தான் செய்த செயலை நியாயப்படுத்துவதில் ஓவியர் ஜெயராஜ் மன்னர்தான் என்பது அவரது நேர்காணலில் தெளிவுப்படுத்திவிட்டார். ஆபாசமாகப் பெண்களை ஜீன்ஸ், பனியன் எனப்போட்டு அதில் செக்ஸியான வாசகங்களை எழுதிக் குமுதத்தில் போட்டதை, சர்க்குலேசன் உயர்வுக்கு அவரும் ஒரு காரணியாக இருந்தததை நாங்கள் மறந்துவிடவில்லை. அதனை மற்றவர்கள் ரகசியமாக ரசித்தார்களே தவிர யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை என முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றார். சுட்டி எனும் சிற்றிதழ் முதல் சில வார, மாதந்திர பத்திரிக்கைகளும் சமூக ஆர்வலர்களும் கண்டித்தது அவருக்கு நினைவுக்கு வரவில்லை.
தென்றலில் வரும் குறுக்கெழுத்துப் போட்டி மிகவும் கடினமாகத்தான் இருக்கின்றது. ஆனால் அமெரிக்கத் தமிழர்கள் அதில் சக்கைப்போடு போடுவது அவர்கள் தமிழை மதிப்பதோடு, தமிழை மறக்கவில்லை, தமிழ் அறிவைப் புடம்போட்ட தங்கம்போல் ஜொலிக்க வலம் வருவதனை எண்ணிப் பெருமைப்படுகின்றேன்.
புதுக்கோட்டை ஜி வரதராஜன் (ஆன்லைனில்)
*****
தென்றல் ஆகஸ்ட் இதழில் வெளியாகியுள்ள அனைத்துப் பகுதிகளையும் உடனே படித்து மகிழ்ந்தேன். நான் சென்னையில் குமுதம், விகடன் சுடச்சுட வாசிக்கும் வாசகி. இங்கு வந்து தென்றலைப் பார்த்தவுடன் ‘அப்பாடா’ என்றிருந்தது. மிகவும் பயனுள்ளதாகவும் அற்புதமாகவும் சென்னையைச் சேர்த்தும் எழுதுவதால் சுவையாகவும் இருக்கிறது.
சித்ரா விஸ்வநாதன், சாண்டா க்ளாரா, கலிஃபோர்னியா
|