அத்தியாயம்-9: ஏதுக்கித்தனை பகை?
------------------------------------------------- "ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு எந்தன் மேல் ஐயா?" - பதம் -------------------------------------------------
ஆறாந் திருவிழாவன்று இரவு, குளத்துமலை இந்திரலோகம்போல் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் ஒரே ஜனத்திரள். சுற்றுப்புறம் எட்டு வட்டகைகளிலிருந்தும் கிராமிய ஜனங்கள், குண்டுக் கிழவர்கள், குமுறும் குமரிகள், குருத்துகள், குழந்தைகள் அடங்கலாக, சோற்று மூட்டைகளைக் கட்டிக்கொண்டு முதல்நாள் பொழுது சாயலுக்கே குளத்துமலைக்கு வந்துவிட்டார்கள்.
கூட்டத்தில் கிராமியக் கட்டழகிகளின் கொண்டையில் இருந்து வரும் வேப்பெண்ணெய் வாசம், நித்திய கல்யாணிகளின் தேகத்திலிருந்து வீசும் ஒருவிதமான நெடி, நாரீமணிகளின் கூந்தலிலிருந்து படரும் ஜாதி மல்லிகையின் மதுர மணம், சவ்வாது மைனர்களின் அத்தர் செண்டு புனுகின் வாசனைக் கலவைகள், பலாச்சுளைக் கடைகளின் மூக்கைத் துளைக்கும் கமகமவென்ற வாசனை, கோயில் மடைப்பள்ளியிலிருந்து திரண்டு வரும் புளியோதரையின் மணம் எல்லாம் பஞ்சாமிர்தமாகக் கலந்து காற்றில் பரிமளித்துக் கொண்டிருந்தன.
திருவிழாக் கூட்டம் பல பகுதிகளாகப் பிரிந்து பலவித வேடிக்கை விளையாட்டுக்களில் ஆழ்ந்திருந்தது.
"மாசிப் பொழுதினிலும் வட்ட மிட்ட ராவிலும் தேசமெங்கும் ராவாத்தா திருநாள் விளங்குகின்றாள் போடுங்கடி பெண்டுகாள் பொன்னாத் திருக்குலவை"
என்று பாடியவாறு கிராம யுவதிகள் வட்டமாகக் கை கோர்த்துக் கொண்டு நின்று 'மொளக் கொட்டி'னார்கள் ஒருபுறம். குனிந்து நிமிரும் அந்தக் குமரிகளின்கொள்ளையழகைக் கூர்ந்து பார்ப்பதற்கென்றே கூடியிருந்த சந்தனப் பொட்டழகர்களின் கூட்டம் அதிகம்!
'சீதைப் பொண்ணு வந்திச்சு சீரான சீதைப் பொண்ணு வந்திச்சு'
என்று கிராமிய வாலிபர்களின் ஒயிலாட்டம் அதிர்ந்தது ஒருபுறம்!
"வருது வருது பொய்க்குதிரை முன்னாலே, நிக்காதே, பாய்ஞ்சிடும்!"
என்று பொய்க்கால் குதிரை ஊரணி வீதியெங்கும் தூள் பறக்கச் செய்து கொண்டிருந்தது ஒருபுறம். கோனாபட்டுக் காளியானின் கரண வேடிக்கைகள் ஒருபுறம். "வைடா ராஜா, வை. ஆடு. ராணி மேலே வை", "போடு மூணத்தொன்று! அட, சை!" என்ற சப்தங்கள் கிளம்பும் சூதாட்டங்கள் ஒருபுறம்!
இவ்வாறு குளத்துமலைக் கோயில் ஊரணியின் நாலு புறமும் ஜே ஜே என்றிருக்கும்போது, கோயிலின் உற்சவ மண்டபத்தில் திருப்பூர் நாதமுனியின் பாண்டுக் கச்சேரி முடிந்து, இளவட்டங்கள் நிறைந்திருக்கும் சதஸில், தஞ்சாவூர் சுசீலாவின் சதுர்க் கச்சேரியின் 'தாதைதா' என்ற சப்த ஆரவாரங்கள் வானை முட்டிக் கொண்டிருந்தன.
இரவு பத்துமணி ஆயிற்று. சதுர்க் கச்சேரி முடிந்தது. அவுட்வாணங்கள் பறிந்தன. தீபாராதனை முடிந்தது. ஸ்வாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் புறப்பாடாயிற்று. ஆனாலும் அங்கிருந்த கூட்டம் கொஞ்சம் கூடக் கலையவில்லை. அன்று இரவு பத்துமணிக்கு மேல் பிரசித்தி பெற்ற நாயனம் சௌந்தர வடிவும், சமஸ்தான வித்வான் பொன்னையனும் போட்டி நாயனம் வாசிக்கப் போகிறார்களல்லவா? இத்தகைய வினோதமான போட்டி நாயனத்தை வேறு எந்த ஜன்மத்தில் பார்க்கக் கொடுத்து வைக்க முடியும்? பாமரர்கள் முதல் பரம ரசிகர்கள், சங்கீத விற்பன்னர்கள் வரை போட்டி நாயனத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். சதுர் முடிந்ததும் கோயில் வீட்டில் பள்ளி கொள்ளப் போகும் சதுர்க்காரிகள் கூட அன்றிரவு வீட்டிற்குப் போகவில்லை. சௌந்தரவடிவு என்ன புடவை கட்டிக்கொண்டு வருவாள் என்பதைப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
பிரகாரக் கோயில் ஊரணியின் வலதுபுற மூலையின் ஒருபுறம் வட்டமாகக் கும்பல் கூடி நின்றது. தவுல் சகிதம் வேனுப் பிள்ளையும், ஒத்து ஊதுகிறவனும் தாளம் போடும் கை மணிக்காரனும் பின் தொடர, முதலில் பொன்னையன் நாதஸ்வரத்தைத் தூக்கிக் கொண்டு கூட்டத்தின் மத்தியில் நுழைந்தான்.
கொஞ்சநேரங் கழித்து தவுலைத் தூக்கிக் கொண்டு மோகனம் பின் தொடர சௌந்தரவடிவு வந்தாள்.
கூட்டத்தில் ஒரு கணம் ஜே ஜே என்ற ஆரவராம் எழுந்து அடங்கியது.
சௌந்தரவடிவும் பொன்னையனும் பக்கத்தில் பக்கத்தில் நாயனத்தை ஏந்தி நின்றார்கள். அவர்களிருவரும் கண்கொள்ளா ஜோடி என்று வியந்தனர் கூட்டத்தில் சிலர்.
பொன்னையன் சௌந்தரவடிவைத் திரும்பிப் பார்க்கவும் மனங்கூசினான். அவன் முகத்தில் அருவெறுப்பும் ஆக்ரோஷமும் நிறைந்திருந்தது. ஆனால் தன் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டு, சபை ரமிப்பதற்காகத் தன் உதட்டில் புன்னகை தவழும்படி வைத்துக் கொண்டிருந்தான்.
சௌந்தரவடிவு கடைக்கண்ணால் பொன்னையனைப் பார்த்துப் பார்த்து உள்ளம் ஏங்கிக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஆர்வமும் துடிப்பும் பிடிவாதமும் படர்ந்திருந்தது. ஒவ்வொரு சமயம் என்னவோ உள்ளூர ஒருவித ஆனந்தம் பொங்கி வழிந்தது. அவளுடைய சிவந்த உதட்டில் புன்னகையின் இன்ப நுரைகளாகப் படர்ந்து சென்றன.
சௌந்தரவடிவு கண்களை மூடி தன் மனத்திற்குள் தன் தந்தை மருதக்கண்ணுப் பிள்ளையை மனமாரத் துதித்து, நாதஸ்வரத்தை எடுத்துத் தொட்டு நமஸ்கரித்து வாசிக்க ஆரம்பித்தாள். அவள் மெய் சிலிர்த்தது.
பொன்னையனோ அருகில் நின்ற தோடி சிவக்கண்ணுப் பிள்ளையை தன் குரு, பெரியவர் என்ற முறையில் கைக் கூப்பிக் கும்பிட்டு நாயனத்தை எடுத்தான்.
கும்பலில் நிசப்தம் நிலவியது. எல்லோர் கண்களும் அந்த ஜோடிகள் மீது ஆணி வைத்து அறைந்தது போல் லயித்திருந்தன. யாருடைய வாசிப்புச் சிறந்தது என்று தீர்மானிப்பதற்காக நியமிக்கப்பட்ட பஞ்சாயத்தார் முன்வரிசையில் இருந்தார்கள்.
போட்டி நாயனம் ஆரம்பமாயிற்று.
சௌந்தரவடிவும் பொன்னையனும் நாட்டைக் குறிஞ்சிராகத்தை எடுத்து ஊதி கச்சேரியைத் துவக்கினார்கள். சௌந்தரவடிவிற்கு மோகனம் தவுல் வாசித்தாள். பொன்னையனுக்கு குளத்துமலையில் கை தேர்ந்த வேணுப்பிள்ளை தவுல் வாசித்தார். போட்டி மனப்பான்மை மோகனத்துக்கும் வேணுப்பிள்ளைக்கும் இருந்தது! ஒவ்வொரு ராகத்தையும் சௌந்தரவடிவும் பொன்னையனும் தனித்தனியாக வாசிப்பதென்றும், அவர்களது வாசிப்பில் எது சிறந்தது என்பதை சபையில் எழும் கரகோஷங்களிலிருந்தும் சங்கீத விற்பன்னர்களின் ஏக மனதான அபிப்பிராயத்திலிருந்தும் பஞ்சாயத்தார் முடிவு செய்தவதென்று ஏற்பாடு.
அதனையொட்டி நாட்டைக் குறிஞ்சி முடிந்ததும், சௌந்தரவடிவு, 'யாரோ இவர் யாரோ?' என்ற அருணாசலக் கவிராயரின் பாடலுக்குரிய பைரவி ராகத்தை வாசிக்க எடுத்த யெடுப்பே சுற்றி நின்ற ரசிகர்களின் மனதைக் கவர்ந்து விட்டது. அவள் பைரவி ராகத்தை வாசித்த பாணி, அந்தப் பாடலுக்கே ஒரு தனிப் புது மெருகு கொடுத்தாற்போலிருந்தது.
"சௌந்தரவடிவைப் பார், கெட்டிக்காரி! முதலில் 'இவர் யாரோ?' என்ற பாட்டை வாசிக்கிறாள். 'என்னைப் போல் வித்தை தெரிஞ்ச பெண் பிள்ளையிடம் போட்டி போட வந்த சூரன் யார்?' என்று கேட்பது போலில்லை அந்தப் பாட்டு?" என்று கூட்டத்தில் ஓர் ஆசாமி, அருகில் நின்றவன் காதைக் குடைந்தான். ஆனால் சௌந்தரவடிவு தன் நெஞ்சம் கவர்ந்த இவர் யாரோ என்றுதான் நாசூக்காய்க் கேட்கிறாள் என்பது அந்த ஆசாமிக்கு எப்படித் தெரியும்?
சௌந்தரவடிவு பைரவியை அபூர்வமாக வாசித்து முடித்ததும் கூடி நின்ற ஜனங்களிடையே வானம் அதிர்வது போல் கடகடவென்ற கரகோஷம் எழுந்தது. "சௌந்தரவடிவைப் போல பைரவி ராகத்தைச் சம்பூர்ணமாக வாசிக்க யாரால் முடியும்?" என்றார்கள் ரசிகர்கள்.
பிறகு பொன்னையன் பைரவி ராகத்தை அலச ஆரம்பித்தான். அங்கு கூடியிருந்த ஈ, எறும்பு கூட பொன்னையன் வாசித்து முடியும் வரை மந்திரத்தால் கட்டுண்டது போல் மெய்மறந்து நின்றன. கரகோஷம் வானைப் பிளந்தது. "பொன்னையனின் பைரவி ராக ஆலாபனையும் சௌந்தரவடிவின் வாசிப்புக்குக் குறைந்ததல்ல" என்றார்கள் அதே ரசிகர்கள்!
பிறகு சௌந்தரவடிவு, 'காதலாகினேன் கண்ணம்மா' என்ற சுத்தானந்த பாரதியாரின் கீர்த்தனையை பந்துவராளி ராக சொரூபமாக வாசித்தாள். அந்தக் கீதத்தின் இன்னிசை அலைகளில் வானமும் வையகமும் ஒன்றாக உருகி ஓடியது. கேட்டு நின்ற பெண்கள் எல்லோரும் தங்களைக் கண்ணம்மாவாகவும், தொண்டு கிழவர்கள் முதல் ஆண்கள் எல்லோரும் தங்களைக் கண்ணனாகவும் பாவித்து உள்ளமும் உணர்வும் மயங்கி நின்றார்கள்.
சௌந்தரவடிவு பந்துவராளியை முடித்ததும், பொன்னையன் அதே பாடலை வாசிக்கத் துவங்கினான். அவன் வாசிப்பில் உருகியோடிய உணர்ச்சிமயமான நாத வெள்ளம், சௌந்தரவடிவைக் கண்ணம்மாவாகப் பாவித்துப் பொன்னையன் காதல் கனிந்த தன் உள்ளத்தின் உயிரையே அந்த இன்னிசையலைகளின் மூலம் பிழிந்து கொடுப்பது போலிருந்தது. கேட்டு நின்ற அனைவரும் கிறுகிறுத்துப் போனார்கள்.
பிறகு பாபநாசம் சிவனின் 'காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே!' என்ற யதுகுல காம்போதி ராகத்தில் சௌந்தரவடிவு சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தாள். அப்போது அந்தக் காலைத்துக்கி நின்றாடும் தெய்வமே சௌந்தரவடிவின் நாயனத்தின் முன் திருக்கூத்தாடுவது போலிருந்தது. பொன்னையன் அதே கீர்த்தனைக்குரிய ராகத்தை வாசிக்கும் போது ஜனங்களுக்கு அந்த மெய்மறந்த பரவச நிலை இருந்தது.
அன்று குளத்துமலை ஊத்து மலையாகி விட்டது!
இவ்வாறு பொன்னையனும் சௌந்தரவடிவும் இன்னிசை நாதங்களைப் பிழிந்து கொட்டி நாயனம் வாசிக்கும் போது மெய்மறந்து நிற்கும் ஜனங்கள், பக்க மேளம் மோகனமும் வேணுப் பிள்ளையும் தவுல் அடிக்கும்போதும், தனி ஆவர்த்தனமாக தவுலை வெளுத்து வாங்கும்போதும், தவுல் அதிர்வதைவிட, மோகனத்தின் உடல் அதிகமாக அதிர்வதைக் கண்டு சிரிப்பார்கள்.
ஸ்வாமி ஊரணியைப் பிரகாரம் வரும்போது ஊரணியின் ஒவ்வொரு மூலையிலும் நின்று பொன்னையனும் சௌந்தரவடிவும் சபையினர் விரும்பிய முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள், தியாகராஜர், ஸ்வாதித் திருநாள் கீர்த்தனைகள், சில்லறை உருப்படிகள் அனைத்தையும், கேட்ட சகல ராகங்களையும் மணிக்கணக்காக மாறி மாறி வாசித்தார்கள். அவர்கள் வாசிக்க வாசிக்க கேட்ட ஜனங்கள் மெய்மறந்து கரகோஷங்கள் செய்தார்களே தவிர, ஒருவருடைய வாசிப்பிலும் சலிப்புறவோ யாருடைய வாசிப்பு சிறந்தது என்று தீர்மானிக்கவோ அவர்களால் முடியவில்லை. பஞ்சாயத்தாருக்கும் சங்கீத விற்பன்னர்களுக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டது.
சௌந்தரவடிவு, பொன்னையன் வாசிப்புகளின் ஏற்ற இறக்கங்களை எடைபோட இந்தப் புவியிலே எந்தத் தராசுமிராதோ என்று ஏங்கினார்கள். இந்த நிலையில் பொழுது விடியும் தருணமாயிற்று. சூரியன் புறப்படுவதற்கு முன்னால் ஸ்வாமி சேர்க்கை சேர்ந்துவிட வேண்டுமென்று அன்று ஆறாந்திருவிழா மண்டகப்படி செய்த திருநாவுக்கரசுச் செட்டியார் அவசரப்படுத்தினார்.
பிறகு போட்டி நாயனத்தை மறுபடி பத்தாம் திருவிழா பூப்பல்லாக்கு அன்று இரவு வைத்துக் கொள்வதென்று கோயில் காரியஸ்தர்கள் தீர்மானித்தார்கள்.
நாயனக்காரர்களைச் சுற்றி நின்ற கூட்டம் மனமில்லாமல் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது.
தோடி சிவக்கண்ணுப் பிள்ளை மெல்ல பொன்னையன் காதருகில் வந்து, "தம்பீ, இன்னைக்கிப் போகட்டும். சத்தாவர்ணத்தன்னைக்கி நீ மறந்திடாம மகுடி வாசி. சௌந்தரம் உன்னைத் தொட்டு வாசிக்கிறாளா பார்ப்போம்!" என்றார். "மகுடி" என்றதும் அருகில் நின்ற சௌந்தரவடிவின் முகம் பாம்பை மிதித்தது போல் உயிரற்றுப் போயிற்று.
சௌந்தரவடிவு என்ன காரணத்தாலோ இதுவரை கச்சேரிகளில் மகுடி வாசித்ததில்லை. பூப்பல்லாக்கன்று போட்டி நாயனத்தின் போது பொன்னையன் மகுடி வாசித்தால், சௌந்தர வடிவு மகுடி வாசிக்க மாட்டாள். அப்படி வாசித்தாலும் அவளுடைய மகுடி வாசிப்பு சோபிக்காது என்று சிவக்கண்ணுப் பிள்ளை எண்ணினார்.
அரு.ராமநாதன் |