உயிரும் மெய்யும்
1. உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் என்ன வேறுபாடு?

இரண்டுக்கும் அடிப்படை வேறுபாடு மூச்சுப்போக்கில் உள்ளது. உயிரெழுத்துகள் ஒலிக்கும் பொழுது மூச்சுத் தடையின்றி முழுதாக வாய்வழியே வெளிப்போகும். மெய் யெழுத்துகளுக்கு முழுதும் அடைபட்டோ அல்லது அரைகுறையாகவோ வெளிப் போகும்.

இதை நாம் நேரடியாகவே உணரலாம். வாய்முன்னே உள்ளங்கையை வைத்து ஆ என்று நீட்டிச் சொல்லும்பொழுது அங்கையில் வெதுவெதுவென்று காற்றுப்படுவதை உணரலாம்; ஆனால் அதை விட்டு 'க்' என்று (அல்லது மற்ற வல்லினங்களை) ஒலிக்கும் பொழுது எந்தக் காற்றும் கையில் படாததை உணரலாம்.

2. வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற, மெய்யெழுத்துகளின் மூன்று இனப் பாகுபாடு எந்த அடிப்படையில் நேர்ந் துள்ளது?

அவை மேற்சொல்லிய மூச்சுப்போக்கை அடியாக வைத்து வகைபட்டுள்ளன.

3. வல்லினம் மெய்களின் குணம் என்ன?

வல்லின மெய்கள் (க், ச், ட், த், ப், ற்) காற்றை முற்றும் வாயில் அடைப்பவை. மூச்சுச் சிறிதும் வெளிவாராது (ற் என்பதை பலர் இக்காலத் தில் ரகரம் போல் உச்சரிப்பதால் அந்தத் தடை தெரியாது; ஆனால் அதை வெற்றி என்பதில் உள்ள முதல் ற் போல் உச்சரிக்க வேண்டும்; அதாவது ஆங்கில t போல் நா நுனியைப் பல்லின் பின்னுள்ள தசைமேல் வைத்துச் சொல்லவேண்டும்).

மொழியியலில் வல்லினத்திற்குத் தடை யொலி (stop or obstruent) என்றும் பெயருண்டு. இதனால் அதை நீட்டி உச்சரிக்க முடியாது. அவ்வாறு காற்று முற்றும் அடைபடுவதால் அதைச் சொல்லி முடித்தவுடன் காற்றுப் பட்டென்று வெடிப்போசையோடு விடுபடும். அதனால் மொழியியலார் வல்லினத்தை வெடிப்பொலி (plosive) என்றும் அழைப்பர்.

4. வல்லினம் எல்லாவற்றிற்கும் காற்று அடைபட்டால் இவற்றுள் ஓசை வேறுபாடு எப்படி நிகழ்கிறது?

ஒவ்வொன்றும் வெவ்வேறு இடத்தில் காற்றை அடைக்கின்றன! 'க்' என்பது நாவின் உள்பாகம் வாயுச்சியின் (அண்ணம்) உட்பாகத்தைக் கிட்டிக் கிளம்புகிறது; 'ச்' என்பது இடைநாக்கு அண்ணத்தின் இடைப்பகுதியைச் சேர ஒலிப்பது; இப்படியே ட், த் என்று முன்வந்து ப் என்பது உதடு இரண்டும் காற்றை அடைப்பதால் பிறக்கிறது.

5. மெல்லினம் மெய்களின் தன்மை எப்படி?

மெல்லினம் வாயில் காற்றை அடைத்து மூக்கால் வெளிவிடுகிறது. இதை ங், ஞ், ண், ம், ந், ன் ஆகியவற்றை இழுத்து (ங்ங்ங்... ம்ம்ம்.. என்று) உச்சரிக்கும் பொழுது மூக்கின் கீழ் விரலை வைத்து உணரலாம். இதனால் மூக்கொலி (nasal) என்றும் மொழியியலில் இதை அழைப்பர்.

6. இடையின மெய்யெழுத்துகளின் பண்பு என்ன?

இவை பெயருக்குத் தகுந்ததுபோல முழுதும் அடைக்காமலும் முற்றும் வெளிவிடாமலும் இடைப்பட மூச்சை விட்டு ஒலிப்பவை. ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறும் இப்படிப் பட்டவை.

எடுத்துக்காட்டாக ய் என்பது நடுநாக்கு நடு அண்ணத்தை (வாயுச்சி - palate) தொட்டுப் பிறப்பது; ஆனால் காற்று அவற்றுக்கும் இடையே உள்ள சிறு இடைவெளியில் பாய்ந்து வாய் வழியே வெளியேறுவதால் யகர ஓசை பிறக்கிறது. சகரமும் யகரமும் நடு நாவும் நடு அண்ணமும் தொடப் பிறப்பவைதான்; ஆனால் சகரம் வல்லினம் என்பதால் காற்று அடைபடும்; யகரத்திற்கு அடைபடாது. இதனால் தான் இரண்டும் மாற்றொலிகளாகத் திராவிட மொழிக் குடும்பத்தில் ஒலிக்கும்: உயிர்-உசிர், வசை-வைதல்(வய்தல்), அய்யோ-அச்சோ என்று சொற்கள் பிறக்கின்றன.

7. எழுத்துகளின் வரிசைக்கு அடிப்படைக் காரணம் உண்டா?

உண்டு. அது எழுத்துகள் பிறக்கும் இடத்தை வைத்து வரிசையாக அமையும். உள் வாயிலிருந்து உதடு வரை வெவ்வேறு இடங்களில் பிறக்கும் வரிசைதான் அது.

உள்நா-உள்ளண்ணம்: க்-ங்; இடைநா-இடை யண்ணம்: ச்-ஞ்; நுனிநாவளைவு-முன் னண்ணம்: ட்-ண்; நுனிநா-மேற்பல்லின் பின் னுள்ள அண்ணம்: ற்-ன்; நுனிநா-மேற்பல்லின் பின்புறம்: த்-ந்; உதடு இரண்டு: ப்-ம். இடையினத்திலும் இப்படியே: ய்-ர்-ல்-வ் என்று ஒரு வரிசை நடுநாவிலிருந்து உதடு வரை வருகிறது; பிறகு மீண்டும் வாயுள்ளே சென்று ழ்-ள் என்று முன்வருகிறது.

8. ஆக ஒவ்வொரு மெல்லினத்திற்கும் அதே இடத்தில் பிறக்கும் வல்லினம் உண்டு!

ஆமாம். அதனால்தான் க-ங, ச-ங, ட-ண, த-ந, ப-ம, ற-ன என்று அடுத்தடுத்துக் கோத்துள்ளது.

9. மெய்யெழுத்துகளின் வரிசையில் ற-ன இரண்டும் கடைசியில் உள்ளன; அவை இரண்டும் ஏன் மற்ற வல்லினங்களோடு கோத்து வரவில்லை; கடைசியில் வைத்துள்ளது ஏன்?

நல்ல வினாத்தான். ற-ன இரண்டும் பிறக்கும் இடம் த-ந இரண்டும் பிறக்கும் இடத்திற்கு உள்ளே உள்ளது; அதாவது ட-ண பிறக்கும் இடத்திற்கும் த-ந பிறப்பிடத்திற்கும் இடையில் உள்ளது. எனவே க-ங, ச-ஞ, ட-ண, ற-ன, த-ந, ப-ம, ய, ல, வ, ழ, ள என்றுதான் இருக்கவேண்டும்.

இதற்குக் காரணம் இன்னும் முழுதாகத் தெரியவில்லை ஆயினும் மொழியியலார் ஒரு பெரிய காரணமாகக் கருதுவது பிராமிக் கல்வெட்டு எழுத்துகள் வரிசையை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகள், பிராகிருதம் போன்ற ஆரிய மொழிகளில் றகர-னகரங்கள் இல்லாததால் அந்த வரிசையில் அவை கோக்கவில்லை. பிறகு தமிழ்மொழியில் பிராமியெழுத்துகளை வரையும்பொழுது றகர-னகரங்களைக் கடைசியில் கோக்கவேண்டியிருந்தது என்று கருத்துண்டு.

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com