தென்றல் பேசுகிறது...
2011ன் மூன்றாவது காலாண்டின் தொகு உள்நாட்டு உற்பத்தி (GDP) 2.5 சதவிகிதமாக வளர்ந்திருப்பது ஒரு புதிய நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது. தன்மட்டில் இது ஒரு பெரிய வளர்ச்சியல்ல. ஆனால், முந்தைய காலாண்டில் 1.3 சதவிகிதமாக இருந்ததும், அப்போது ஒரு பெரிய பொருளாதார வீழ்ச்சி வரவிருப்பதாகப் பண்டிதர்கள் கூறியதும் ஏற்படுத்திய அச்சத்தோடு ஒப்பிட்டால் இந்த வளர்ச்சி சற்றே நிம்மதியைத் தருகிறது. வேலையில்லாதோர் உதவித் தொகை அதிகரிக்கவில்லை, தொழில் முதலீடுகள் ஆரோக்கியமாக உள்ளன என்ற தகவல்களும் நமது நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. பெருவிலைப் பொருட்களுக்கு மக்கள் செலவழிப்பது அதிகரித்துள்ளது. ஐரோப்பியச் சிக்கலுக்குத் தீர்வு கிடைத்திருக்கிறதென்ற நம்பிக்கையில் பங்குச் சந்தை ஏறுமுகம் காட்டினாலும் உண்மை வருவாய் (real income) ஏறவில்லை என்பதும், நுகர்வோர் நம்பிக்கை (consumer confidence) முன்னெப்போதுமில்லாத அதல பாதாளத்தில் இறங்கியிருக்கிறதென்பதும் கவலை தருவன ஆகும். மக்கள் மிகுந்த துணிச்சலோடு இந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது அவர்களது மீண்டெழும் திறனைக் காட்டுகிறது. அத்தோடு வெள்ளை மாளிகையும் தன் பங்குக்குச் சில துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. எப்படியானாலும், இன்று உலக அளவில் நிலவும் பொருளாதாரச் சூழலில் அமெரிக்காவின் GDP ஏறுமுகத்தை மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும்தான் பார்க்க வேண்டும்.

*****


"வடக்குப் பாகிஸ்தானைத் தாக்கினால் எங்கள் கை பூப்பறித்துக்கொண்டு இருக்காது. பாகிஸ்தான் ஓர் அணு ஆயுத நாடு. யோசித்துப் பேசுங்கள்" என்று அமெரிக்காவைப் பாகிஸ்தான் எச்சரிக்கத் துணிந்தது சமீபத்திய ஆச்சரியம். பரமசிவன் கழுத்திலிருந்து கொண்டு கருடா சௌக்கியமா என்று பாம்பு கேட்ட கதை நினைவுக்கு வருகிறது. எல்லாம் சீனாவின் ஆதரவினால் வந்த தைரியம்! தனது எல்லா உற்பத்தித் தேவைக்கும் சீனாவிடம் டாலர் பலத்தை அடகு வைத்துவிட்டதனால் அமெரிக்காவுக்கு இன்று பாகிஸ்தானிடம் பவ்யமாக நடக்கிற நிலை வந்திருக்கிறது. எவ்வளவுதான் வலுவான நாடாக மாறினாலும் இந்திய அரசின் பிரதிநிதி ஒருவர் இப்படிச் சுட்டுவிரலை ஆட்டிப் பேசியிருப்பாரா என்பதையும் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அத்தகைய பெருமிதமும் தன்னம்பிக்கையும் இந்தியாவுக்கு என்று வரும் என்று ஏங்காமலும் இருக்க முடியவில்லை.

*****


தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அலை வீசியிருக்கிறது. முதல்வர் நினைத்தால் முன்னெப்போதுமில்லாத அளவு நலத்திட்டங்களைச் செயல்படுத்தலாம். தமிழகத்தில் பொற்காலத்தைக் கொண்டுவர முடியும். அதற்கான சாத்தியக்கூறுகள் தமிழகத்தில் மிக அதிகம். அரசியல் வன்முறையும் நில அபகரிப்பு வன்முறையும் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். முன்னெப்போதுமில்லாத அளவுக்கு வட மாநிலங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையில் தமிழகத்திற்கு கூலித் தொழிலாளிகள் வந்திருக்கிறார்கள் என்பது மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆனால் வேரற்ற இந்த மக்கள் தம்மோடு சமுதாயவியல் பிரச்சனைகளையும் கொண்டு வருகிறார்கள். வோட்டு வங்கி அரசியலைச் சிறிது காலம் மறந்து உண்மையிலேயே தமிழகத்தை இந்தியாவின் முன்னணி, முன்னோடி மாநிலமாக மாற்றுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு முதல்வர் உழைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.

*****


இளம் சாதனையாளர் 'ஹரிகதை' சுமித்ரா, அமெரிக்க இதழியலாளர் நிம்மி ரகுநாதன் என்று இரண்டு வெவ்வேறு துறை மகளிரின் நேர்காணல்கள் இந்த இதழில் வெளிவருகின்றன. அமெரிக்கக் கொலுவின் அமர்க்களம், பாட்டி வைத்தியம், மாறுபட்ட திரைப்பட விழா, வாசகரைக் கட்டிப்போடும் குறுநாவல் தொடர் என்று விதவிதமான அம்சங்களாலும் தென்றல் நிரம்பி வழிகிறது. பதினோராவது ஆண்டின் இறுதி இதழ் ஒரு நிறைவான இதழ் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வாசகர்களுக்கு நன்றி நவிலல் நாள், பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள்!


நவம்பர் 2011

© TamilOnline.com