ஆகஸ்ட் 19, 2011 அன்று குரு ஸ்ரீதேவி திருமலையின் மாணவிகளான பாவனா மற்றும் சுவாதி சகோதரிகளின் பரத நாட்டிய அரங்கேற்றம் மாசசுசெட்ஸ் ஆஷ்லாந்து உயர்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெற்றது.
கத்யோத்காந்தி ராகப் புஷ்பாஞ்சலியுடன் ஆரம்பித்து, பௌலி ராகத்தில் விறுவிறுப்பான 'பிரம்மமொகட்டே' பாடலுக்கு ஆடி முடிக்கும்வரை வந்திருந்தவர்ளைத் தமது ஆட்டத்தால் கட்டிப் போட்டுவிட்டனர் பாவனாவும் சுவாதியும். மகாராஜா சுவாதித் திருநாளின் 'பாவயாமி ரகுராமம்' அரங்கேற்றத்தின் மகுடமாக விளங்கியது. இந்த நடனத்தில் குருவின் நடன அமைப்புத் திறனும், சிஷ்யர்களின் கதைச் சித்திரிப்புத் திறனும் செம்மையாக வெளிப்பட்டன.
'நாட்யமணி' நடனப் பள்ளியைத் தொடங்கி, குரு ஸ்ரீதேவி திருமலை 1992ம் ஆண்டிலிருந்து போஸ்டன் பகுதியில் நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார். அவரும் மாணவர்களும் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நிறைய நிகழ்ச்சிகளை வழங்கியிருகிரார்கள். தமது மாணவர்களின் ஆற்றலை வெளிக் கொண்டுவருவதில் ஸ்ரீதேவி திறமை வாய்த்தவர்.
பாவனா (15) வேலாந்து உயர்நிலைப் பள்ளியில் நுழைந்துள்ளார். பள்ளி இசைக்குழுவில் வயலின் வாசிக்கிறார். கூடைப்பந்து, கைப்பந்து அணிகளில் விளையாடுகிறார். லெக்ஸிங்டன் சிசுபாரதி இந்தியக் கலை மற்றும் மொழிகள் பள்ளியில் பட்டம் பெற்றபின் அதே பள்ளியில் தமிழ் மொழி மற்றும் பாடல்களைத் தன்னார்வத் தொண்டராகக் கற்றுத் தருகிறார்.
சுவாதி (18) அம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். பள்ளியில் படிக்கும்போது இசைக்குழுவில் வயலின் வாசித்த இவர் Mock Trial Team-ல் வழக்குரைஞர். கல்லூரி வாலிபால் அணியில் இருக்கிறார். இவரும் சிசுபாரதிப் பட்டதாரிதான்.
இந்தச் சகோதரிகள் குரு ஸ்ரீதேவியிடம் ஒன்பது ஆண்டுகளாக நடனம் கற்றுக் கொள்கிறார்கள். நடனப் பயிற்சி அவர்களுக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத் தந்ததாகக் கூறுகிறார்கள். கர்நாடக இசையிலும் அரங்கேற்றம் கண்ட இவர்கள், பள்ளியின் acapella குழுவில் பங்கேற்கின்றனர். பத்தாண்டுகளுக்கு மேலாக குரு தாரா பங்கலோரிடம் கர்நாடக சங்கீதம் கற்றுகொண்டுள்ளனர்.
செய்திக்குறிப்பிலிருந்து |