வியாபாரியும் கற்பக மரமும்

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Aravind Swaminathan


கற்பக மரம் என்றால் என்ன தெரியுமா? நாம் எதைக் கேட்டாலும் அதைக் கொடுக்கும் மரம்! 'ஆஹா, அப்படி ஒரு மரம் என்னிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்று நினைக்கிறீர்கள் அல்லவா? நம்மிடமும் அப்படி ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா? கதையைக் கேளுங்கள், கடைசியில் சொல்கிறேன்.

காட்டு வழியில் நடந்து ஒரு வியாபாரி கொண்டிருந்தான். வெகு தூரத்தில் இருந்து நடந்து வந்ததால் அவனுக்கு மிகவும் களைப்பாகி விட்டது. எனவே அருகில் எங்காவது தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணினான். அருகில் மிகப் பெரிய மரம் ஒன்று இருப்பதைப் பார்த்தான். அதனடியில் சென்று, துண்டை விரித்துப் படுத்துக் கொண்டான். அந்த மரம் கற்பக மரம்; அது உங்களுக்குத் தெரியும்; அவனுக்கு இன்னும் தெரியாது. அதனடியில் படுத்துக் கொண்டிருந்தவனுக்குத் தூக்கம் வந்தது. மெல்ல கண்களை மூடினான்.

அப்போது குளிர்ச்சியான தென்றல் காற்று வீசியது. உடனே அவன், 'நல்ல தென்றல் வீசுகிறதே. இப்போது இரண்டு பேர் எனக்குக் கால்களை அமுக்கி விட்டால் சுகமாக இருக்குமே' என்று நினைத்தான். ஞாபகம் இருக்கிறதா, அவன் படுத்திருப்பது கற்பக மரத்தின் அடியில். உடனே இருவர் திடீரென்று தோன்றி, அவனது கை, கால்களைப் பிடித்து விட ஆரம்பித்தனர்.

அந்த வியாபாரியால் நம்பவே முடியவில்லை. 'இப்போது அறுசுவை உணவு வகைகள் கிடைத்தால் சாப்பிடலாமே' என நினைத்தான். நினைத்ததுதான் மிச்சம், உடனே அறுசுவை உணவு அவன் முன் வந்து சேர்ந்தது. நிம்மதியாக அவற்றை உண்டான் அந்த வழிப்போக்கன். பின் களைப்புடன் படுக்கையில் சாய்ந்தான். தனக்கு நிகழ்ந்த அதிசய சம்பவங்களை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தான். அதேசமயம் திடீரென்று அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. 'ஒருவேளை இப்போது ஒரு காட்டுப் புலி வந்து நம்மைத் துரத்தினால்...?' என்று நினைப்பதற்குள் ஒரு காட்டுப் புலி பாய்ந்து வந்தது. அவன் பயந்து அலறியபடி தலை தெறிக்க ஓடினான்.

குழந்தைகளே, நம் மனம்தான் அந்தக் கற்பக மரம். நல்லதை நினைத்தால் நல்லதைக் கொடுக்கும். நல்லதைச் செய்தால் நமக்கு நல்லதே நடக்கும். தீயதை நினைத்தால்... வேண்டாம், நமக்கு ஏன் அதெல்லாம்.

அடுத்த தென்றலில் இன்னொரு கதையோடு வருகிறேன்.

வணக்கம்.

சுப்புத் தாத்தா

© TamilOnline.com