இந்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி, தமிழிசை வேந்தர், கம்பீர கான கலாநிதி, முத்தமிழ் பேரறிஞர், கலா ரத்னா, பண்ணிசை அரசு, இன்னிசை மாமணி போன்ற பல பட்டங்களையும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு கௌரவங்களையும், பாராட்டுதல்களையும் பெற்றவர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம். சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் கல்லூரியில் பேராசிரியர், மருத்துவர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என்று கலையும் அறிவியலும் செம்மையாய்க் கலந்த வாழ்க்கை வாழ்பவர். தென்றலுக்காக அவரைச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து...
*****
கே: உங்கள் தந்தையார் கலைமாமணி சீர்காழி கோவிந்தராஜன் குறித்த இளவயது நினைவுகள் என்னென்ன? ப: நான் பிறந்தபோது என் தந்தை மாடர்ன் தியேட்டர்ஸில் "வண்டு ஆடாத சோலையில்..." என்ற பாடல் ஒலிப்பதிவில் இருந்தார். நான் பிறந்த செய்தி தெரிவிந்ததும் காரில் ஓடோடி வந்தார். நான் கேட்ட முதல் இசைக்குரல் என் தந்தையினுடையதுதான். பிறந்த நாள் முதல் என்னைச் சுற்றி இருந்த சூழல் எல்லாமே இசைமயம்தான். என் தகப்பனார் நான் இசைத்துறையில் சாதிப்பதைவிட, படித்து நிறைய சாதிக்க வேண்டும் என்று விரும்பினார். காரணம், அவர் இசைத்துறையில் மிகவும் கஷ்டப்பட்டார். தான் பட்ட கஷ்டங்களை தன் குழந்தைகள் படக்கூடாது என்று நினைத்தார். அதற்காக என்னை செயின்ட் பீட்ஸ் கான்வெண்ட் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். 6ம் வகுப்புவரை எனக்கு இசைப் பயிற்சி கிடைக்கவில்லை. லீவு விட்டால் அப்பாவுடன் உள்ளூர், வெளியூர் கச்சேரிகளுக்குப் போவேன். பிற இசைவாணர்களது கச்சேரிகளுக்கும் போவேன். கச்சேரி கேட்டுக் கேட்டு இசையில் நாட்டம் ஏற்பட்டது. ஆனால் அதை ஊக்குவிக்காமல் படிப்புதான் முக்கியம் என்று வலியுறுத்தி வந்தார்.
கே: இசைத்துறையில் காலடி வைத்தது எப்போது? ப: பள்ளியில் அடிக்கடி ஏதாவது விழா நடக்கும். நான் இசைமணியின் மகன் என்பது தெரிந்ததால் ஹிந்தி மிஸ் அலமேலு, தமிழ் மிஸ் ஃப்ளாரன்ஸ் போன்றவர்கள் என்னைப் பாடச் சொல்வார்கள். ஒருமுறை பள்ளி பெற்றோர் தின நிகழ்ச்சியில் நான் பாடினேன். CEO கருப்பையா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றிருந்தார். அவர் என் பாடலை மிக ரசித்துப் பாராட்டி எனக்குப் பரிசளித்தார். எனக்கு முதல் முதலில் கிடைத்த பரிசு அது. அதை எடுத்துக்கொண்டு போனேன். அதைப் பார்த்து என் தந்தையின் கண்கள் கலங்கிவிட்டன. "இதற்கா உன்னை நான் கான்வெண்டில் படிக்க வைத்தேன். இந்தப் பரிசு வாங்குவதற்கு கான்வெண்ட் படிப்பெல்லாம் தேவையில்லையே!" என்றார் வருத்தத்துடன். பின், "நான் அந்தக் காலத்து ESLC படித்தவன். நீங்கள் எல்லாம் என்னைவிட நன்றாக வரவேண்டும் என்றுதான் கான்வெண்டில் சேர்த்திருக்கிறேன். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன் பின்னர் என் தாயார் சுலோசனா கோவிந்தராஜன், என் தந்தையாரிடம், "இவன் நன்றாகப் படிப்பான். அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் இசைமணி பையன் என்றால் கொஞ்சமாவது சங்கீதம் தெரிந்திருக்க வேண்டாமா? இவனுக்கு நல்ல ஞானமும், ஆர்வமும் இருக்கிறது. நாமே அதற்குத் தடைபோடக் கூடாது. இசையும் கற்றுக் கொள்ளட்டும்" என்று பரிந்து பேசினார். பின்னர்தான் தந்தை நான் இசை பயிலச் சம்மதித்தார். ஆனால் அவர் எனக்கு சொல்லித் தரவில்லை. தனது இசைக் கல்லூரித் தோழரான சங்கீத வித்வான் பி. கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் இசை பயில ஏற்பாடு செய்தார். இப்படித் தொடங்கியது என் இசைப் பயணம்.
கே: முதல் கச்சேரி அனுபவம்? ப: பிரபல இசை, நாட்டியக் கலைஞர்களின் வாரிசுகள் எல்லாம் அரங்கேறிக் கொண்டிருந்த காலம் அது. என் தந்தை அவ்வாறு விரும்பவில்லை. ஆடம்பரமாகப் பலரைக் கூட்டி விழா நடத்துவது அவருக்கு ஏற்பில்லை. ஆத்மார்த்தமாக இசையை ரசிப்பவர்கள் முன் பாடினாலே போதும் என்று அவர் நினைத்தார். ஆலயதரிசனம் செல்லும்போது அவர் முதலில் பாடுவார். பின்னர் என்னைப் பாடச் சொல்வார். சமயங்களில் என்னை முதலில் பாடச் சொல்லிவிட்டுப் பின் அவர் பாடுவார். இப்படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை மீனாட்சி என்று பல ஆலயங்களில் பாடியிருக்கிறேன். அது ஒருவித அனுபவம். முதல் கச்சேரி அனுபவம் என்றால் அது பரமாசார்யாள் முன் பாடியதைச் சொல்லலாம். ஒருமுறை மகா பெரியவர் சென்னை மயிலாப்பூருக்கு விஜயம் செய்திருந்தார். நான், என் தந்தை எல்லோரும் குடும்பத்துடன் அவரை தரிசிக்கச் சென்றோம். அப்போது ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் உடன் இருந்தார். என் தந்தையின் கச்சேரி நடந்தது. உடனே ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்னையும் பாடச் சொன்னார். காமாட்சி அம்பாள் மீது தீக்ஷிதர் இயற்றிய க்ருதியான "காமாட்சி கருணா விலாஸினி" என்ற பாடலை நான் பாடினேன். பெரியவர்கள் ஆசிர்வதித்து பிரசாதம் கொடுத்தார்கள். மகா பெரிய மேதைகளின் முன்பு அன்று பாடியதை முதல் கச்சேரி அனுபவம், முதல் அரங்கேற்றம் என்று சொல்லலாம்.
கே: அதன்பின்... ப: ஒருமுறை டி.ஆர். பாப்பா வானொலி ஒலிப்பதிவு ஒன்றிற்காக எனது தந்தையைப் பார்க்க வந்திருந்தார். அப்போது நான் பாத்ரூமில் பாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தேன். எனது குரலைக் கேட்டு விட்டு அவர், "குரல் மிக நன்றாக இருக்கிறதே! வானொலியில் பாடுவதற்கு முயற்சிக்கலாமே!" என்றார். எனது தந்தையும் ஒப்புதல் அளித்தார். ஆடிஷன் டெஸ்ட் நடந்தது. சென்னை வானொலியின் மெல்லிசை நிகழ்ச்சிக்குப் பாடத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பாடல்களும் பாடினேன். அதைக் கேட்ட ஹெச்.எம்.வி நிறுவனத்தினர் என்னை அவர்களது இசைத் தட்டிற்காகப் பாட அழைத்தனர். உளுந்தூர் பேட்டை சண்முகம் அவர்கள் பாடல்கள் எழுத, டி.ஆர்.பாப்பாவின் இசையில் விநாயகர், முருகன், அம்பாள், ஐயப்பன் மீது நான் பாடி இசைத்தட்டு வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பல இசைத்தட்டுக்கள், கேசட்டுகள் பாடும் வாய்ப்பு வந்தது.
கே: திரைப்படத்தில் பாடுவது உங்களுக்கு இயல்பாக வந்திருக்க வேண்டுமே.... ப: ஆமாம். நான் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலம் அது. இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் என்னைப் பின்னணி பாடுவதற்கு அழைத்தனர். "புலி வருது புலி" என்பது படத்தின் பெயர். கண்ணதாசன் எழுதிய பாடலை நான் பாடி வாய்ஸ் டெஸ்ட் நடந்தது. ஆனால் படம் வெளியாகவில்லை. முதலில் நான் திரைப்படத்தில் பாடி வெளியான பாடல், "மிருதங்கச் சக்ரவர்த்தி" படத்தில், புலமைப்பித்தன் எழுதிய "அபிநய சுந்தரி ஆடுகிறாள்" என்ற பாடல்தான். அந்த வாய்ப்பைத் தந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். பிரபுவுக்காக நான் அந்தப் பாடலைப் பாடியிருந்தேன். அன்று தொடங்கி இன்று ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ்குமார், இமான் வரை பாடிவிட்டேன்.
கே: நாடகங்களில் நடித்திருக்கிறீர்கள் அல்லவா? ப: ஆமாம். ஆரம்பத்தில் சென்னைத் தொலைக்காட்சியின் 'வயலும் வாழ்வும்' நிகழ்ச்சியில் நிறையப் பாடிக் கொண்டிருந்தேன். அப்போது பாரதியார் நூற்றாண்டு விழா வந்தது. எம்.எஸ்.பெருமாள், அனந்து போன்றவர்கள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாக இருந்தார்கள். அவர்கள் எல்லா நிகழ்ச்சிகளிலும் பாரதியார் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று செயல்பட்டார்கள். அதனால் எனக்கும், ராஜ்குமார் பாரதி, டி.கே.எஸ். கலைவாணன், டி.கே. கலா, சசிரேகா போன்றோருக்கும் நிறைய பாரதி பாடல்களைப் பாடும் வாய்ப்பு வந்தது. அப்போது எம்.எஸ். பெருமாள், எழுத்தாளர் வாசவனின் உறுதுணையோடு மூன்று தியாகிகளைப் பற்றிய 'திரிசூலம்' என்ற நாடகத்தை வடிவமைத்தார். அரைமணி நேர நிகழ்ச்சி அது. கதையைவிடப் பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம். அதில் பாரதியாக டெல்லி கணேஷும், சுப்ரமண்ய சிவாவாக டி.கே.எஸ். கலைவாணனும் நடிக்க, நான் வ.உ.சி. வேடம் ஏற்று நடித்தோம். அது லைவ் நிகழ்ச்சி. பெரிய வரவேற்புக் கிடைத்தது. பலதடவை மறு ஒளிபரப்பானது. எனது நடிப்பால் கவரப்பட்ட ஏவி.எம்,மின் மாப்பிள்ளை அருண் வீரப்பன், 'ஒளிமயமான எதிர்காலம்' என்ற சீரியலில் நடிக்க அழைத்தார். எனக்கு டாக்டர் வேடம். நகைச்சுவையாக, பாட்டுப் பாடி நடிக்கும் ஜாலியான கேரக்டர். தொடர்ந்து 'இருட்டை விரட்டும் வெளிச்சங்கள்', 'என் இனிய இயந்திரா' போன்ற பல சீரியல்களில் நடித்தேன். 'மனசு ப்ளஸ்' தொடரில் டாக்டர் வேடம். 'கந்தபுராணம்' தொடரில் கச்சியப்ப சிவாசாரியாராக, நல்ல இலக்கண சுத்தமான தமிழைப் பேசி, பாடி நடித்தது மறக்க முடியாதது. அதுபோல 'சிவனருட் செல்வர்கள்' என்னும் அறுபத்து மூவர் வரலாற்றில் சேக்கிழாராக நடித்ததும், 'மீனாட்சி திருவிளையாடல்' படத்தில் அகத்தியராக நடித்ததும் மறக்க முடியாது. சுத்தமான தமிழ் பேசும் வேடங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன என்றாலும் எனக்கு கர்நாடக மற்றும் தமிழிசை மீது இருந்த ஆர்வத்தாலும், மருத்துவப் பணிக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டி இருந்ததனாலும் நாடக நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
கே: தந்தையுடன் இணைந்து கச்சேரிகள் செய்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் எப்படி? ப: பல இடங்களில் செய்திருக்கிறோம். ஒருமுறை லண்டனில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பாட வாய்ப்பு வந்தது. அங்குள்ள குழந்தைகளுக்காக Lord Muruga London Muruga என்ற ஆங்கிலப் பாடலைப் பாடினேன். பலரும் அதை என் தந்தை பாடியது என்றே நினைப்பார்கள். நல்ல வரவேற்பு. EMI நிறுவனம், ஒரு தமிழிசை வாணரின் தமிழிசை நிகழ்ச்சியை உலகளாவிய அளவில் பதிவு செய்து வெளியிட்ட முதல் எல்பி என்பது அதுதான். மற்றொருமுறை டெட்ராய்ட்டுக்குச் சென்றிருந்தோம். கண்ணதாசனும் வந்திருந்தார். முன்வரிசையில் அவர் அமர்ந்திருந்தார். கண்ணதாசனுக்கு முன் நான் பாடவேண்டும் என்று அப்பாவுக்கு ஆசை. கண்ணதாசன் கண்மூடி ஏதோ சிந்தித்தவாறு அமர்ந்திருந்தார். என் தந்தை பாடி மிகவும் பிரபலமான "ஆதாரம்" பாடலை நான் பாடினேன். அப்படியே என் தந்தை குரலில் நான் பாடியதால் நேயர்கள் எல்லாம் பிரமித்துப் போய் கை தட்டினர். 'எப்போதும் மேடையில் பாடும் பாடல்தானே, இதற்கென்ன இவ்வளவு வரவேற்பு' என்று நினைத்து கண்ணதாசன் கண் விழித்துப் பார்த்தபோதுதான் பாடியது நான் என்பது தெரிய வந்தது. உடனே மேடை ஏறி என்னை ஆசிர்வதித்து, வாழ்த்திப் பேசினார். இதைப் பற்றிக் கவியரசர் குமுதத்தில் "பறந்து கொண்டே எழுதுகிறேன்" என்ற கட்டுரையிலும் பாராட்டி எழுதியிருந்தார். அதை மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
கே: கர்நாடக இசை மேடையில் தமிழிசைக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்ற கருத்து நிலவுகிறதே.... ப: அப்படி ஒரு நிலை முன்பிருந்தது. அது மாறவேண்டும் என்பதற்காகத் தான் தமிழிசை இயக்கமே தோன்றியது. ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், கல்கி, ராஜாஜி எல்லோரும் தமிழிசையை வளர்த்தனர். இன்று அவர்களது அந்த நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்று பாரம்பரியமான சபாக்களில் கூடக் கச்சேரிகளில் தமிழ்க் கீர்த்தனைகளைப் பாடாவிட்டால் எடுபடாது என்ற நிலை வந்துவிட்டது. ஆனால் இன்னும் நிறைய முக்கியத்துவம் கொடுத்துப் பாடவேண்டும். நல்ல மொழி உச்சரிப்பு, பாவம் வேண்டும். அதிகம் வெளியில் தெரியாத நல்ல பல கீர்த்தனைகளைப் பாட வேண்டும். அதெல்லாம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. இப்போதெல்லாம் இளந்தலைமுறையினர் மிகச் சிறப்பாகத் தமிழ்க் கீர்த்தனைகள் பாடுகின்றனர். தற்போது சபாக்கள் பெருகிவிட்டன. டிசம்பர் சீசன் தவிர மாதந்தோறும் தமிழிசை நிகழ்ச்சி நடத்தும் சபாக்கள்கூட உள்ளன. மேலும் வானொலி, தொலைக்காட்சியிலும் தமிழிசைக்கு முன்னைவிட அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஆலயங்களிலும் தமிழிசை, பக்தி இசைப் பாடல்கள் பாட வாய்ப்புகள் பெருகியுள்ளன. இதுதான் இன்றைய நிலை.
கே: ஆலய நிகழ்ச்சிகளில் பக்தியிசையை விடுத்து ஆட்டம், பாட்டம், கேளிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே! ப: உண்மைதான். ஆனால் அது மிகவும் தவறானது. கலாசாரச் சீர்கேட்டை விளைவிப்பது. இதை உணரும் பிரக்ஞை பார்வையாளர்களுக்கும், நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் வேண்டும். ஆலயத்துக்கு வருபவன் இறைவனை வணங்க வருகிறான். ஆபாசமான ஆட்டபாட்டத்தை ரசிக்க, வேடிக்கை பார்க்க வருபவன் எப்படி பக்தனாக இருக்க முடியும்? இதனை நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் உணர்ந்து மாற்ற வேண்டும். நான் வடபழநி ஆண்டவர் கோவில் அறங்காவலாராக இருந்தபோதும், மயிலை கபாலீச்வரர் ஆலய அறங்காவலராகத் தொண்டு செய்த போதும் விழாக்களில் தமிழ் பக்தியிசை மட்டுமே பாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அதைச் செயல்படுத்தினேன். நிறைய தேவாரம், திருப்புகழ், அருட்பாக்கள், பக்திப் பாடல்கள், பக்திச் சொற்பொழிவுகள், பாராயணங்கள் நிகழ்ச்சிகளில் இடம்பெற ஆவன செய்தேன். இதைப் பின்பற்றினால் கலாசாரச் சீர்கேட்டை, அடுத்த தலைமுறை பாதிப்படைவதைத் தவிர்க்க முடியும். உதாரணமாக "தாயை மறவாதே" என்று மு. அருணாசலம் பிள்ளையின் ஒரு கீர்த்தனை இருக்கிறது. அதை ஒரு பாடகர் உணர்ந்து பக்தி பாவத்தோடு பாடுவதைக் கேட்கும் ஒரு குழந்தையால் தாயை மறக்க முடியுமா? இதெல்லாம் எதற்கு பாடப்படுகின்றன? தாயை மதிக்க வேண்டும், தாய்நாட்டை, தாய்மொழியை மதிக்க வேண்டும், குருவை வணங்க வேண்டும், பெரியோரைப் போற்ற வேண்டும். நல்லவனாக வாழ வேண்டும் என்பதையெல்லாம் வலியுறுத்துவதற்காகத்தான். இதை எல்லோரும் உணர்ந்து மாற்றங்கள் கொண்டு வந்தால்தான் நம் பண்பாடு செழிக்கும். இல்லாவிட்டால் சீர்கேடுகளைத் தடுக்க இயலாது.
கே: மறக்க முடியாத வெளிநாட்டு அனுபவங்கள்... ப: வெளிநாட்டு அனுபவங்கள் எல்லாமே மறக்க முடியாதவைதான். தமிழர்கள் மட்டுமல்லாது திரளாகப் பல வெளிநாட்டினரும் வந்து ரசிப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. ஆனால் ஒரு விஷயம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் வளர்வதற்காகவும், நமது கலாசாரம், பண்பாடு வளர்வதற்காகவும் கடுமையாக உழைக்கிறார்கள். இருந்தாலும் சினிமா போன்றவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தற்போது மிக அதிகமாக இருக்கிறது. சினிமா தேவைதான், வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனாலும் நமது பண்பாடு காக்கும் மரபுக் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் இன்னும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வருடா வருடம் அதே கலைஞர்களையே திரும்ப அழைக்காமல், திறமையுள்ளவர்களைக் கண்டறிந்து வரவேற்க வேண்டும். எனது இளம்பருவத்தில் நான், தந்தை எல்லாம் பல நாடுகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளுக்கு எந்த எதிர்பார்ப்புமில்லாமல் சென்று கலந்துகொண்டோம். கலை வளர வேண்டும், பண்பாடு செழிக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமாக இருந்தது. ஆனால் இப்போது வெளிநாடுகளில் தொழில்வளம், செல்வவளம் எல்லாம் பெருகிய பிறகு சினிமாக் கலைஞர்களுக்கும் டான்ஸ், மிமிக்ரி போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நான் சினிமாக் கலைஞர்களுக்கு எதிராகப் பேசுகிறேன் என்பது பொருளல்ல. அது மட்டுமே கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமா என்று சிந்திக்கவேண்டும். இங்கே நடிப்பவர்களை அங்கேயும் அழைத்து நடிக்க வைப்பதை, பேச வைப்பதை விட அவர்களின் மற்றத் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாய் நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டும் என்கிறேன். இப்போது ரேவதி, ஷோபனாவை எடுத்துக் கொண்டால் அவர்கள் நடிகைகள் மட்டுமல்ல; நல்ல டான்ஸர்களும்கூட. அவர்களின் நடன நிகழ்ச்சியை நடத்தலாமே! மரபுக் கலைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
கே: அறங்காவலர் குழுத் தலைவராக இருந்து நிறைய ஆன்மிகப் பணி செய்துள்ளீர்கள் அல்லவா? ப: ஆம். அது இறைவன் எனக்கு அளித்த பாக்கியம். மயிலாப்பூர் கபாலீச்வரர், வடபழநி முருகன் ஆலயங்களில் அறங்காவலர் பணி செய்துள்ளேன். நான் நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இறைவன் அந்த வாய்ப்புகளை அளித்தான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மயிலை ஆலயத்தில் தங்கக் கொடிமரம் செய்தது, 72ல் தொடங்கப்பட்ட தங்கத் தேர் திட்டப் பணியை தீவிரப்படுத்தி, அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்தது, கிரானைட் கற்கள் பதித்தது என்று ஒரு கும்பாபிஷேக செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் போன்று பல பணிகளை நாங்கள் செய்தோம். முதன்முதலில் அன்னதானத் திட்டம் நடைமுறைப்படுத்தியது அங்குதான். அதுபோல ஆலயத்திற்கு வந்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு நல்லொழுக்கப் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் நாங்கள் கொண்டு வந்தோம். இன்று அந்தத் திட்டங்கள் பல ஆலயங்களிலும் நடைமுறைகளில் உள்ளன. மொத்தத்தில் தூய்மையான நிர்வாகத்தை, வழிபாட்டில் ஒழுங்குமுறையைக் கொண்டு வந்தோம். இவற்றை வடபழனி ஆலயத்திலும் செய்தோம். ஆலயப் பாதுகாப்பைச் செம்மைப்படுத்தினோம். சிறப்பாகக் கும்பாபிஷேகம் செய்தோம். இப்படி அரசுடனும், அறநிலையத்தினருடனும், பக்தர்களுடனும், பிற நண்பர்கள், பணியாளர்களுடனும் இணைந்து பல நற்பணிகளை மேற்கொண்டோம். நான் எந்தவித எதிர்பார்ப்புமில்லாத பயபக்தியுள்ள ஒரு அறங்காவலர் குழுத் தலைவராக இருந்தேன். தலைவர் என்று சொல்வதை விட "ஆலயத் தொண்டன்" என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
நாம் கேட்கும் வேகத்தில் வெண்கலக் குரலில் பதில் வருகிறது சிவசிதம்பரத்திடமிருந்து. "என் தந்தை அடிக்கடி சொல்வார், நீ இசை கற்றுக் கொள்வது பெரிய விஷயமில்லை. அதை நல்ல படியாக நம் மரபு வழுவாமல், எளிமையாகவும், இனிமையாகவும் கேட்பவருக்குப் புரியும்படியும் ஜனரஞ்சகமாகப் பரிமாறத் தெரிந்திருக்க வேண்டும். கற்ற வித்தையை மக்களிடம் அவர்கள் மனம் கவரும் வகையில் சென்று சேர்க்கும் வித்தை தெரிந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பார். அதைத்தான் நான் இன்றும் பின்பற்றி வருகிறேன்" என்று கூறும் இந்தத் தமிழிசை வாணருக்கு இரண்டு மகன்கள், ஒரு பெண். மூத்தமகன் சந்தோஷ் முருகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. பொறியியல் கல்லூரியில் படிக்கும் இளையமகன் வருண் கோவிந்துக்கு இசைநாட்டம் அதிகம். சிவசிதம்பரத்தின் குருநாதர் வி. கிருஷ்ணமூர்த்தியிடம் இசை பயில்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்கல்லூரியில் 'டெக்னோ மியூசிக்' படிக்கிறார். தாத்தா, தந்தை வழியில் நாடகங்களில் அகத்தியராக நடிக்கிறார். பொறியியல் கல்லூரியில் படிக்கும் பெண் வைஷ்ணவி, பத்மா சுப்ரமணியத்தின் நாட்டியப் பள்ளியில் நாட்டியம் பயின்றவர். மூவருமே பள்ளியில் படிக்கும்போதே தேரழுந்தூர் கமலாவிடம் இசை பயின்றவர்கள். "தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை" என்று கூறும் சிவசிதம்பரம் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் கூறி விடைபெற்றோம்.
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
குரு கிருபை ஒருமுறை காஞ்சி பரமாச்சாரியார் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தார். அப்போது நான் சிறுவன். என் தந்தையாரோடு அவரை தரிசிக்கச் சென்றிருந்தேன். அப்போது பெரியவர் என்னைப்பற்றித்தந்தையிடம் விசாரித்தார். உடனே என் தந்தை, "இவன் கான்வெண்டில் படித்துக் கொண்டிருக்கிறான். இசை கற்றுக்கொண்டு வருகிறான்" என்று சொன்னார். உடனே பெரியவர் என்னிடம் என்ன படித்துக் கொண்டிருக்கிறாய், இசையில் என்னவெல்லாம் கற்றுக் கொண்டிருக்கிறாய், என்ன பாடுவாய் என்றெல்லாம் கேட்டார். நானும் பதில் சொன்னேன். பின் என் தந்தை பாடும்போது நானும் கூடப் பாடினேன். பெரியவரும் அதைக் கேட்டு ஆசிர்வதித்தார். ஒரு பாலகனாக இருக்கும்போதே எனக்கு "குரு கிருபை" கிடைத்துவிட்டது. அது போலவே எனக்கு குருவும் அமைந்தார். என் குரு வி. கிருஷ்ணமூர்த்தி மிகச்சிறந்த வித்வான். நல்ல ஞானஸ்தர். சென்னை அரசுக் கல்லூரியில் பிரின்ஸிபாலாக இருந்தவர். அப்படி ஒரு குரு அமைந்தது என் பாக்கியம்.
*****
தமிழ்ப்பற்று எங்கள் குடும்பமே தமிழ்ப் பற்றுள்ள குடும்பம். எனது பெரியப்பா (எனது அப்பாவின் சகலை) பேராசிரியர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் ஒரு மிகச் சிறந்த கவிஞர். எனது தாய்வழி, தந்தைவழி உறவினர்களும் தமிழ்ப் பற்றாளர்கள்தாம். அப்பாவின் அண்ணன் சீர்காழி சொக்கலிங்கம் தீவிர தமிழ்ப்பற்றாளர். என் தந்தைக்கு நாங்கள் (நான், என் சகோதரி ஞானவள்ளி) டாக்டர் ஆகிச் சாதிக்க வேண்டும் என்ற ஆசை மிக அதிகம். நான் ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் படித்தாலும் வீட்டில் ஆங்கில வார்த்தைகளைப் பேச அப்பா அனுமதிக்க மாட்டார். தமிழ்தான் பேச வேண்டும். மம்மி, டாடிக்கெல்லாம் அங்கே வேலையே இல்லை. நமது மரபு, பண்பாடு, கலாசாரம் பற்றிய சிந்தனைகள் எங்களுக்கு சிறு வயதிலேயே தந்தை போதித்து விட்டார். நாங்களும் அந்த வேரை உணர்ந்து அந்த மரபின்படி வழுவாது வளர்ந்தோம். யார் மீதும் கோபப்படாமல், யாரையும் குறை சொல்லாமல், எந்த விதக் கெட்ட பழக்கங்களும் இல்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் என் தந்தை. அவர் மகனாகிய நானும் அவர் காட்டிய வழியில் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற திருப்தியோடு வாழ்ந்து வருகிறேன். எம்.எல்.வி, எம்.எஸ். அம்மா, டி.கே. பட்டம்மாள், வாரியார் சுவாமிகள் என்று பல ஜாம்பவான்களின் ஆசி கிடைத்தது மற்றொரு பாக்யம். வாரியாருடன் ஸ்விஸ் நாட்டிற்கும் பயணம் செய்திருக்கிறேன். எனது கச்சேரியை அவர் மிகவும் ரசித்துக் கேட்டு என்னை வாழ்த்தியிருக்கிறார். என்னை ஒரு பேரன் போன்று அவர் கருதினார். அதுபோல தருமபுர ஆதீனம் அவர்கள் என்னை ஆஸ்தான வித்வானாக நியமித்துப் பெருமைப்படுத்தினார். காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வானாக இருந்திருக்கிறேன். இன்றளவும் காஞ்சி காமாட்சி ஆலயத்தில் முதல்நாள் முதல் இசை நிகழ்ச்சித் தொண்டினைச் செய்து வருகிறேன். குன்றக்குடி ஆதீனத்தின் இசையரசாக என் தந்தை இருந்தார். அவர் இருந்த காலத்திலேயே குன்றக்குடி அடிகளார் என்னை இசை இளவரசுப் பட்டம் சூட்டி கௌரவப்படுத்தினார்.
*****
தரையில் அமர்ந்த எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்த முடிவு செய்ததற்காக க.ராஜாராம் ஒரு பாராட்டு விழா எடுத்தார். அமைச்சர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் என பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நான் மேடையில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தேன். எனக்கு வயலின் வாசித்துக் கொண்டிருந்தது இசைமேதை டி.ஆர். பாப்பா. அப்போது எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். மேடையின் கீழே அறிஞர் பெருமக்கள் அமர்ந்திருந்தனர். எனக்குப் பின்புறம் அமைச்சர்கள் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தனர். மேடைக்கு வந்த எம்.ஜி.ஆர். சுற்றுமுற்றும் பார்த்தார். ஒரு கலைஞன் கீழே அமர்ந்து பாடிக் கொண்டிருக்கும்போது நாம் நாற்காலியில் அமர்வதா என்று நினைத்தாரோ என்னவோ அப்படியே எனக்கு அருகில் கீழே உட்கார்ந்துவிட்டார். அவர் அப்படி அமர்ந்த உடனேயே பதைபதைத்த அமைச்சர்களும் அவருக்கு அருகே வந்து உட்கார்ந்து கொண்டுவிட்டனர். நான் அப்போது சிறு பையன் வேறு. எனக்கு ஒரே பதட்டமாகி விட்டது. எம்.ஜி.ஆர். என்னைத் தொடர்ந்து பாடச் சொன்னார். உடனே நான் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய "பண்டு தமிழ்ச் சங்கத்தை உண்டு பண்ணிய மன்னன்" என்ற பாடலை எம்.ஜி.ஆரை. மையமாக வைத்து அவரைப் பார்த்துக் கொண்டே பாடினேன். சபையில் பயங்கர அப்ளாஸ். உடனே எம்.ஜி.ஆர். "என்னைப் பார்க்காமல் ஒரு பாட்டுப் பாடு" என்றார். உடனே நான், அறிஞர் அண்ணாவைப் பற்றி என் தந்தை பாடியிருந்த ஒரு பாடலைப் பாடினேன். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. மறுநாள் என்னை வீட்டுக்கு வரவழைத்து கௌரவித்தார். அதேபோல் மற்றொருமுறை தனது பிறந்த நாளின் போதும் என்னை தனது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தார். நான் அப்போது மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். இருந்தாலும் என்னிடம் இருந்த கலையை மதித்து அவர் கௌரவித்தது அவரது உயர்ந்த மனப்பாங்கையும் அன்பையும் காட்டியது.
*****
பாபாவும் நானும் நான் கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை ஸ்ரீ சத்ய சாயி பகவான் சென்னைக்கு வந்திருந்தார். சுசீலாம்மாவும் அஞ்சலி தேவியும் அவரைக் காண எங்களை அழைத்திருந்தனர். நானும் என் தந்தையும் பாபாவைச் சென்று தரிசித்தோம். தந்தை பாட, நான் உடன் பாடினேன். நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை உள்ளே கூப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார் பாபா. ஒரு நண்பரைப் போல் உரையாடினார். அப்போது எனக்குக் கல்யாணம் ஆகவில்லை. என் தந்தையிடம், "உங்க பிள்ளை நல்ல பிள்ளை. ஊரு நல்ல ஊரு. சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க அவனுக்கு" என்றார். நான் அப்போதுதான் தேர்வு எழுதிவிட்டு வந்திருந்தேன். அது அவருக்குத் தெரியாது. ஆனால் என் தந்தையிடம், " எக்ஸாம் எழுதிட்டு வந்திருக்கு. ஆனா ஒரு பேப்பர்ல மட்டும் கொஞ்சம் பயப்படும். எல்லாம் பாஸ் ஆய்டும்" என்று சொல்லி ஆசிர்வதித்தார். நானும் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றேன்.
நான் பின்னணிப் பாடகனாக வளர்ந்த பிறகு எனக்கு ஒரு ஆசை இருந்தது, பகவானின் முன்னிலையில் புட்டபர்த்தியில் சென்று பாட வேண்டும் என்று. நிச்சயம் பாபாவே அதற்கு நமக்கு வழி செய்வார் என்று எண்ணிப் பிராத்தனை செய்து வந்தேன். ஒருநாள் அகில இந்தியா சாயி சமிதித் தலைவர் என்னை அழைத்தார். 'Water For Life' என்ற பெயரில் தமிழக மக்கள் நன்மை பெறுவதற்காக கிருஷ்ணா நதி நீர் திட்டத்திற்கு பாபா உதவியிருக்கிறார். அதற்கான விழாவுக்காகத் தமிழகம் வர இருக்கிறார். நேரு ஸ்டேடியத்தில் விழா நடக்க இருக்கிறது. நீங்கள் அப்போது சுவாமி பேரில் ஒரு பாடல் பாட வேண்டும். அது நிகழ்ச்சிக்குப் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும்" என்றார். கலைஞர் அப்போது முதல்வராக இருந்தார். நாத்திகர்கள் கலந்து கொள்கிற ஆத்திக விழா அது. எனவே பாடலும், பொருளும் நயம்பட இருக்க வேண்டும் என்று கவனம் எடுத்துக் கொண்டேன். கவிஞர் நெமிலி எழில்மணி ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார். "ஏழையின் சிறப்பில் இறைவனைக் காண்பது எங்கள் சுவாமியின் கருத்தாகும்" என்று தொடங்கிய அந்தப் பாடலைப் பாடினேன்.
பார்வையாளர்கள் கைதட்டி அதை ரசித்து வரவேற்றனர். உடன் சுவாமியும் என்னைப் பார்த்துச் சிரித்தவாறே கையை உயர்த்தி அனுக்ரகம் செய்தார். புட்டபர்த்தியில் சென்று பாடமுடியவில்லையே என்ற குறைப்பட்ட எனக்கு சுவாமியே நேரில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாடியது மிகப் பெரிய பாக்கியம். இன்றும் ஆன்ம ஜோதியாய் உலவிக் கொண்டிருக்கும் பாபாவின் அருளால் விரைவில் புட்டபர்த்தியிலும் பாடுவேன். |