கோயில்களின் நகரம் கும்பகோணம். தஞ்சைக்குக் கிழக்கே சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் தலத்தை 'திருக்குடமூக்கு' எனப் பண்டை இலக்கியங்கள் கூறுகின்றன. திருக்குடந்தை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்நகரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சோழர்களின் தலைநகராகவும் விளங்கியதுண்டு. இங்குள்ள ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் சோழர்களால் கட்டப்பட்டது. இக்கோவில் இறைவனின் நாமம் ஆதிகும்பேஸ்வரர். அமுதகும்பேசர், அமுதேசர் என்ற பெயர்களும் உண்டு. இறைவியின் நாமங்கள் மங்களநாயகி, மந்திரபீடேஸ்வரி.
பிரளய காலத்தில் மிதந்து வந்த அமுதக் குடத்தைச் சிவபெருமான் அம்பெய்து குடத்தின் மூக்கை உடைத்ததால் இத்தலத்திற்கு 'குடமூக்கு' என்னும் பெயர் வந்தது. நாவுக்கரசர், ஞானசம்பந்தர், பூதத்தாழ்வார் ஆகியோர் இத்தலத்தை 'குடமூக்கு' என்றும், பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசை ஆழ்வார் ஆகியோர் 'குடந்தை' என்றும் குறிப்பிட்டுள்ளனர். கும்பேசர் கரத்தினால் சிருஷ்டிக்கப்பட்டமையால் அவரே முதல்வர். வானவர், மன்னவர் யாவரும் பூசித்திருப்பதால் மூர்த்தி மிகச் சிறப்புடையது. மகாமக தீர்த்தம், பொற்றாமரைத் தீர்த்தம், வருண தீர்த்தம், காசிப தீர்த்தம் உட்பட இத்தலத்தில் 14 தீர்த்தங்கள் உள்ளன. இதில் முதன்மையாக விளங்குவது மகாமக தீர்த்தம். சிவபெருமான் அம்பெய்தி உடைத்த அமுத கலசத்தில் இருந்து அமுதம் சிந்திய இடம்தான் மகாமகக் குளம். அமுதம் பரவிய பிற ஐந்து இடங்கள் திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, கருப்பூர் ஆகியனவாகும்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியிலும் சூரியன் கும்பராசியிலும் வரும் மாசி மகமாகிய பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான மக்கள் வந்து மகாமகக் குளத்தில் நீராடுகிறார்கள். உலகிலுள்ள புண்ணிய தீர்த்தங்கள் யாவும் ஒருசேர வந்து நீராடுவதால் இதில் நீராடுவது புண்ணியமாகக் கருதப்படுகிறது. "காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் தீரும். ஆனால் கும்பகோணத்தில் செய்த பாவம் கும்பகோணத்தில்தான் தீரும்" என்ற மூத்தோர் மொழியால் இத்தலப் பெருமையை உணரலாம். தென்னாட்டிலுள்ள 274 தேவாரத் திருத்தலங்களில் 127 காவிரியின் தென்கரையில் உள்ளன. இந்நகரில் மூன்று பாடல்பெற்ற தலங்கள் உள்ளன. பத்துக்கும் மேற்பட்ட தேவாரத் தலங்கள் இந்நகரைச் சுற்றி 15 கி.மீ. தூரத்துக்குள் அமைந்துள்ளன. தேவார மூவராலும், மாணிக்கவாசகர், சேக்கிழார் போன்றோராலும் புகழ்ந்து பாடப்பெற்ற தலம் இது. எண்பதுக்கு மேற்பட்ட சிறிய, பெரிய கோயில்கள் இந்நகரில் அமைந்துள்ளதால் இது கோவில்நகரமாகக் கருதப்படுகிறது. குடந்தை இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இந்நகரில் 12 சிவாலயங்களும், 4 விஷ்ணு ஆலயங்களும் உள்ளன.
சக்தி பீடங்களுள் ஒன்றான மந்திர பீடத்தில் இருப்பதால் அன்னை மந்திரபீடேஸ்வரி. நாவுக்கரசர் இத்தல அன்னையை 'வளர்மங்கை' என்று தனது பதிகத்தில் குறித்துள்ளார். இறைவன் தம்முடைய 36000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் இத்தல அன்னை, இந்தியாவிலுள்ள அனைத்துச் சக்தி பீடங்களுக்கும் முதன்மையான சக்தி பீடமாகி 72000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருள்பாலிக்கிறாள். 51 சக்தி பீடங்களுக்கும் முதன்மை நாயகி இவளே!
செம்பருத்திப் பூவால் கிரீடம் செய்து தம் வாழ்நாளில் ஒரே ஒருமுறையாவது அன்னைக்கு அணிவித்து வணங்குபவர் குபேர சம்பத்தை அடைவர் என்கிறது புராணம். பிரம்மன் தானே முன்னின்று முதல் மாசிமகத் திருவிழாவைச் செய்த பெருமை இத்தலத்துக்கு உண்டு. நிலவுலகில் செய்யப்பட்ட முதல் திருவிழா இதுதான்.
நான்கு கோபுரங்களைக் கொண்டுள்ள இவ்வாலயத்தின் ராஜகோபுரம் 128 அடி உயரம் கொண்டது. 3 பெரிய பிரகாரங்கள் உள்ளன. சிவபெருமான் சுயம்பு லிங்கம். ஆறுகால கணபதி, பைரவர், அறுபத்து மூவர் போன்ற சன்னதிகளோடு கோவிந்த தீக்ஷிதர், பத்தினி நாகம்மாள் (மகாமகக் குளத்திருப்பணி செய்த தம்பதியினர்) உட்படப் பிற தெய்வீகத் திருவுருவங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளன. கிழக்குப் பகுதியில் கிராத மூர்த்தி வில், அம்பு ஆகியவற்றை ஏந்தியவாறு தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார். இவரே இத்தலத்தின் மூர்த்தி. இறைவன், இறைவியை எதிர்நோக்கிக் காத்திருந்ததால் இத்தல விநாயகர் ஆதிவிநாயகர் எனப்படுகிறார். முருகன் சூரசம்ஹாரத்திற்குச் செல்லும் முன் இத்தல இறைவனை வணங்கி வழிபட்டுச் சென்றதாக ஐதீகம். அமுதகலசத்தை அலங்கரித்த பொருட்கள் யாவும் சுயம்புலிங்கமாய் மாறிவிட்டனவாம். இத்தனை சுயம்பு லிங்கங்களை வேறெங்கும் பார்க்கக் கிடைப்பதில்லை.
சீதா துரைராஜ், சான்ஹோஸே, கலிபோர்னியா |