ஆகஸ்ட் 6, 2011 அன்று சாரடோகா மெக்கஃபி அரங்கத்தில் மௌனிகா நாராயணன், இஷானா நாராயணன் சகோதரிகளின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இவர்கள் குரு விஷால் ரமணி அவர்கள் நடத்தி வரும் ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனியின் மாணவிகளாவர்.
13 வயது மெளனிகாவும், 11 வயது இஷானாவும் குருவின் திறமையான நடன அமைப்பைச் சவாலாக ஏற்றுச் சிறப்பாக நடனமாடினர். வாசந்தி, மற்றும் கல்யாணியில் அமைந்த ராகமாலிகையான புஷ்பாஞ்சலி, கம்பீர நாட்டையில் ஊத்துக்காடு மஹாகவியின் 'ஸ்ரீவிக்னராஜம் பஜே', நிரோஷ்டா ராகத்தில் ஜதிஸ்வரம் போன்றவைகளோடு சூடுபிடித்த நிகழ்ச்சி, நாட்டக்குறிஞ்சியில் அமைந்த பாபநாசம் சிவனவர்களின் வர்ணத்தில் புதிய உயரங்களைத் தொட்டது.
நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில், மௌனிகாவும் இஷானாவும் அடாணவில் அமைந்த 'நாதுபை நீகு தயலேதா' என்னும் பதத்தில் விபீஷண சரணாகதியை பக்திரசம் தோய அபிநயித்தனர். இந்தப் பதம் இவருடைய தந்தைவழி உறவான கலைமாமணி ஸ்ரீ மன்னார்குடி சாம்பசிவ பாகவதரால் அமைக்கப்பட்டது. அடுத்து மௌனிகா அருணாசலக் கவிராயரின் 'ராமனுக்கு மன்னன்முடி' என்னும் ராமநாடகக் கீர்த்தனை பதத்துக்கு அபிநயத்தது மிகவும் நேர்த்தி. தானே கைகேயியாகவும, கூனியாகவும் மாறி ராமாயணப் பாத்திரங்களைக் கண்முன்னே நிறுத்திவிட்டார்!
டி.என். பாலாவின் மிகப் பிரபலமான 'விளையாட இது நேரமா?' என்கிற பாடலுக்கு இஷானாவின் ஆடலுக்கும், அபிநயத்தும் ஏகோபித்த கைத்தட்டல். ஊத்துக்காடு மஹாகவியின் காளிங்க நர்த்தன தில்லானா பாடிய ஸ்வேதா பிரசாதின் குரலின் கம்பீரமாக ஒலிக்க, சகோதரிகள் இருவரும் கிருஷ்ணனையும், காளிங்க நாகத்தையும், யமுனை காளிந்தி மடுவையும் கண்முன்னே நிறுத்திவிட்டார்கள். வாசுதேவன் கேசவலுவின் நட்டுவாங்கம், ஸ்வேதா பிரசாதின் பாட்டு, எம்.தனஞ்சயனின் மிருதங்கம், வீரமணியின் வயலின் எல்லாமே தக்க பக்கத்துணையாக இருந்தன. நிகழ்ச்சி பெற்றோர்கள் சீதாராமன், அன்னட் நாராயணன் நன்றி உரையோடு நிறைவுற்றது.
அசோக் சுப்ரமணியம் |