இதுவரை பிரபல மருந்து கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும் தன் மற்றொரு அமெரிக்க நண்பன் ராஜுக்கு வேலை கேட்கிறான். ராஜின் தகுதிகளில்திருப்தியுறும் ஸ்ரீ அவனுக்கு வேலை தருவதாக வாக்களிக்கிறான்.
மேற்கொண்டு ராஜின் விவரங்களைப் பார்க்கும்போது அவன் தன்னோடு சிறு வயதில் ஒன்றாகப் படித்துத் தன் வாழ்வில் ஆறாத தழும்பை ஏற்படுத்திய ரங்கராஜ் என்பதை அறிந்து, தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான். பழிவாங்கும் எண்ணத்தோடு தன் பள்ளி நாட்களையும் ரங்கராஜோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அசை போடுகிறான். இது எதையும் அறியாத ரங்கராஜ், தன் மனைவி கவிதாவை வேலையிடத்தில் விட்டுவிட்டு, குழந்தை நித்யாவோடு தினேஷ் வீட்டுக்கு, ஸ்ரீயை சந்திக்கக் கிளம்புகிறான். வேலை வாங்கித்தந்து தன் கஷ்டத்தைப் போக்கப்போகும் கடவுளைப் பார்க்கும் மகிழ்ச்சியில் இருக்கிறான். ஸ்ரீக்கு ஏற்பட்ட காயம் என்ன? ராஜுக்கு வேலை கிடைக்குமா? அவன் கஷ்டம் தீருமா? அவனது மறுபக்கம் என்ன?
***** "உலகத்துல ரெண்டாயிரம் வருஷத்துக்கு மேலாகத் தொடர்ந்து மக்கள் வசித்துவரும் நகரங்கள் ரொம்ப ரொம்பக் கொறைவு, அப்படிப்பட்ட நகரங்களில் சிறப்பானது மதுரை. 'மூதூர்'ங்கிறது மதுரை-னும், 'பண்டைய'ங்கிறது பாண்டிய-னும் மருவியிருக்கலாம். இதிலேருந்தே இதன் பழமையை நாம புரிஞ்சிக்கலாம். கிபி ரெண்டாம் நூற்றாண்டுலிருந்து இந்த நகரத்தைப் பத்தி வரலாற்றுக் குறிப்புகள் கிடைச்சிருக்கு. ரோமாபுரிப் பேரரசோட மதுரைக்குக் கடல் வாணிகமெல்லாம் இருந்துருக்கு. முதல் இரு சங்கங்கள் தோன்றிய மதுரை இதுக்குத் தெற்கே இருந்தது. கடல்கோளில் அது அழிந்ததும், அதன் நினைவா இப்ப நாம பார்க்கப் போகிற இன்றைய, மதுரை நகரை பிற்கால பாண்டிய மன்னர்கள் ஏற்படுத்தினாங்க," தமிழ் வாத்தியார் முருகேசன் மதுரையைப் பற்றி பஸ்ஸில் விரிவாக, சுவையாக சொல்லிக் கொண்டு வந்தார்.
அப்பாவின் உத்தியோக டிரான்ஸ்பர் புண்ணியத்தில் பல ஊர்களை நான் பார்த்திருந்தாலும் மதுரைக்கு நான் போனதில்லை. ஒரு பழைய ஊரைப் புதுசாப் பார்க்கப் போகும் உற்சாகத்தில் இருந்தேன். பெரும்பாலான மற்ற பசங்களும் என்னைப் போலவே முதல்முறை மதுரை பார்க்கும் ஆர்வத்தில் இருந்தனர். ரங்கன் இந்தக் கணக்கில் வழக்கம் போல சேர்த்தியில்லை. மாசாமாசம் அவன் அப்பாவோ, கணக்குப்பிள்ளையோ மண்டியிலிருந்து அரிசி விற்ற பணம் வாங்க மதுரைக்கு வரும்போது இவனும் வந்து புதுசா ரிலீஸாகும் படங்களைப் பார்த்துவிடுவான். கண்ணனூர் டூரிங் கொட்டகையில் மூன்று வருஷங்கள் மற்ற ஊர்களில் ஓட்டித் தேய்ந்து போன படங்கள்தான் வரும். இரண்டு வாரம் முன்புகூட இப்போதுதான் ரிலீஸான உலகம் சுற்றும் வாலிபன் படம் மதுரைக்கு வந்து அவன் பார்த்த சாகசத்தை படத்தின் பதினெட்டு ரீலோடு, மேலும் இவனது மசாலா பத்து ரீலும் சேர்த்து எல்லாருக்கும் சொல்லிக் கொண்டிருந்தான். "வாத்தியாரும் அன்னிக்குப் படம் பாக்க வந்திருந்தார். கிட்ட பாத்தேன். செம்ம கலரு... படத்துல பாக்குறாப்புலயே."
பற்றாக்குறைக்கு, ஆபரேட்டர் ரூமிலிருந்து எடுத்து வந்த நான்கு ஃபிலிம் துண்டுகளையும் தனி மேட்னி ஷோவாகப் பெருமையோடு காட்டிக் கொண்டிருந்தான். எனவே மதுரை அவனை புதுசாக எதுவும் கவரவில்லை. மாணிக்கம் சாருக்கே நாயக்கர் மகாலிலும், மீனாட்சி கோவிலிலும் "இப்படிப் போறதவிட, அந்தப் பக்கமா போனா சுலபம் சார்" என்று வழி சொல்லிக் கொடுத்தான்.
"காந்திஜிக்கும் இந்த மதுரைக்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்குது, உங்கள்ள யாருக்காச்சும் தெரியுமா?" மாணிக்கம் சார் காந்தி மியூசியம் வாசலில் எங்களையெல்லாம் பார்த்துக் கேட்டார்.
"சார்"- ரங்கன்தான். "இந்த ஊருக்கு வந்தபோது, சட்டை போடாத விவசாயிகளோட கஷ்டத்தைப் பாத்துதான், காந்திஜி அரையாடை கோலத்துக்கு மாறினார்"
"சரியா சொன்ன ரங்கா, வெரி குட்"
நான் ரங்கனை ஆச்சரியத்தோடு பார்த்தேன். "இதெல்லாம் எங்க படிச்ச ரங்கா!"
"எங்க வீட்ல லைப்ரரியே இருக்கு. நல்ல பொஸ்தகமெல்லம் இருக்கு. அதெல்லாம் நிறைய படிப்பேன். சீனு, நீ வேணா அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு வாயேன். உனக்கும் அதெல்லாம் காமிக்கறேன். என்ன புஸ்தகம் வேணுமோ எடுத்துப் படி." எனக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது. ரங்கன் நிஜமாகவே எனக்கு நண்பனாகிவிட்டான்.
காந்தி மியூசியம் பார்த்து முடிந்ததும் பக்கத்தில் ஒரு பார்க்கில் கூடினோம். "எல்லாரும் சீக்கிரமா மதிய சாப்பாட்டை இங்கியே முடிச்சிருங்க. அரைமணி தான் டயம். திருப்பரங்குன்றம் நேரமிருந்தா பாத்துட்டு இருட்டறதுக்கு மின்ன ஊர் போய்ச் சேரோணும். பொம்பளை புள்ளைங்கள வேற கூட்டியாந்திருக்கோம். சீக்கிரம்.. சீக்கிரம்.." என்று மாணிக்கம் சார் அவசரப்படுத்தினார். நானும் ரங்கனும் சேர்ந்து சாப்பிட்டோம். அவனுக்கு அம்மா செய்து தந்த எள்ளுருண்டை, தேன்குழல் எல்லாம் தந்தேன். ரங்கன் ஒவ்வொன்றையும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் தனலட்சுமி அங்கு வந்தாள்.
தனலட்சுமி எங்கள் ஸ்கூலில் பத்தாம் வகுப்பு, பக்கத்து செக்ஷனில் படித்து வந்தாள். எங்கள் வீடு இருந்த தெருவிலேயே மூணு வீடு தள்ளி அவள் வீடு. இருந்தாலும் நாங்கள் ஜாஸ்தி பேசிக்கொண்டதில்லை. ஆண் பெண் கோஷா சிஸ்டம் காரணமாக ஸ்கூலில் பேச வாய்ப்பேயில்லை. எப்போதாவது பண்டிகை நாட்களில் பலகார எக்ஸ்சேஞ்சுக்கு அவள் அம்மாவோடு என் வீட்டுக்கு வந்தால் நான் உள்ளே ஓடிவிடுவேன்.
பேச்செல்லாம் என் அம்மாவோடும், அத்தையோடும் தான். மாநிறமாயிருந்தாலும், தீர்க்கமான களையும், வயதுக்கு மீறிய மதர்ப்பும் வசீகரச் சிரிப்பும் எல்லா வாலிபப் பயல்களையும் சுண்டியிழுக்கும். சீசனுக்குத் தகுந்தாற்போல மல்லிகை, கனகாம்பரம், டிசம்பர் பூ என்று தலைநிறைய வைத்துக்கொண்டு, பாவாடை தாவணியில், பின்னிய சடையின் குஞ்சலமும், கால் கொலுசும் ஜதிபோட வீதியில் அவள் வந்தால் பூப்பல்லக்கில் அம்மன் வருவதுபோல அவனவன் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பான் அரும்பு மீசை முளைத்தாலும், காதல் கத்திரிக்காயெல்லாம் முளைக்காத எனக்கே இவ்வளவு தோணியபோது, வயதுவந்த வாலிபப் பையன்கள் அவளுக்காக எங்கள் தெருமுனை குட்டிச்சுவற்றில் வேலை வெட்டியில்லாமல் காத்திருந்ததில் ஆச்சரியமென்ன. என் மாமா பையன் நாணா (நாராயணன்), மைனர் சிவசு, பெட்டிக்கடை தரணி, போஸ்ட்மாஸ்டர் பையன் சம்பத் இவர்கள் தலைமையில் அந்த ஜமா குட்டிச்சுவற்றில் கூடிவிட்டால் தெருப்பக்கம் புடவை கட்டிய பெண் ஒருத்தியும் போகமுடியாது.
தனலட்சுமி இதற்கு விதிவிலக்கு. இவர்களை லட்சியமே பண்ணாமல் அமுத்தலான புன்னகையோடு நடையைக் கட்டிவிடுவாள். மைனர் சிவசு கொஞ்சநாள் பேய் அறைந்தாற்போல் விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்ததற்கு, ஒருநாள் ராத்திரி கரும்புக் கொல்லையில் மோகினிப் பிசாசு அடித்துவிட்டது என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால், சித்ரா பவுர்ணமி அன்று ஆத்தங்கரையில் சித்ரான்னம் சாப்பிட்டுவிட்டு வரும்போது கரும்புக்கொல்லையில், நிலா வெளிச்சத்தில் தனலட்சுமியைப் பார்த்த சிவசு அத்துமீறி கையைப் பிடித்து இழுக்க, பொறி கலங்குவது போல கன்னத்தில் ‘பொளேர்' என்று அவளிடம் வாங்கியதில் சித்தம் கலங்கிவிட்டது என்று ஒரு உள்காரணமும் உலவியது. உண்மையோ பொய்யோ, தனலட்சுமியை நெருங்கும் தைரியம் எவனுக்கும் வந்ததில்லை. எல்லாம் துரத்திலிருந்து பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்வதோடு சரி. இந்த தனலட்சுமிக்கும் ரங்கனுக்கும் ஏழாம் பொருத்தம். அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன. ஒன்று தனலட்சுமியின் அப்பா ரங்கனின் அப்பாவுடைய மில்லில் மேஸ்திரியாக இருந்தார். அவள் சமமாகப் படிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. இரண்டாவது ஏழாவதோ, எட்டாவதோ படிக்கும்போது அவள் அவனைவிட ஏதோ பாடத்தில் கூடுதலாக மார்க் வாங்கியபோது, ரங்கனின் அப்பா அவளைப் பாராட்டியது. அதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த தனலட்சுமிதான் எங்கள் எதிரில் நின்று கொண்டிருந்தாள்.
"ஏய் சீனு, மதுரை ரொம்ப நல்லாயிருக்கில்ல. என்ன சாப்பிடறீங்களா?"
"இல்ல. ராக்கெட் விட்டுகிட்டிருக்கோம். கேள்வியப் பாரு" ரங்கன் குறுக்கே பதில் சொன்னான்.
"ஏய்..ரங்கா எனக்கு உன்கூட பேச்சில்லை. சீனுவைத்தான் கேக்கறேன்"
தனலட்சுமியை அவ்வளவு கிட்டத்தில் நேருக்கு நேராகப் பார்த்ததில் உடனே பேச்சு வரவில்லை. ஏன் அத்தனை பயல்களும் தவம் கிடக்கிறார்கள் என்பது புரிந்தது. சுதாரித்துக் கொண்டு, "எ…என்ன கேட்ட.. ஆங்.. சாப்பிட்டோம். மதுரை நல்லாயிருந்தது" என்று உளறிக்கொட்டினேன். சோழிகளைச் சுழற்றிப் போட்டாற்போல் வசீகரமாக, ஆனால் நாசூக்காக வாயை ஒரு கையால் மூடிக்கொண்டு சிரித்தாள். விரல்களில் சிவப்பாக மருதாணி. "சீனு... நல்ல தமாஷ். நான் உங்கிட்ட பேச வந்தது சீரியஸ் விஷயம்பா. உன்கூட பேசணும்னு மூணு மாசமா ட்ரை பண்றேன். வீட்டுக்கு வந்தா உள்ள ஓடிடுற, தவிர உங்க வீட்ல அந்த நாணா தொந்தரவு வேற. ஸ்கூல்லயும் பேச முடியல. இன்னும் ஒண்ணரை மாசத்துல பப்ளிக் எக்ஸாம். கணக்கு பாடம் மட்டும் ரொம்ப கஷ்டமாயிருக்கு. உன்கூட சேந்து படிச்சா பாஸ் பண்ணிடுவேன், எனக்கு கொஞ்சம் சொல்லித் தருவியா? கூச்சப்படாம சரினு சொல்லு சீனு. ப்ளீஸ்…"
"சேந்து படிக்கறது, சொல்லித் தரதெல்லாம் பத்தி ஒண்ணுமில்லை. ஆனா..."
"என்ன. ஆனா…ஓஒ... அந்த குட்டிச்சுவர் கும்பல் கிண்டல் பண்ணும்னு பயப்படறியா... அதுங்க கிடக்குது. ப்ளீஸ் சீனு. உன்னதான் நம்பியிருக்கேன்," இன்னும் கிட்ட வந்து கெஞ்சினாள். நான் கூச்சமாக ஒரு அடி தள்ளிப் போனேன்.
இதுவரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ரங்கன் "என்ன, விட்டா நீயா பேசிக்கிட்டே போற.. அதெல்லாம் சொல்லிக் குடுக்க மாட்டான். உனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் படிப்பு வராது. டேய்... சீனு நீ எதுக்கு இவகிட்டல்லாம் நேரத்தை வீணடிச்சுக்கிட்டு…" என்றான்.
"ரங்கா மறுபடியும் சொல்றேன், நான் சீனுகிட்ட பேசிட்டிருக்கேன். நீ அனாவசியமா தலையை நுழைக்காத." எனக்கு என்னவோ தனலட்சுமிக்கு உதவுவதில் தப்பில்லை என்று தோன்றியது. ரங்கன் அநியாயத்துக்கு அவளை விரட்டுவதும் எனக்கு சரியாகப் படவில்லை. "ரங்கா நீ சும்மா இரு. தனலட்சுமி.. சேந்து படிக்கறதுல எனக்கு ஒண்ணும் கஷ்டமில்லை. நீ வீட்டுக்கு வா, பேசிக்கலாம்."
"சீனு. இவகூட நீ சேராத. பொம்பள புள்ளையா லட்சணமா வீட்டோட இல்லாம, தாட்பூட்டுனு அலங்காரம் பண்ணிக்கிட்டு சுத்துது. இதுக்கெல்லாம் உதவாத நீ. அப்படியே ஃபெயிலாகட்டும். அப்பதான் புத்தி வரும்."
"ரங்கா. என்ன வாய் நீளுது. அப்புறம் என் கை நீளும் ஜாக்கிரதை" கோபமாகச் சொன்னாள் தனலட்சுமி.
"சீனு. நீ இவளுக்கு உதவப் போறேன்னா என்னோட பேச்சை நிறுத்திக்க. நீயே முடிவு பண்ணு."
"ரங்கா. இவ்வளவு சின்ன விஷயத்துக்கு நீ ஏன் இவ்வளவு ஆத்திரப்படறனு தெரியலை. உனக்கும், தனலட்சுமிக்கும் என்ன பிரச்சனைனும் எனக்குத் தெரியாது. ஆனா படிக்கணும், பாஸ் பண்ணனும்னு ஆர்வமா கேக்கும்போது உதவணும்னு எனக்குத் தோணுது. என்னால முடிஞ்ச உதவி செய்யறதுல தப்பில்லை. நீ சொல்றாப்பல என் படிப்புக்கு அது இடைஞ்சலாச்சுன்னா நான் ஒதுங்கிடுவேன்."
"அப்ப இவளுக்கு நீ படிக்க உதவதான் போற இல்லையா, அதுவும் நான் இவ்வளவு சொல்லியும்...?" கடுமையாக, எச்சரிக்கும் குரலில் ரங்கன் கேட்டது எனக்குப் பிடிக்கவில்லை. பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
"இதுதான் உன் முடிவுன்னா நீயும் தேவையில்ல உன் ஃப்ரெண்ட்ஷிப்பும் தேவையில்லை. நீயும், உன் பலகாரமும்.. தூ…" என்று கத்திக்கொண்டே மடியிலிருந்த பலகார டப்பாவைத் தூக்கிப் போட்டான். அம்மா ஆசை ஆசையாய் இடுப்பொடிய மாவு ஆட்டியும், எண்ணைய்ப் புகையில் கஷ்டப்பட்டும் செய்த பண்டங்கள் எல்லாம் மண் தரையில் ஒரே நொடியில் கிடந்தன. எனக்குத் தாங்கமுடியாத ஆத்திரம் வந்தது.
"ரங்கா! ஆனாலும் உனக்கு இவ்வளவு ஆத்திரம் கூடாது. நீ பேசு, பேசாம போ, அது இனிமே உன் இஷ்டம். அதுக்காக எங்க அம்மா ஆசை ஆசையாய் செஞ்சு குடுத்த பலகாரத்தையெல்லாம் தூக்கிப் போட்டுடியே. சீ நீயெல்லாம் என்ன ஜென்மமோ..."
"சீனு... இது சரியான குரங்கு. குரங்கு கைல பூமாலை குடுத்தா என்ன பண்ணும். இப்பிடித்தான் நாசம் பண்ணும். நீ ஒண்ணும் மனசுல வெச்சுக்காத" என்றாள் தனலட்சுமி ஆறுதலாக.
நான் கீழே விழுந்த பண்டங்களில் மண்ணை ஊதி எடுத்து தேற்ற முடிந்தவைகளை மறுபடி டப்பாவில் போடத் தொடங்கினேன். "என்னையா குரங்குனு சொல்ற. குரங்கு என்ன பண்ணும் தெரியுமா..." என்று சொல்லிக்கொண்டே, மறுபடி நான் சேர்த்த பலகாரத்தையெல்லாம் பிடுங்கி மண்ணில் போட்டதோடு, காலால் நச், நச் என்று மிதித்தான்.
கண்களில் நீர் வழிய "டேய் வேணாம்டா. அம்மா கஷ்டப்பட்டு…பலகாரம்...வேணாம்.." துக்கம் தொண்டையை அடைத்தது. மறுபடி கோபம் தலைக்கேறி "உன்னை மாதிரி ஒரு முட்டாள், தலைகனம் பிடிச்சவனை ஃப்ரெண்டா நெனச்சது என் தப்புதான். தனலட்சுமி சொன்னது சரிதான். நீ குரங்குதான். தெரிஞ்சுதான் உனக்குப் பேர்கூட அப்படியே வெச்சுருக்காங்க. இனிஷியல் கு. உன் பேர் ரங்கன். சரியான குரங்கன்.
‘பளார்" என்று நான்கு விரல் தடம் என் கன்னத்தில் பதிய அறைந்து விட்டான். சற்றும் எதிர்பாராததால் நிலை குலைந்து கீழே விழுந்தவனை, தனலட்சுமி தூக்கி விட்டாள். "என்னை குரங்குனு கிண்டல் பண்ணின உங்க ரெண்டு பேருக்கும் சரியான பாடம் கத்துக்குடுக்கல என் பேரு ரங்கன் இல்லை, பாத்துடுவோம்டா."
"ரங்கா நிறுத்துடா…" என்றவள் பிறகு என்னைப் பார்த்து "டேய், வேணாம்பா. சண்டை வேணாம். இந்த குரங்கு இருக்கும்போது நான் உன்கூட பேசியிருக்கக்கூடாது. என்னால நீங்க சண்டை போட்டுக்காதீங்க" என்றாள் தனலட்சுமி. ரங்கன் கை ஓங்கியது, அதுவும் ஒரு பெண்ணின் முன்னால் அடித்தது எனக்குப் பெருத்த அவமானமாயிருந்தது. நான் இப்போது அவனை அடிக்கப் பாய்ந்தேன். அந்த மண் தரையில் இரண்டு பேரும் கட்டிப் புரண்டு அடித்துக் கொண்டோம். சப்தம் கேட்டு மாணிக்கம் சார், முருகேசன் சார், பொன்னம்மாள் டீச்சர் எல்லாம் வந்து விலக்கி விட்டார்கள்.
"கொஞ்ச நேரம் மின்னவரை அப்படிக் குலவினீங்க. என்னடா ஆச்சு உங்களுக்கு. இப்படியா அடிச்சிப்பீங்க, வெக்கமாயில்ல. அதுவும் காந்தி மியூசியம் மின்னாடியே. படிக்கறது ராமாயணம், இடிக்கறது பெருமாள் கோயில்ங்கிறாப்ல. படிப்புல கெட்டிக்காரங்களாயிருந்து என்ன பிரயோசனம். குணமில்லன்னா ஒண்ணிமேயில்லாம போயிடும்" மாணிக்கம் சார் ரெண்டு பேரையும் பொதுவாகத் திட்டியது எனக்கு அநியாயமாகப் பட்டது. நான் பேச வாய் எடுத்தபோது, கைகளால் என்னை நிறுத்தி, "ஒண்ணும் நான் விசாரிக்க விரும்பல. பொறப்பட நேரமாயிடுச்சி. கெளம்புங்க. எல்லாம் ஊர்ல போனதும் ஹெட் மாஸ்டர் விசாரிப்பார். அங்க சொல்லிக்குங்க" என்று சொல்லிவிட்டார்.
திரும்பும்போது பஸ்ஸில் நானும், ரங்கனும் தள்ளித் தள்ளி உட்கார வைக்கப்பட்டோம். ரங்கன் ஒன்றுமே நடக்காதது போல முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். நான் விசும்பிக்கொண்டே வந்தேன். தனலட்சுமி திரும்பித் திரும்பி என்னையே பார்த்துக் கொண்டு வந்ததால் என் அழுகையை அடக்கிக் கொண்டேன். இன்பச் சுற்றுலா என் வகையில் துன்பச் சுற்றுலாவாக முடிந்தது. ரங்கனோடு எனக்கு இருந்த அரைநாள் நட்பை முடிவுக்குக் கொண்டுவந்தது. அதே சமயம் தனலட்சுமியோடு பப்ளிக் எக்ஸாமுக்கு படிக்கும் படலத்தை ஆரம்பித்து வைத்தது. அது மேலும் பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது. தனலட்சுமி வீட்டுக்கு நான் படிக்கப்போய் வந்த இரண்டாம் நாள், குட்டிச்சுவர் கும்பலில் பார்வைக்கு நான் மாட்டினேன். போஸ்ட் மாஸ்டர் பையன் சம்பத் "டேய். உங்க வீட்டு சீனு ரெண்டு நாளா தனலட்சுமி வீட்டுக்கு சர்வசாதாரணமா போயிட்டு வரான் கெவனிச்சியா. இந்த தெரு தாண்டினதுமே ரெண்டு பேரும் ஜோடியா ஸ்கூலுக்கும் போறாங்க தெரியுமா.. இவ்வளவு நாள் நாமெல்லாம் காத்திட்டிருக்கோம். பூனை மாதிரி இருந்துட்டு டப்னு தட்டிட்டான் பாரு. வரான்... வரான்... என்னனு விசாரி' என்று நாணாவுக்கு ஸ்க்ரூ கொடுத்தான்.
"டேய் சீனு இங்க வா" நாணா என்னைக் கூப்பிட, போக இஷ்டமில்லாவிட்டாலும் கால்கள் நேரே அவர்களை நோக்கி நடைபோட்டது. சரியாகப் போய் மாட்டிக்கொண்டேன்.
*****
மனசு கொஞ்சம் லேசானாற்போல இருந்தது ராஜுக்கு. எல்லாம் நல்லபடியா முடிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை வந்தது. இன்னும் இருபது, இருபத்தஞ்சு நிமிஷத்துல போயிடலாம். லேசாகச் சீட்டி அடிக்கத் தொடங்கினான், இளந்தூறல் வெளியில் இதமாக விழத்தொடங்க, வைப்பரை மெதுவாக ஆடவிட்டான். தடதடவென்று அடுத்த லேனில் ஒரு கண்டெய்னர் லாரி கடந்து சென்றது. லாரி கடந்து போன பிறகும் ‘தடக்.. தடக்.. தடக்' – கார் ஓட்டத்தின் சப்தம் தாளம் தப்பி ஒலிக்கும் மத்தளம் போல் கேட்டது. காரின் கண்ணாடியை இறக்கிக் காதைத் தீட்டிக் கேட்டான்.
ஃப்லாட் டயர். தலையை வெளியே நீட்டிப் பார்த்ததில் இடது பின் டயர் உயிரை விட்டது தெரிந்தது. ஸ்டீரிங்கை கெட்டியாகப் பிடித்து, வண்டியை ஓரமாக நிறுத்தினான். இன்னும் இருநூறு அடி ஓட்டியிருந்தால் ரிம் தேய்ந்திருக்கும். சரியான நேரத்தில் நிறுத்தியதால் தப்பியது. சே... இந்த வேளையிலா இப்படி ஆகவேண்டும்! ஸ்டெப்னி இருக்கிறது, நல்ல வேளை. ஸ்டெப்னி மாற்ற ஆயத்தம் செய்தபோது, இளந்தூறல் வேகம் பிடித்து, பெருமழையாக அடிக்கத் தொடங்கியது. கவிதா நன்றாயிருக்கிறது என்று சொன்ன பேண்ட், சர்ட் தொப்பலாக நனையத் தொடங்கியது. ஸ்டெப்னி மாற்றும் எண்ணத்தைக் கைவிட்டு, சட்டென்று கார்க் கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்து கொண்டான். ஆல் ரெடி லேட். வேறு வழியில்லை. தினேஷைக் கூப்பிட்டுச் சொல்லிவிட வேண்டியதுதான். அவனை வந்து அழைத்துப் போகச் சொல்லலாம் என்று நினைத்தான். செல்ஃபோனில் தினேஷைக் கூப்பிட்டான். ‘டயலிங்' என்று வந்துகொண்டே இருந்தது. அப்போது தான் கவனித்தான். சிக்னல் இல்லை. இருட்ட ஆரம்பித்ததோடு, மழை இன்னும் உக்கிரமாக அடிக்கத்தொடங்கியது. முதல்முறையாக இந்த வேலை கிடைக்காதோ என்று ராஜ் நினைக்கத் தொடங்கினான்.
சந்திரமௌலி, ஹூஸ்டன் |