செப்டம்பர் 11, 2011 அன்று 'குரு சமர்ப்பணம்' என்ற நடனக் கதம்பத்தை அட்லாண்டா மாநகரில் 'Third Eye Dancers' வழங்கினர். பல்வேறு நடனப் பள்ளி குருக்களுக்கும் மாணாக்கர்களும் இதில் பங்கேற்றனர்.
சுதீக்ஷணா வீரவல்லியின் நிருத்யாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. குமுத் சாவ்லா மற்றும் அவரது மாணவியர் நடத்திய 'ஹனுமன் சாலிஸா' கதக் நடனம் பிரமாதம். தொடர்ந்து 'ஆடல் கலையே தேவன் தந்தது' என்ற பாடலுக்கு கிருஷ்ணகுமார்-சிவகாமி தம்பதியரின் நடனம் பாராட்டத் தக்கது. நடனத்தை வடிவமைத்த குரு சுபத்ரா சுதர்ஷனுக்கு ஒரு சபாஷ். ரவீந்திரநாத் தாகூரின் வங்காளப் பாடலுக்கு ஆடிய சசிகலா பெனுமர்த்தி முத்திரை பதித்தார். அருணாசலக் கவிராயர் இயற்றிய 'ஏன் பள்ளி கொண்டீர் ஐயா' பாடலுக்கு அனுராதா முரளி, கண்ணன் ராசையா, அபர்ணா சீதாராமன், ப்ரீதா சாய்கிருஷ்ணா, சுபத்ரா சுதர்ஷன் ஆகிய பரத நாட்டிய குருக்கள் ஒன்று சேர்ந்து ஆடியது அற்புதம். 'ஹரி துமஹரோ' என்ற மீரா பஜனுக்கு சுதீக்ஷணா வீரவல்லி, திரௌபதிக்குத் துயில் கொடுத்த கண்ணனையும், நரசிம்மரையும், கஜேந்திர மோக்ஷத்தையும் கண்முன் கொண்டு வந்தார். நடனத்தை வடிவமைத்த வனிதா வீரவல்லி பாராட்டுக்குரியவர். இடைவேளைக்குப் பின் திரிபுர சுந்தரி புவனேஸ்வரியின் புகழைக் குச்சிபுடியில் சித்திரித்தார் சுபா மருவடா. ஜெய மாருதி கௌத்துவம், மாருதியை வணங்கியவர் துயர் தீரும் என்று விளக்கிய சுபத்ரா சுதர்ஷனன் நடனம் வெகு அழகு. 'ஜெகன்னாத காரகா' என்ற தியாகராஜ பஞ்சரத்ன கீர்த்தனைக்கு சசிகலா மற்றும் அவரது நடனப் பள்ளி மாணவியர் ஆடினர்.
இடைவேளையில் டாக்டர். மனோகர் நல்லதம்பி Tanker Foundation குறித்து விளக்கினார். கடந்த பதினெட்டு வருடங்களாக சிறுநீரகக் கோளாறை எதிர்த்துப் போராடும் TANKER நிறுவனத்தின் சேவை பாரட்டுக்குள்ளது. மேலும் சில நடனங்களுக்குப் பின், நிருத்தங்கஹாரம் தில்லானாவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. Rising Star Outreach, Cystic Fibrosis Foundation, CNN Hero நாராயணன் கிருஷ்ணன் போன்ற சேவை நிறுவனங்களுக்கு நாட்டிய நிகழ்ச்சிகள் மூலம் நிதி சேர்த்து உதவிய Third Eye Dancers அமைப்புக்கு 'குரு சமர்ப்பணம்' ஒரு மைல்கல்.
பாரதி, அட்லாண்டா. |