நீங்களாகவே இருங்கள்
அன்புள்ள சிநேகிதியே

'தென்றல்' செப்டம்பர் இதழில் ஒரு சகோதரி தன் மாமியார் குடும்பத்திற்கு எவ்வளவு செய்தும் தனக்கு எந்த அங்கீகாரமும் இல்லை என்று எழுதியிருந்தார். அவர் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. எனக்கும் அதேபோல அனுபவம் உண்டு. நிறையப் பேரைப் போல நானும் ஏன் சுயநலமாக இருக்கக் கூடாது. உறவு மக்களுக்கு உதவி செய்து என்ன பலன் கண்டோம் என்று வெறுப்பு வருகிறது.

என் கணவருக்குக் கூடப் பிறந்தவர்கள் 5 பேர். எல்லோரும் பிள்ளைகள். இவர் இரண்டாவது. இவரும், கடைசியானவரும் இங்கே இருக்கிறார்கள். எல்லோரையும் கல்லூரிக்கு அனுப்பும் வசதி இருந்தது அவர் வீட்டில். ஆனால், இவருடைய 2வது தம்பிக்கு மட்டும் படிப்பில் அவ்வளவு ஈடுபாடு வரவில்லை. என் மாமியார், மாமனாருடன் தங்கி, விவசாயம் பார்த்து ஊரோடு இருந்துவிட்டார். மற்றவர்கள் இந்தியாவிலே நல்ல இடத்தில் பெண் எடுத்து வசதியாக இருக்கிறார்கள். இந்தத் தம்பிக்கு சாதாரண இடம். நல்ல பெண். நாங்கள் ஊருக்குப் போகும்போதெல்லாம் எல்லோரும் ஒன்றுகூடுவோம். ஜாலியாக இருப்போம். நான் எல்லோருக்கும் நிறையச் செலவு செய்து சாமான்கள் கொண்டு போவேன். என்னுடைய இந்த ஓரகத்திக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாகக் கொடுப்பேன். மற்றவர்களுக்குக் கொஞ்சம் பொறாமையாக இருக்கும். அவளுக்கு எதற்கு இந்த Perfume என்று கேட்பார்கள்?

நான் அவளுக்குப் பரிந்துகொண்டு பேசுவேன். அவள் குழந்தைகளுக்கு எப்படி சுத்தமாக இருக்க வேண்டும், அமெரிக்காவில் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்றெல்லாம் கதை சொல்லுவேன். இந்த ஓரகத்திக்கு நிறைய ஊர் சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற ஆசை. மற்றவர்களைப் போல நல்ல வசதியோடு இருக்கவேண்டும் என்று ஆசை. எனக்கு இங்கே அழைத்துக்கொள்ள விருப்பமாக இருந்தாலும், 4 டிக்கெட் எடுக்க வேண்டுமே என்று யோசிப்பேன். போனமுறை அங்கே போனபோது, நான் கேள்விப் பட்டேன். என் மைத்துனர் 3 குடும்பங்களும் ஒன்றாக டில்லி, ஆக்ரா என்று 15 நாள் சுற்றிவிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த மைத்துனர் குடும்பத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. எங்களிடம் வீடியோ, போட்டோ எல்லாம் பெருமையாகக் காட்டினார்கள். இந்த ஓரகத்தியும் குழந்தைகளும் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

எனக்கு ஒரே கோபம். "எப்படி இந்தக் குடும்பத்தை விட்டுவிட்டுப் போக மனம் வந்தது. அவர்களும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தானே. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா?" என்று நியாயம் கேட்டேன். அதற்கு "அப்பா, அம்மாவை விட்டுவிட்டு எப்படி அவர்களைக் கூப்பிட்டுக் கொண்டு போகமுடியும்?" என்று பதில் சொல்ல, எனக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. வைத்து விளாசினேன், ஒவ்வொருவரையும். "அவர்களுக்கும் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருக்கிறது. எப்படி இரண்டு குழந்தைகளை ஏங்க வைத்துவிட்டு, இவர்கள் குஷியாக போய்விட்டு, பீற்றிக் கொள்கிறார்கள் என்று." ஒரே வாக்கு வாதம். சண்டை. அவர்கள் எல்லோரும் என்னிடம் கோபித்துக்கொண்டு கிளம்பி போய்விட்டார்கள். "நீபாட்டுக்கு அமெரிக்காவிலிருந்து வந்து நியாயம் பேசாதே" என்று எனக்கு அறிவுரை வேறு கிடைத்தது.

இந்த ஓரகத்தி ஒரே அழுகை. "நீங்கள் என் பக்கம் பேசிவிட்டு, இரண்டு வாரத்தில் கிளம்பிவிடுவீர்கள். ஆனால் என் பேரில்தானே அவர்கள் கோபத்தைக் காட்டப் போகிறார்கள். நாள், பண்டிகை என்றால் என்ன செய்வது?" என்று வருத்தப்பட்டாள். அந்த விடுமுறை நாள் ரொம்பக் கசப்பாக இருந்தது. நான் சுயநலமாக எதுவும் செய்யவில்லையே! நியாயத்தைத்தான் எடுத்துச் சொன்னேன். கடைசியில் எல்லோருடைய வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டேன். என்னுடைய பக்கம் ஏன் அவர்களுக்குப் புரியவில்லை. இன்னும் காட்டமாகவே இருக்கிறார்கள். இப்போது இந்தியா போகும் ஆர்வமே இல்லை. அடிபட்ட புலிகள் இன்னமும் உறுமிக் கொண்டிருக்கிறார்கள் என்று என் மைத்துனர் சொன்னார். அந்த ஓரகத்தி இப்போது என்னுடன் பேசுவதற்கே பயப்படுகிறாள். இது எப்படி இருக்கிறது?

இப்படிக்கு
..............

அன்புள்ள சிநேகிதியே

'நியாயம்' என்பது ஒரு சுவாரஸியமான சொல். நியாயம் கேட்டு நம்மிடம் யார் பேச வந்தாலும், அவர் கூறுவதை நாம் ஆமோதிப்பதுதான் நியாயம் என்று கருதப்படுகிறது. சுயநலமில்லாமல் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை அநியாயர்களாகக் காட்டும். நாம் அந்நியர்களாக மாறிப் போய்விடுவோம். இங்கே எல்லோரும் ஒரே தராசை உபயோகப்படுத்துவது இல்லை. அதேபோல தன்னுடைய செய்கைகள் நியாயம் இல்லை என்று உள்மனதில் பட்டாலும் நியாயப்படுத்தும் வாதங்களைத் தங்களுக்குள்ளே உற்பத்தி செய்து, அந்த உள்மனதைச் சமாதானப்படுத்திக் கொள்கிறோம். அதுவும், நம் செய்கைகள் பிறருக்குத் தெரியாது என்ற நினைப்பில் இருந்து அது வெளிப்படும்போது நமக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சியால் மற்றவரை அநியாயக்காரர்களாக நாம் காட்ட முயற்சி செய்வோம். இதெல்லாம் வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படும் சம்பவங்கள். சகஜம்.

நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் உங்களுடைய சுயநலமற்ற பாங்கு தெரிகிறது. நீங்கள் அவர்களுடைய குற்ற உணர்ச்சியை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். வெறுப்பு இருக்கத்தான் செய்யும். சுயநலம் என்பது நம் எல்லோருக்கும் உடன்பிறந்த ஒரு வியாதி. நாமே அதை இனம்கண்டு, நாமே கட்டுப்படுத்த முயற்சி செய்தால்தான், அந்த வியாதியின் வீரியம் குறையும். ஆனால் நம்மில் நிறையப் பேர் அதை வளர விட்டுவிடுகிறோம். அது முற்ற முற்ற ஆத்மார்த்த உறவுகள் விலகிப் போகும். நாம் தனியராக்கப்படுவோம்.

இப்போது நீங்கள் அனுபவிக்கும் கசப்பான நிலை ஒரு தற்காலிகமான நிலைதான். உங்களுடைய நியாயத்தின் ஆழம் புரிபட உங்கள் உறவுகளுக்கு இன்னும் நேரம் வேண்டியிருக்கிறது. அவர்களுக்குள் ஏதேனும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படும் போது உங்களிடம்தான் வருவார்கள், நியாயம் கேட்டு. அவர்களுக்குத் தெரியும் அது கலப்படம் இல்லாதது என்று. 'விளாசி விட்டேன்' என்று எழுதியிருக்கிறீர்கள். எந்த அளவிற்குக் 'கூர்மை' என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் 'sarcasm' என்பதுதான் மிகக் கூர்மை. அது இல்லாமல் இருந்தால் உங்கள் நேர்மையான கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பு இருக்கும். என்னுடைய நியாயத்தை எழுதிவிட்டேன். Be What You Are!

வாழ்த்துக்கள்
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com