2011 ஜூலை 3, 4 தேதிகளில் நியூ ஜெர்ஸி, ட்ரெண்டன் நகரில் பேட்ரியட்ஸ் தியேடர், போர் நினைவரங்கத்தில் நகரத்தார் கூட்டமைப்பின் விழா நடைபெற்றது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என்று பல நாடுகளிலிருந்தும் 1200 பேர் வந்திருந்தனர். முழுநாள் விழா இயல், இசை, நாடகம் என்று அரங்கம் நிரம்பிய கூட்டத்துடன் களைகட்டி இருந்தது. வட்டார மொழியுடன் கூடிய நகரத்தார் பழக்க வழக்கங்களை முன்வைத்த நகைச்சுவை நாடகங்கள், பல குழுக்கள் வழங்கிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் சுவை கூட்டின.
தொடக்க விழாவில் அண்ணாமலை பெரிய கருப்பன் அவர்கள் தலைமையுரை ஆற்ற, தொழிலதிபர் வி. வீரப்பன் வாழ்த்துரை வழங்கினார். இந்தியாவில் தொடங்கியுள்ள NRI Parent Association குறித்து சிங்காரம் பேசினார்கள். லக்ஸ் மெய்யப்பன் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். இளைய தலைமுறையினர் கப்பலில் சிறிய சுற்றுலா சென்று வந்தனர். யோகா, கராத்தே வகுப்புகள் நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கான மாயாஜாலக் காட்சியும் இடம் பெற்றது. சமூகப் பணிகளுக்காக அழகப்பா அழகப்பன் சிறப்பிக்கப்பட்டார்.
உமையாள் முத்து, மிச்சிகன் |