ஆகஸ்ட் 13, 2011 அன்று திவ்யா ஆனந்தனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நேப்பர்வில் உயர்நிலைப்பள்ளியில் நடந்தேறியது. பதஞ்சலி நாட்டியப் பள்ளியின் குரு வித்யா பாபுவின் மாணவியான திவ்யா, பராசக்தியின் புகழ்பாடும் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சியைத் துவக்கினார். தொடர்ந்த 'நாதனை அழைத்து வா சகியே' என்ற காம்போதி ராக வர்ணத்திற்கு நேர்த்தியாக ஆடினார். அடுத்து தில்லையைப் போற்றும் 'ஆடுகின்றானடி தில்லையிலே' (ஜோன்புரி) பாடலுக்கு அழகாக அபிநயித்தார். திருமாலின் பத்து அவதாரங்களை விளக்கும் 'பாற்கடல் அலைமேலே' என்ற ராகமாலிகை, ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றுத் தந்தது. மகாகவி பாரதியின் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திலங் ராகப் பாடலுக்கு குரு வித்யாவின் ஆங்கில விளக்கமும் சேர்த்து பாராட்டைப் பெற்றது. நாச்சியார் திருமொழி 'வாரணம் ஆயிரம்' ஆண்டாளின் பெருமையைப் பறை சாற்றியது. கதன குதூகலத்தில் பால முரளியின் தில்லானாவுடன் அரங்கேற்றம் இனிதே நிறைவேறியது.
பாடிய மினு கார்த்திக், மிருதங்கம் வாசித்த ஜெய்சிங்கம், வயலின் வாசித்த வெங்கடேஷ் பத்மநாபன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெற்றோர் ஆனந்தனும், லக்ஷ்மியும் வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
ஜோலியட் ரகு, நேப்பர்வில், இல்லினாய் |