மீரா ரகுநாதன் நாட்டிய அரங்கேற்றம்
செப்டம்பர் 3, 2011 அன்று மீரா ரகுநாதனின் பரத நாட்டிய அரங்கேற்றம் பெப்பர்டைன் பல்கலை ஸ்மதர்ஸ் தியேடரில் நடைபெற்றது. இவர் குரு கல்யாணி ஷண்முக ராஜாவின் சிஷ்யை. கணபதி வந்தனத்தில் துவங்கி, ஸ்வரஜதி, சப்தம் வந்தபோது மீராவின் நாட்டியம் களை கட்டியது. ஜதிகளும், அங்க அசைவுகளும் மிகச் சிறப்பாக இருந்தன. தேவ மனோஹரி ராக வர்ணம் மீராவின் நாட்டியத் திறமையைப் பிரகாசிக்க வைத்தது. இடைவேளைக்குப் பிறகு சாவேரி ராகப் பதத்தில் மீரா, முருகனை மிரட்டி மோடி செய்து தன் வழிக்குக் கொண்டு வந்த அபிநயம் தத்ரூபமாக அமைந்தது. ஹனுமானின் பிறப்பு, பக்தி, பண்பு, பலம், பணிவு எல்லாக் குணங்களையும் மீரா தன் அபிநயத்தில் கண்ணெதிரே கொண்டு வந்தார். நிறைவாக ஆடிய தில்லானா மிகவும் விறுவிறுப்பு.

குரு கல்யாணி ஷண்முகராஜா கலாக்ஷேத்ரா பாணியில் தான் கற்ற வித்தையை மீராவுக்கு நன்கு கற்பித்திருக்கிறார். பாபு பரமேஸ்வரனின் வாய்ப்பாட்டு, விஜயராகவனின் மிருதங்கமும், சுனில் பாஸ்கரனின் வயலினும், எலமர்த்தி ராகவேந்த்ராசாரின் புல்லாங்குழலும் சிறப்பான பக்கபலம்.

ராமன் சக்ரவர்த்தி,
மலிபு, கலிஃபோர்னியா

© TamilOnline.com