாய்க்கிழமை அன்று அச்சாக வேண்டும். வாராவாரம் தவறாமல். தவிர, நானேயும் பிரபலங்களைப் பேட்டி காண்பதும் உண்டு.
கா: உங்கள் மனதில் பதிந்த சில பிரமுகர்கள்... நி: அண்மையில் திரு. ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் உரையாடியதை நான் மகிழ்வுடன் நினைவு கூர்கிறேன். திரு. டேனா ரோரா பேகர் என்ற அரசியல் பிரமுகர் என்னைக் கவர்ந்தவர்களுள் ஒருவர். சமீபத்தில் வெளிவந்த Cutting for Stone என்ற நாவலின் ஆசிரியர் திரு. ஏப்ரகாம் வர்கீஸ். இவர் எய்ட்ஸ் பாதிக்கப்ப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்ததைப் பற்றி ஒரு சமயம் என்னிடம் பேசியபோது, ஏற்பட்ட நெகிழ்வை இன்னும் என்னால் நினைவு கூர முடிகிறது. அதேபோல் சினிமாவில் பிரபலமான திருமதி. ஜெயா பச்சன், திருமதி. ஷபனா ஆஸ்மி ஆகியோரின் உரையாடல்களில் அவர்களது துல்லியம், உண்மையைப் பட்டென உடைக்கும் திறன், புத்திசாலித்தனம் போன்றவற்றைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
கா: இந்தத் தொழிலில் சில இனிய தருணங்கள்... நி: ஒவ்வொரு நிமிடமும் வித்தியாசமான இனிய தருணம்தான். பிரபலங்களைப் பேட்டி காணுதல், தேர்தல் நேரத்தில் களம் சூடு பிடித்தல் எல்லாமே புது அனுபவம்தான். நம் இந்தியர்களில் ஒரு சிலரே தேர்தலில் போட்டியிட்ட வந்தனர். இப்போது தேர்தலில் வேட்பாளர், பிரசாரகர், வோட்டாளர் என்று பலமுனைகளிலும் இந்தியர்களின் பங்கு அதிகரித்திருப்பதை நான் பார்க்கிறேன். சுனாமி, பூகம்பம் போன்ற நிகழ்வுகளின் போது ஏற்படும் சுமை, உதவி கேட்டு எங்கள் அலுவலகத்திற்கு வரும் பெண்களுக்கு உதவி கிட்டும் திசையைக் காண்பிக்கும் போது ஏற்படும் நிம்மதி, எல்லாமே இனிய அனுபவம் தான்.
கா: பத்திரிகை வாசகர்களின் அல்லது சமுதாயத்தின் நாடியை எப்படி உணருகிறீர்கள்? அதற்கேற்ப உங்கள் செயல்பாட்டில் என்ன மாற்றங்களைப் புகுத்துகிறீர்கள்? நி: எங்களுக்கு வரும் வாசகர் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் போன்ற தொடர்புகளே எங்களுக்கும் வாசகர்களுக்கும் இடையிலான வலுவான பாலம். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் வாசகர்களிடம் எதிர்பார்ப்பு வைப்பது என்பதற்கு அளவுகோல் கிடையாது. ஒரு நிறுவனத்தைப் பற்றிச் செய்தி வெளியிடும்போது அவர்களது மூலாதாரம் என்ன, இன்னார் தேர்தலில் இறங்கியுள்ளார் என்றால் அவரது பின்னணி என்ன போன்ற கேள்விகளை நாங்கள் எழுப்பும்போது வாசகர்களும் எங்களுடன் கை கோத்து அந்த உண்மைகளை ஆராய்ந்து தட்டிக் கேட்க உதவ மாட்டார்களா என்ற ஏக்கம் எங்களுக்கு வருவதுண்டு. மற்றொரு விஷயம் எந்தெந்தச் செய்தியைப் பிரசுரிக்காமல் தவிர்க்கலாம் என்பதை உணர்ந்து செயல்படுவதும் கூட நாம் வாசகர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதன் ஓர் அம்சம் என நான் நினைக்கிறேன்.
கா: தற்போதைய இளைஞர்களுக்குப் பத்திரிகைத் துறையில் எதிர்காலம் உள்ளதா? அவர்களை உங்கள் பத்திரிகை எவ்விதம் ஊக்குவிக்கிறது? நி: இளைஞர்களுக்கு, குறிப்பாக நம் இந்திய இளைஞர்களுக்குப் பத்திரிகைத் துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதிலும் டிஜிடல் ஜர்னலிஸம் (Digital Journalism) பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும் துறை என்பதை அவர்கள் உணர வேண்டும். நிறைய இந்தியர்கள் இத்துறைக்கு வந்து மௌனமாய் இருக்கும் பல தரப்பினரின் உரிமைக் குரலாக மாற வேண்டும் என்பது எனது கோரிக்கை. எங்கள் இந்தியா ஜர்னலில் பல இளைஞர்கள் அகநிறுவனப் பயிற்சி (Internship) செய்வதுண்டு.
கா: ஒரு துணையாசிரியராக மட்டுமல்லாமல் ஓர் ஆசானகவும் நீங்கள் விளங்குறீர்கள் அல்லவா? நி: ஆமாம். எங்களுக்கு மேதா என்று ஒரு மகள் இருக்கிறார். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறார். மேதா குழந்தையாக இருக்கும் போது அவளை நாங்கள் நமது இந்திய பாரம்பரியத்தைக் கற்பதற்காகச் சின்மயா மிஷனின் 'பால விஹாரில்' சேர்த்தோம். அவளோடு நானும் அவ்வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினேன். பிறகு இளம் குழந்தைகளுக்கு நானே பாடம் கற்பிக்கும் ஆசிரியையாகப் பணி புரிந்தேன். தற்போது 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பால விஹார் ஆசிரியை ஆக இருக்கிறேன். ஏறத்தாழ ஆயிரம் குழந்தைகள் பால விஹாரில் படிக்கிறார்கள். மெத்தக் கற்றவரும், மிகவும் செயல்திறன் கொண்டவருமான சுவாமி ஈஸ்வரானந்தா அங்கே வேதாந்த வகுப்பு நடத்துகிறார். அவரிடம் நான் கற்றுக் கொண்டவை அதிகம். அவர்களது மாதாந்திர கணினிப் பத்திரிகையான 'பத்ரிகா'விற்கும் (www.chinmaya.org) நான் எழுத்து மற்றும் இயக்கத்தில் உதவி வருகிறேன்.
பரதநாட்டியம், குச்சுபுடி நாட்டியங்களில் ஆர்வமுள்ள நிம்மி, தனது கணவர் ராஜ் ரகுநாதன்தான் தனக்கு உறுதுணை என்கிறார். ரகுநாதன் இவருக்கு அளித்த முதல் பரிசு கல்கியின் 'பொன்னியின் செல்வன்'. பயணம் செய்வதில் ஆர்வம் கொண்ட நிம்மிக்குப் பிடித்த இடங்கள் ஜப்பான், எகிப்து, சீனா, கோஸ்டா ரிகா, ஸ்விட்சர்லாந்து. பார்க்க ஆசைப்படும் ஊர் துருக்கி. தஞ்சைப் பெரிய கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில்கள் பெரும் வியப்பைத் தருகின்றன என்கிறார் நிம்மி. இது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் தல வரலாறு எளிதில் கிடைக்கக் கூடிய புத்தகங்களாக வரவேண்டும் என்கிறார். வரலாறு, இண்டர்ஃபெய்த் (Interfaith), ஆன்மீகம் போன்ற தலைப்புகளில் புத்தகங்களைப் படிக்க ஆர்வம் கொண்டிருக்கிறார். தென்றலைப் பற்றிக் குறிப்பிடுகையில் தமிழ் மொழியின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் அயல்நாடு ஒன்றில் அரும்பாடு படும் அதன் கொள்கையைப் பாராட்டுகிறார். திருமதி நிம்மி ரகுநாதனின் பத்திரிகைப் பணி தொடர தென்றலின் வாழ்த்துகளைக் கூறி விடைபெற்றேன்.
சந்திப்பு: காந்தி சுந்தர் |