நிவேதா, ஐஷ்வர்யா, ஹரிப்ரியா நாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 7, 2011 அன்று ஹூஸ்டன் பெரி மைய அரங்கத்தில் நிவேதா சந்திரசேகர், ஐஷ்வர்யா ராவ், ஹரிப்ரியா சுந்தர் ஆகியோரின் இணைந்த பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. நாட்டியப் பெண்களின் பெற்றோர் செய்த அறிமுகத்துடன் விழா ஆரம்பமாயிற்று.

மூவரும் இணைந்து கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த கணேசர் துதிக்குப் புஷ்பாஞ்சலி செய்து அரங்கேற்றத்தைத் துவக்கினர். தொடர்ந்து ஹரிப்ரியா ராகமாலிகையில் அமைந்த சண்முக சப்தத்திற்கு, முருகனின் அவதாரக் குறும்புகளைச் சுவைபட அபிநயித்தார். மீண்டும் வந்த மூவர் கூட்டணி, லதாங்கி வர்ணத்துக்கு ஆடலரசரின் ஆனந்த நடனத்தை மேடையேற்றினார். இடைவேளைக்குப் பின், மிஷ்ர பீம்ப்ளாஸ் ராகத்தில் கிருஷ்ணனின் புல்லாங்குழல் மகிமையை விருந்தாவனி வேணுவாகப் படைத்தார் ஐஷ்வர்யா. மீண்டும் வந்த மூவர் சரஸ்வதி ராகத்தில் 'சரஸ்வதி நமோஸ்துதே' என வாணியைப் பணிந்தனர். அடுத்து வந்த நிவேதா, காம்போஜி ராகத்தில் அன்னை பராசக்தியின் ஆனந்த தாண்டவத்தை அமர்க்களமாக ஆடினார். பின்னர் வந்த பிருந்தாவன சாரங்கி தில்லானாவை நாட்டியப் பாவையர் மூவரும் இணைந்து வழங்கியபின், மங்களப் பாடலுக்கு நடனமாடி அரங்கேற்றத்தை நிறைவு செய்தனர்.

குரு ரத்னா குமாரின் உழைப்பும், தொகுத்தளித்த கல்யாணி கிரியின் உரையும் பாராட்டத் தக்கன. சிறப்பு விருந்தினராக வந்திருந்த பியர்லேண்ட் மேயர் மேதகு டாம் ரீட் தமது உரையில் இந்திய கலாசாரத்தை உயர்த்திப் பேசியதோடு, அதனை அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பின்னர் பேசிய பாபநாசம் சிவனின் பேரன் கணேஷ் ரமணி அயலக இந்தியக் குழந்தைகளின் கலாசாரப் பண்பாட்டுப் பற்றை நினைவுகூர்ந்ததோடு, ரத்னா குமார் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.

ஜெ. ரேமஷ் வாய்ப்பாட்டு, என்.கே. கேசவன் மிருதங்கம், பி. முத்துக்குமார் புல்லாங்குழல் என்று ஜமாய்த்து விட்டனர். அரங்கேற்றம் கண்ட மாணவி சிந்துஜா தேவராஜன் குரு ரத்னா குமாரின் சாதனைகளைப் பற்றிய தொகுப்புரை ஒன்றை வழங்கினார்.

கரு. மாணிக்கவாசகம்,
ஹூஸ்டன்

© TamilOnline.com