ஆகஸ்ட் 6, 2011 அன்று மேக்னா முரளியின் பரதநாட்டிய அரங்கேற்றம் போலிங்ப்ரூக் பள்ளி அரங்கில் நடந்தேறியது. மேக்னா, நாட்யா கலைப்பள்ளியின் குரு ஹேமா ராஜகோபாலனின் மாணவி. புஷ்பாஞ்சலியுடன் ஆரம்பித்த மேக்னா தன் நளினத்தை நடையிலும் பக்தியை முகபாவத்திலும் காட்டினார். அடுத்ததாகச் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை 'நடமாடும் பதனடி மலரே துணை' என்ற பாட்டுக்கு மேக்னா முகபாவத் திறமையைக் காட்டி அசத்தினார். தொடர்ந்து 'நாட்யா'வின் நடன ஆசிரியர் கிருத்திகா ராஜகோபாலனின் முன்னுரையுடன் சுசீலா ராமஸ்வாமியின் பக்திப் பரவசம் மிகுந்த 'சகியே இந்த ஜாலம் என்னடி' என்ற திருமால் பாட்டுக்குரிய வர்ணத்தை ஆடி குருவுக்குப் பெருமை சேர்த்தார். குருவின் நட்டுவாங்கத்துடன் சளைக்காமல் சுமார் 45 நிமிடங்கள் ஆடி, பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
அடுத்து 'நாச்சியார் திருமொழி'க்கு சங்கரனின் புல்லாங்குழலின் குயிலோசை, சரஸ்வதி ரங்கநாதனின் வீணை இன்னிசையோடு மேக்னா, ஆண்டாளின் ஏக்கத்தை முகபாவத்தில் காட்டிக் கரகோஷத்தைப் பெற்றார். பிறகு 'முடுகரே யசோதா' தெலுங்குப் பாடலுக்கும், கந்தனைப் பற்றிய 'அழகு தெய்வமாக வந்து' காவடிச்சிந்துவுக்கும், அன்னை பார்வதியைப் பற்றிய 'ஸ்ரீ சக்ர ராஜ' பாடலுக்கும் நடனமாடினார். இறுதியாக விஜயராகவனின் சிறப்பான மிருதங்கத்துடன், குருவின் ஜதியோடு, சலங்கை ஒத்திசைக்கத் தில்லானா ஆடி நிறைவு செய்தார். தந்தை முரளி, தாய் உஷா, அண்ணன் வெங்கட் ஆகியோர் உரையாற்றினர்.
சேஷாத்ரி, இல்லினாய் |