ரம்யா வெங்கடேஸ்வரன் கர்நாடக இசை அரங்கேற்றம்
செப்டம்பர் 10, 2011 அன்று ரம்யா வெங்கடேஸ்வரனின் கர்நாடக இசை அரங்கேற்றம் கார்னெட் வேல்லி உயர்நிலைப்பள்ளி (கிளென் மில்ஸ், பென்சில்வேனியா) அரங்கத்தில் நடைபெற்றது. இவர் குரு கிரணாவலி வித்யாசங்கரின் சிஷ்யை.

பைரவியில் அமைந்த 'விரிபோனி'யில் கச்சேரியைத் தொடங்கிய ரம்யா, தியாகராஜரின் விறுவிறுப்பான ஜகன்மோகினி ராக 'சோபில்லு சப்தஸ்வர'வில் சோபித்தார். அதற்குப் பாடிய கல்பனாஸ்வரம் மிகவும் ரம்யம். சாமா சாஸ்திரியின் 'ஹிமாத்ரி சுதே' கல்யாணியில் கம்பீரமாக இருந்தது. இதற்கும் நிரவல், கல்பனாஸ்வரம் பாடியது ரம்யாவின் கல்பனா சக்திக்கு எடுத்துக்காட்டு. நவாவரண கீர்த்தனை 'கமலாம்பா சம்ரக்ஷது', சுவாதித் திருநாளின் 'பரமபுருஷம்' என்று எடுத்துச் சென்று, 'ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே' வை காம்போஜியில் கலக்கிவிட்டார். இதையே வெகு விஸ்தாரமாக ராக ஆலாபனைக்கும் எடுத்துக் கொண்டார். பின்னர் சிறிய உருப்படிகள், துக்கடாக்கள், திருப்புகழ், தில்லானா என்று ஒரு முழு சங்கீத விருந்து வைத்தார் ரம்யா. வி.வி.எஸ். முராரி (வயலின்), வினோத் சீதாராமன் (மிருதங்கம்), கார்த்திக் வெங்கடராமன் (கஞ்சிரா) ஆகியோர் திறம்படப் பக்கம் வாசித்தனர்.

பதினேழு வயதாகும் ரம்யா கார்னெட் வேல்லி பள்ளியில் முதுநிலை மாணவர். இளமையிலேயே தன் அம்மா நளினி வெங்கடேஸ்வரனிடம் சங்கீதம் கற்கத் தொடங்கிய ரம்யா, சென்ற இரண்டு ஆண்டுளுக்கு மேலாகக் குரு கிரணாவலியிடம் உயர்நிலை அம்சங்களைக் கற்றுவந்தார்.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com